இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...
Updated on
2 min read

‘இந்தியத் தொலைக்காட்சி களில் முதல் முறையாக’ என்பதை முதல் முறையாகக் கேட்டது 90கள்வரை பிறந்த தலைமுறையினருக்குப் பசுமையாக நினைவில் இருக்கும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது குறித்த அறிவிப்பு இவ்வாறுதான் தொடங்கும். இதற்குப் போட்டியாக இன்னோர் அலைவரிசை ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று அறிவிக்கும். அனைத்து அலைவரிசைகளிலும் தீபாவளிப் பண்டிகைக்குத்தான் மிகவும் பிரபலமான திரைப்படம் ஒளிபரப்பப்படும்.

புதிய திரைப்படம் என்றால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படமாக இருக்கும். சில நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய படங்களையும் ‘புத்தம் புதிய’ என்னும் அடைமொழியுடன் ஒளிபரப்புவார்கள். ஆனாலும் ஓடிடி தளங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் தீபாவளி அன்று மாலை நேரத்தில் ஒளிபரப்பப்படும் சிறப்புத் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக் கொண் டாட்டத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தது. இந்தத் திரைப்படங்களோடு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் பெரும் மவுசு இருந்தது.

நிகழ்ச்சிகளின் டீஸர்: புதிய திரைப்படங்களை ஒளிபரப்பத் தொடங்கிய பிறகு தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் பண்டிகை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பிற சிறப்பு நிகழ்ச்சிகளும் அனைத்து வயதினரையும் ஈர்க்க வேண்டும் எனும் முனைப்புடன் திட்டமிடப்பட்டன. புத்தாடை, பட்டாசு ஆகியவற்றோடு தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புக் காகக் காத்திருக்கத் தொடங்கினோம். ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி அலை வரிசையில் தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புக்குச் சில நாள்களுக்கு முன் அது குறித்த டீஸர் போன்ற அறிவிப்பு வெளியிடப்படும். தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

பளபளப்பை இழக்காத பட்டிமன்றங்கள்: பொதுவாக அனைத்து அலைவரிசை களிலுமே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை கர்னாடக இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். அடுத்து, ‘அருள் வாக்கு’. இந்து மதத் துறவிகள் அல்லது ஆன்மிகவாதிகள் தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவத்தை விளக்குவார்கள். காலை 9-10 மணி வாக்கில் ஒளிபரப்பப்படும் பட்டிமன்றங்கள் இன்றுவரை நடுத்தர வயதினரைப் பெரிதும் ஈர்க்கும் நிகழ்ச்சி. குறிப்பாகச் சமையலறையில் இருக்கும் அம்மாக்கள் பட்டிமன்றம் ஒளிபரப்பாகும்போது மட்டும், அவ்வப்போது வந்து தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள்.

தமிழ் அறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராகத் தோன்றத் தொடங்கிய பிறகுதான் உலகத் தமிழர்களிடையே மிகப் பிரபலமான ஆளுமை ஆனார். கு.ஞானசம்பந்தன், திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோரும் பட்டிமன்ற நடுவர்களாகவே பரவலான மக்களைச் சென்றடைந்தார்கள். ராஜா, பாரதிபாஸ்கர், மோகன சுந்தரம், முத்துநிலவன், மதுக்கூர் ராமலிங்கம். நந்தலாலா எனப் பிற துறைகளில் இயங்கும் பலர் பட்டிமன்றப் பேச்சாளர்களாகவே உலகத் தமிழர்களுக்குப் பரிச்சய மானார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல மாற்றங்கள் வந்துவிட்டாலும், பட்டிமன்றங்களுக்கான மவுசு குறையவே இல்லை. ஆனால், அவற்றின் உள்ளடக்கம் பெரும்பாலும் பெண்கள் குறித்த பிற்போக்குச் சிந்தனைகளையும் கடந்த காலம் குறித்த போலிப் பெருமிதங்களையும் திணிப்பவை யாகவே தொடர்கிறது.

நட்சத்திரங்களின் பேட்டிகள்: சமூக ஊடகங்களின் வருகைக்கு முன்பு பண்டிகை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் திரைப்படங்களையும் திரைப்பட ஆளுமை களையும் மையப்படுத்தியவை யாகவே இருக்கும். இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். இடையிடையே திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகள் ஒளிபரப்பாகும். சமூக ஊடகங்கள் இல்லாத காலத்தில் திரை நட்சத்திரங்கள் பலரும் தொலைக்காட்சியில் தோன்றி, அரை மணி நேரப் பேட்டி கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். இன்று ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்துவிட்டது.

புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது அவ்வளவு ஆச்சரியத்துக்குரிய விஷயமாக இல்லை. ஆனாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது அந்தத் திரைப்படங்களை ஏற்கெனவே பார்த்துவிட்டவர்களும் பார்க்காதவர்களும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து பார்க்கவே செய்கிறார்கள். பிற நிகழ்ச்சிகளையும் பார்க்கிறார்கள். மொத்தத்தில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தீபாவளி சிறப்புத் திரைப்படமும் பிற நிகழ்ச்சிகளும் தீபாவளியின் தவிர்க்க முடியாத அங்கமாகவே தொடர்கின்றன.

- gopalakrishnan.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in