

பல்லாயிரம் ஆண்டு பழமையுடைய நகரம் திருநெல்வேலி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலி என்று நாம் இன்று காணும் நகரம் உருக்கொள்ளத் தொடங்கியது. கிறித்துவ மதத்தின் வருகை இந்த நகரின் கல்வி அறிவை மேம்படுத்தியது. சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து திருநெல்வேலிக்கு கல்விக்காக வந்தவர்கள் பலருண்டு. அந்தப் பகுதியில் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்கிற விளிப் பெயரும் இந்த நகருக்கு உண்டு. சினிமா பார்க்க, துணி எடுக்க, பலசரக்கு வாங்க, பலகாரம் வாங்க எனத் திருநெல்வேலிக்குப் பெயர்ந்து திரும்பும் அந்தப் பகுதி மக்கள் இந்த நகரின் ஆதாரமாக இருக்கிறார்கள். அதை வைத்து வியாபாரம். பீடி சுற்றுவதிலிருந்து துணிக்கடை, பலகாரக் கடை என ஆயிரக்கணக்கான உதிரித் தொழிலாளர்களைக் கொண்ட மாநகரம் இது. இந்தியா உலகமமயமாக்கலுக்குள் வந்த பிறகும் தன் தொன்மையைக் கைவிடாத நகரமாக திருநெல்வேலி இருக்கிறது. அன்றாடப்பாட்டுக்குள் தங்கள் அன்றாடத்தை எளிதாக்கிக்கொண்டு தாமிரபரணி நீருடன் தங்கள் தாகத்தை நிறுத்திக் கரையேறும் எளிய மக்கள்தான் தங்கள் வாழ்க்கைக்குள் இந்த மாறாத் தன்மையை மடித்துவைத்துள்ளனர்.
கோட்டாறு நகரமாகத் தொடங்கி இன்று நாகர்கோவிலாக விரிவுகொண்ட நகருக்குப் பழமையை உரைக்கக் கலைப் பண்பாட்டு அடையாளங்கள் பலவுண்டு. தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிப் பண்பாட்டுப் பின்புலம் இந்த நகரத்தின் மற்றுமோர் சிறப்பு. பெரும்பாலும் திருவனந்தபுரத்துடன் போக்குவரத்து கொண்ட இந்த நகரம், சுதந்திரத்துக்குப் பிறகுதான் தன் தாய் நிலத்துடனான தொடர்புகளைப் புதுப்பித்தது. மேற்குத் தொடர் மலையிலிருந்து கீழிறங்கி நாகர்கோவிலைத் துளைத்துப் பாயும் பழையாறு இந்த நகரத்துக்குக் குளுமை அளிக்கிறது. இதுபோல் குளங்களையும் ஓடைகளையும் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். கடந்த பத்தாண்டுகளில் நாகர்கோவில் தன் பழமையை மாற்றிவருகிறது. குடியிருப்புப் பகுதியாக இருந்த கோட்டாறு - பார்வதிபுரம் சாலை இந்தியாவின், தமிழகத்தின் முன்னணி உணவங்களின், துணிக்கடைகளின், நொறுக்குத்தீனிகளின் சங்கிலிக் கடைகளால் திக்குமுக்காடிக்கொண்டிருக்கிறது. ஒரு பெரும் நகரத்துக்கான எந்த வருமான மார்க்கமும் இல்லாது பெரு நகரத்தைப் போன்ற விலைவாசி கொண்ட நகரம் இது. இந்த வியாபாரங்களின் தொழிலாளர்கள் இதற்கு நேர் எதிர் நிலையிலிருக்கும் புறநகர்களிலிருந்து டவுன் பஸ்களில் நகருக்கு வந்து திரும்புகிறார்கள்.