அப்பாவால் முடியாதது ஒரு கதையால் முடிந்தது

அப்பாவால் முடியாதது ஒரு கதையால் முடிந்தது
Updated on
2 min read

சிறு வயதில் தீபாவளியைப் போல் வசீகரித்த ஒரு பண்டிகை வேறு இல்லை. அப்போதெல்லாம் ஆண்டுக்கு இரண்டு முறையோ மூன்று முறையோதான் புதுத் துணி கிடைக்கும் என்ப தாலும் விதவிதமான தின்பண்டங்களைத் தின்று தீர்க்க முடியும் என்பதாலும் புது காலண்டர் வந்த நாளில் இருந்தே தீபாவளியை எதிர்பார்த்துக் காத்திருப்போம். தீபாவளியை வெறுப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது, அது பட்டாசு சத்தம். நான் ஒரு பொட்டு வெடியைக்கூட என் வாழ்நாளில் வெடித்ததில்லை. தெருக்களில் நடக்கும்போது, வெடியைக் கண்டாலே கைகள் தாமாகக் காதுகளைப் பொத்திக் கொள்ளும். நான் பயந்து கொண்டே நடப்பதைப் பார்த்து, சிலர் பரிதாபப்பட்டு வெடிக்காமல் காத்திருப்பார்கள்.

சிலரோ வெடிப்பதுபோல் பாவனை மட்டும் காட்டுவார்கள். இன்னும் சிலரோ வெடித்து, நான் பயந்து அலறுவதைப் பார்த்து ரசிப்பார்கள். ஒரு சின்ன குழந்தைகூட இப்படி என்னைப் பயமுறுத்தி யிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்று மாகக் கேட்கும் பட்டாசு சத்தமும் போனஸ் குறித்த பேச்சுகளும் தீபாவளி நெருங்கி விட்டதைக் கட்டியம்கூறும். போனஸ் வந்ததும் அந்த வார இறுதியில் அம்மாவும் அப்பாவும் சென்று புதுத் துணிகளை எடுத்து வருவார்கள். உடனே தைக்கக் கொடுத்து விடுவோம். எப்படியும் தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தைத்த துணி வந்துவிடும்.

தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன் திடீர் மருதாணிக் கடைகள் முளைக்கும். ஏழைப் பாட்டிகள் மருதாணி இலைகளைக் கூறுகட்டி விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். வாங்கி வந்து அரைத்து, இடக்கையில் அவரவர் விருப்பப்படி மருதாணியை வைத்துக்கொள்வோம். வலக்கையில் மட்டும் அம்மா வைத்துவிடுவார். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்ட பிறகுதான் ஆங்காங்கே அரிக்கும், கொசு கடிக்கும். தாகம் எடுக்கும். ஒவ்வொன்றுக்கும் அம்மாவின் உதவியை நாடிக்கொண்டே இருப்போம். வீட்டு வேலைகளை முடித்து, மருதாணியை வைத்து ஓய்ந்த அம்மா, ஒவ்வொருவருக்கும் சொறிந்துவிடுவதையும் தண்ணீர் எடுத்து வாயில் ஊற்றுவதையும் அலுக்காமல் செய்வார்.

தீபாவளிக்கு மூன்று நாள்களுக்கு முன்பு இருந்தே பலகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அம்மாவுக்குத் தலைச்சுற்றல், கழுத்துவலி இருந்ததால் சிறு வயதிலிருந்தே பட்சணங்கள் செய்யும்போது உதவி செய்ய ஆரம்பித்துவிட்டோம். முறுக்குகளை ஒருவர் பிழிய, ஒருவர் எண்ணெயில் போட, இன்னொருவர் எடுக்க, வேறொருவர் அடுக்க என்று வேலைகளைப் பிரித்துச் செய்வோம். வேலை மட்டுமா செய்வோம்? கிரைண்டர் போல வாயும் சேர்ந்து அரைத்துக்கொண்டே யிருக்கும். வட்டமாக, அழகாக இருக்கும் முறுக்குகள் எல்லாம் மற்ற வர்களுக்குக் கொடுக்க எடுத்து வைத்துவிடுவார் அம்மா. இப்படிக் குறைந்தது மூன்று இனிப்புகளும் மூன்று காரங்களும் செய்துவிடுவோம்.

தீபாவளிக்கு முதல் நாள் சித்தப்பா குடும்பத்தினர் வந்துவிடுவார்கள். வேலை, அரட்டை என்று இரவு படுக்க பன்னிரண்டு மணியாகி விடும். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து வடை, வெள்ளை அப்பம், ரவை பணியாரம், சீயம், இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, கறிக்குழம்பு ஆகியவற்றைச் செய்து முடிக்க ஏழு மணியாகி விடும். புதுத் துணி போட்டுக் கொண்டு பட்டாசு வெடிக்கப் போவார்கள். எண்ணெயில் வடை மாவைப் போடும்போதுதான் சரியாக அணுகுண்டு வெடிக்கும். இந்த வெடிக்கு ஏதாவது தடை வராதா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, ‘துளிர்’ இதழில் ‘பிரேமாவின் கதை’ வெளிவந்தது.

பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிரேமாவின் துயர் மிகுந்த கதையைப் படித்த என் தங்கைகள் அன்றோடு பட்டாசு வெடிப்பதை நிறுத்திக்கொண்டனர். சுற்றுச்சூழல் பாதிப்பு, ஒலி மாசு, பணம் விரயம் என்று எவ்வளவோ காரணங் களைச் சொல்லிக்கொண்டிருந்த அப்பாவால் முடியாததை, அந்தக் கதை செய்துவிட்டது! தீபாவளி அன்று உணவு வகைகள் தயாரானதும் அந்த வருடம் யார் தீபாவளி கொண்டாடவில்லையோ அவர் வீட்டுக்குப் பட்சணங்கள் முதலில் போகும். அடுத்து மற்றவர்களுக்கு. தோழர்கள் சாப்பிட வருவார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போடுவதும் பட்சணங்களைப் பொட்டலம் கட்டிக்கொடுப்பதுமாக வேலை இருந்துகொண்டே இருக்கும்.

- sujatha.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in