

பள்ளி விடுமுறையின்போது இரண்டு முறை சென்னைக்கு வந்திருந்தாலும் கிராமத்துக்கும் நகரத்துக்கும் வித்தியாசம் தெரியாத காலம் அது. வேலை நிமித்தம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்ததுதான் என் முதல் அதிகாரப்பூர்வ நகரப் பயணம். எங்கள் கிராமத்து வீட்டை விட்டு அதிகபட்சம் 40 கி.மீக்கு மேல் பயணம் செய்திராத எனக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததே பெரும் சாதனைதான்.
சென்னை மாநகரத்தைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகளைக் கேட்டிருந் ததால் யாரைக் கண்டாலும் பயம், எதைப் பார்த்தாலும் பதற்றம். ஆட்டோக்காரர் ஏமாற்றிவிடுவாரோ, பழக்காரம்மா அதிகமாகப் பணம் வாங்கிவிடுவாரோ என்று கலக்கமாக இருந்தது. அன்றைக்கு நேர்முகத் தேர்வு முடிந்து, சாப்பிடுவதற்காக என் மாமாவுடன் உணவகத்துக்குச் சென்ற போது அங்கே அலைமோதிய கூட்டத்தைப் பார்த்து வியந்தேன். “இந்த ஊர்ல யாரும் வீட்ல சமைக்கவே மாட்டாங்களா?” என்று நான் கேட்டதும் மாமா சிரித்துவிட்டார். இங்கே பலரும் வேலைக்குச் செல்வதால், காலையில் சமைக்க நேரம் இருக்காது என்று விளக்கினார்.
எட்டுத்திக்கும் மனிதர்கள்
எந்தப் பக்கம் திரும்பினாலும் மூச்சடைக்க வைக்கும் கூட்டம். 'மானுட சமுத்திரம் நானென்று கூவ' முடியாத அளவுக்கு மக்கள் நெருக்கடி. இவ்வளவு மனிதர்களை இந்த மாநகரம் எப்படித் தாங்கிக்கொள்கிறது என்று பிரமிப்பாகவே இருந்தது. இடப்பக்கம் பெண்களும் வலப்பக்கம் ஆண்களும் (இருபாலரும் அமரலாம் என்பதைப் பிறகுதான் அறிந்துகொண்டேன்) அமரும் இருக்கைகள் கொண்ட பேருந்துகள் எனக்குப் புதிது. அவற்றில் எள்கூடப் போட முடியாத அளவுக்குக் கூட்டம் திக்குமுக்காடவைத்தது. எத்தனை சாலைகள், அவற்றில் எவ்வளவு சிக்னல்கள். சிக்னல் காத்திருப்பு என்பது காதலுக்கான காத்திருப்பைப் போன்றதல்ல என்பதை சென்னை வெயில் உணர்த்தியது.
ஆற்றின் மீது மட்டுமே பாலம் கட்டுவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்த என்னைச் சாலையின் மீது கட்டப்பட்ட பெரிய பெரிய மேம்பாலங்கள் வாய்பிளக்க வைத்தன. புறநகரைச் சென்னையோடு இணைக்கும் ரயில்கள் அன்றைக்கு மற்றுமொரு பேரதிசயமாகத் தெரிந்தன. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மீட்டர்கேஜ் ரயில்கள் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. மீட்டர்கேஜ் ரயிலின் கடைசி ஓட்டத்தைப் பார்த்த வரலாற்றுத் தருணம் அற்புதமானது. புறநகர் ரயில்களின் பெண்கள் பெட்டிகள் ஏராளமான வாழ்க்கைக் கதைகளைச் சுமந்து செல்பவை. அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் போன்ற ஊர்களில் இருந்து சென்னை மாநகருக்கு வேலைக்கு வரும் பெண்கள் ரயிலிலேயே சாப்பிட்டு, தலைவாரி, கீரை ஆய்ந்து, காய்கறிகளை நறுக்கி எனப் பாதி வாழ்க்கையைப் பயணத்திலேயே கழித்துவிடுவதாகத் தோன்றும்.
வங்கக் கடலின் பெருமிதம்
வறண்டுபோன பாலாற்றோடு எங்கள் கிராமத்து எலப்பாங்குட்டை, புறாக்குளம் போன்றவற்றையே பெரும் நீர்ப்பரப்பாகப் பார்த்திருந்த கண்களுக்கு எல்லையில்லா சென்னைக் கடல் பெருவிருந்து. பள்ளிச் சுற்றுலாவின்போது இரவில் பார்த்த கருநிறக் கடலை மாலைப்பொழுதொன்றில் ஆற அமரப் பார்த்தபோது, சென்னையின் மொத்த கம்பீரத்தையும் அந்த வங்கக்கடல் தனக்குள் புதைத்துவைத்திருப்பதாகத் தோன்றியது. சென்னையில் வசிக்கும் அனைத்து வர்க்க மக்களையும் ஒருசேரத் தன் காலடியில் நிற்கவைத்திருக்கும் பெருமிதம் அலைகளின் ஆர்ப்பரிப்பில். இந்த மக்களும் அரசும் கடற்கரையை இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கக் கூடாதா என்கிற ஆதங்கம் இப்போதும் உண்டு.
படிய வாரிய தலையும் பின் செய்யப்பட்ட துப்பட்டாவுமாக வந்திறங்கிய எனக்கு ஆரம்பத்தில் சென்னை ஒட்டவே இல்லை. என்னைப் போலவே வெளியூர்களில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கியிருந்த பெண்களைப் பார்த்தபோது மிரட்சியாக இருந்தது. அவர்களது உடை, அலங்காரம், பழகும் தன்மை எல்லாமே கிணற்றுத் தவளையான எனக்குப் பயத்தை அளித்தன. வீடே உலகம் என்று சுருங்கிக் கிடந்ததன் விளைவு அது. அந்தப் பெண்கள் பொருளாதாரத் தற்சார்புடன் இயங்குவதால்தான், அவ்வளவு துணிவுடன் இருக்கிறார்கள் என்பது புரிந்தபோது, சென்னையையும் சென்னைப் பெண்களையும் பிடித்துப்போனது.
சென்னைக்கு வந்த முதல் நாள் இரவு ஹாஸ்டலுக்கு வழிதெரியாமல் கையில் பிளாஸ்டிக் வாளியோடும் கண்களில் கண்ணீரோடும் சாலையோரமாக நின்றுகொண்டிருந்தேன். சென்னை முழுக்க ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருந்ததால், யாரிடமும் பேசக்கூட அச்சமாக இருந்தது. “எங்கே போகணும்மா?” என்று கேட்ட ஆட்டோ ஓட்டுநரைக் கண்டதும் அச்சம் பன்மடங்கானது. திக்கித்திணறி ஹாஸ்டல் பெயரைச் சொன்னேன். “அதுக்கு ஏம்மா இந்தப் பக்கம் நிக்குற. அந்த சிக்னலை கிராஸ் பண்ணி நேரா போய் லெஃப்ட்ல திரும்பு. இனிமே இந்த சிக்னலை அடையாளமா வச்சுக்கோ” என்று சொன்ன அந்த ஆட்டோக்காரர் சென்னைவாழ் மனிதர்கள் குறித்த கட்டுக்கதைகளை சற்று கலைத்துப்போட்டார். ஏமாற்றுவது தனிப்பட்ட மனிதர்களின் குணமன்றி, நகரின் பிழையன்று. இது காலம்காலமாக வந்தாரை வாழவைத்துக்கொண்டிருக்கும் மாநகரம் அன்றோ.