

ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ நூலில், லில்லிபுட் தேசத்தின் குட்டி மனிதர்களைச் சந்தித்த அனுபவம் கொண்ட கலிவர், அடுத்த பயணத்தின்போது பல மடங்கு உயரம் கொண்ட மனிதர்கள் வாழும் ப்ராப்டிங்நாக் தேசத்தில் மாட்டிக் கொள்வார். அப்போது, லில்லிபுட் மனிதர்களின் பார்வையில் தான் ராட்சதனாகக் காட்சியளித்ததற்கு நேர் எதிராக, ப்ராப்டிங்நாக் ‘மனித மலைக’ளின் பார்வையில் ஒரு பொம்மை போல காட்சியளிப்பதாக நாணுவார். ‘லில்லிபுட் மனிதர்கள் இன்னும் சிறிய உருவம் கொண்ட மனிதர்கள் வாழும் இடத்துக்குச் சென்றால் என்ன நினைப்பார்கள்? ப்ராப்டிங்நாக் மனிதர்களே பிரமிக்கும் அளவுக்குப் பிரம்மாண்ட மனிதர்கள் வாழும் தேசமும் பூமியில் இருக்கலாம் அல்லவா?’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வார். செல்போன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய காலத்தில் சிறுநகரங்களில் வளர்ந்தவர்கள் ஏறத்தாழ கலிவர்கள்தான்.
நகரத்தின் மெல்லிய நிழல் விழுந்த, மிகச் சில வசதிகள் கொண்ட சிறுநகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது, ‘16 வயதினிலே’ கால்நடை டாக்டர் கணக்காக ஸ்டைல் காட்டுவார்கள். நெல் வயல்களைப் பார்த்துவிட்டு, “அப்படீன்னா... அரிசிங்கிறது மரத்துல காய்க்கிறது இல்லையா?” என்கிறரீதியில் அலம்பல் செய்வார்கள். நாள்கணக்கில் துவைத்திராத ஜீன்ஸை அணிந்துகொண்டு, வேட்டி கட்டிய மனிதர்களை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும்போது, எல்ஐசி கட்டிடங்களையே ஏற இறங்கப் பார்ப்பார்கள். மெரினாவில் உலவும் மனிதர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். “பீச் இன்னைக்கு லீவு நைனா” என்று சென்னைவாசிகள் செல்லப் பொய் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். புறநகர் ரயில் பயண அனுபவங்களில் பூரிப்பார்கள்.
சிறுநகரான அறந்தாங்கியில் பால்யத்தைக் கழித்த நான் சில ஆண்டுகள் டெல்லியில் வாழ்ந்தபோது, ப்ராப்டிங்நாகில் மாட்டிக்கொண்ட கலிவராகப் பல விஷயங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நாளிதழ் செய்திகளில் மட்டும் பார்த்த பிரதமர் வசிக்கும் வீட்டை, பேல்புரி சுவைத்துக்கொண்டே கடந்து செல்லலாம். நாடாளுமன்றத்துக்கோ, விஞ்ஞான் பவனுக்கோ வரும் பிரபல அரசியல் தலைவர்களைப் பக்கத்தில் இருந்து பார்க்கலாம். தேசிய விருது வாங்க வரும் நம்மூர் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் சென்றால் பால் பேதமின்றி பழகும் மாணவர்கள் தீவிர அரசியல் விவாதத்தில் ஈடுபடுவதைப் பார்க்கலாம். சாகித்ய அகாடமி நூலகத்தின் பேரமைதியில் உலகின் தலைசிறந்த அறிஞர்களின், எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க முடியும்.
பழைய டெல்லி, புது டெல்லி என இரு வேறு உலகங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கண்டு ரசிக்கலாம். முகலாய மன்னர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வரலாற்றைத் தரிசிக்கலாம். செங்கோட்டையில் முகலாயர் கால அரண்மனைச் சமையலர் தொடங்கிய ‘கரீம்’ ஹோட்டலில் கபாப் சாப்பிடலாம். நம் நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கும் ஆப்கானிய ‘நான்’களை, நடைபாதைக் கடைகளில் ஆப்கானியரே சுட்டுத் தரச் சுவைக்கலாம். ராஹத் ஃபதே அலிகானின் கவ்வாலி இசையை ரசிக்க வாய்ப்பு கிட்டும். இந்தியாவின் வெவ்வேறு நிலங்களைச் சேர்ந்த மனிதர்களுடன் பணியாற்றும்போது, தேச ஒற்றுமைப் பாடலான ‘மிலே சுர் மேரா துமாரா’வில் வரும் தமிழ்ப் பிரபலங்களுக்கு இணையாக ஒரு தன்னம்பிக்கை வரும். நம்மைவிட சற்றே வெளுப்பாக இருந்தாலும் டெல்லிக்காரர்களும் வெள்ளந்திகள்தான். டெல்லியில் முதன்முதலில் மெட்ரோ ரயில் வந்தபோது, சும்மாவாவது சுற்றிப்பார்க்க துவாரகாவுக்கோ, ஷாத்ரா வுக்கோ சென்று வந்தவர்களை எனக்குத் தெரியும்.
நகரத்தில் வாழ்ந்தாலும், இந்தியா வின் ஏதேனும் ஒரு கிராமத்திலிருந்து பயணப்பட்டவர்கள்தானே நம்மில் பெரும்பாலும். கடந்த ஒன்றரை தசாப்தங்களில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான எல்லைகளை நவீனத் தொழில்நுட்ப சாதனங்கள் பெருமளவில் கரைத்துவிட்டிருக்கின்றன. ஊரைவிட்டு ஓடுபவர்கள் புதிதாக ஒரு கிராமத்தில் சென்று ஒளிவதைக் காட்டிலும் நகரங்களுக்குச் சென்றுவிடலாம்; நம்மை யாருமே அங்கு கண்டுகொள்ள மாட்டார்கள் என ‘ரஸ்டியின் வீர தீரங்கள்’ நாவலில் ரஸ்கின் பாண்ட் எழுதியிருப்பார். நகரங்கள் தரும் சுதந்திரத்துக்கு விலை உண்டா என்ன!