

அனிமேஷன் என்பது ஒருவகையில் நம் தொன்மக் கதைகளின் நீட்சி எனலாம். ஏற்கெனவே இருக்கும் யதார்த்த பாணி காட்சிகளுக்கும் கதாபாத்திரத் துக்கும் மாற்றாக ஒரு ஃபேன்டசியை (மிகை யதார்த்தம்) உருவாக்க அனிமேஷன் ஒரு வெளியைத் திறந்து வைக்கிறது. கோயில் தூண் யாளியும் கொடி மரத்தைத் தாங்கும் ஆமையும் இதற்கான உதாரணங்கள்.
நம் தொன்மத்திலுள்ள மந்திரக் கிளிகளையும் சூனியக் கிழவிகளையும் சினிமாவுக்குள் துலங்கச் செய்ய இந்த அனிமேஷன் நுட்பத்தால் முடியும். குழந்தைகளுக்கும் வண்ணமயமான கற்பனைக் கதைகளையும் இதன் வழி உருவாக்க முடியும். இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு வெளிவந்துள்ள படம் ‘கண்டிட்டுண்டு’ (கண்டிருக்கிறேன்). மலையாள அனிமேஷன் படமான இது கடந்த ஆண்டுக்கான சிறந்த அனிமேஷன் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.
அதிதி கிருஷ்ணதாஸ் உருவாக்கிய இந்தப் படம் கிராமத்திலிருக்கும் ஒரு பெரியவரின் வேடிக்கையான மூடநம்பிக்கைகளைப் பதிவுசெய்கிறது; அது களங்கமின்மையின் அழகுடன் வெளிப்பட்டுள்ளது. பெரியவர் சில பொய்களைப் பழக்கிக் குட்டிப் பிசாசுபோல் உண்மையாக்கி வைத்திருக்கிறார். அதைக் கபடமில்லாமல் பகிர்கிறார்.
குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் இறந்து அலங்காக (எறும்புத்தின்னி) மறுபிறவி எடுப்பார்கள் என்பது கேரளத்தின் தொன்ம நம்பிக்கை. இந்த அலங்குகள் மாம்பழப் பிரியர்களாம். “அலங்கு அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு எழுந்து மாம்பழம் பொறுக்கக் கிளம்பும்” என இந்தப் படத்தின் நாயகனான பெரியவர் அலங்கு குறித்துச் சுவாரசியமாகப் பகிரும்போது, அந்த பிரேமுக்குள் பெரியவரும் அவர் சொல்வதற்கு ஏற்றபடி அலங்கும் காட்டப்படும். அலங்கு ஓர் உயர்திணை உயிரினம்போல் 2.30 மணியைப் பார்ப்பதற்காகக் கைக்கடிகாரம் கட்டிக்கொண்டு தூங்குகிறது; 2.30 மணிக்குச் சரியாக எழுந்து புறப்படுகிறது.
விடியும்வரை அங்கே விழுந்து கிடக்கும் மாம்பழங்களை ‘ஒண்ணு’ ‘ஒண்ணு’ எனச் சொன்னபடி அலங்குகள் பொறுக்கிக் கூட்டிவைக்கும். அவற்றுக்கு ஒண்ணுக்குப் பிறகு எண்ணத் தெரியாது என்பதும் ஒரு தொன்மம். இதையும் இந்தப் படத்தில் பெரியவர் சொல்கிறார்: “அலங்கு ‘தொன்னிப் பத்து’, ‘தொன்னிப் பத்து’ எனத் தனக்குள் மாம்பழம் எண்ணுவதாகச் சொல்லிக்கொண்டு போவதை நான் கேட்டிருக்கிறேன்.”
கேரளத்தின் மற்றுமொரு தொன்ம உயிரியான ‘ஆனை மருத’னைக் குறித்தும் இந்தப் படத்தில் பெரியவர் சொல்கிறார். அது ஆமையைப் போல் உயரமும் யானையைப் போல் உருவமும் ஒரு காலில் சலங்கையும் கட்டிக்கொண்டு போகும் விநோத ஜீவி. பேய், பிசாசு, நீர்ப்பேய் எனப் பலவிதமான அமானுஷ்ய உருவங்களைத் தான் கண்டிருப்பதாகவும், அவை எப்படி இருந்தன என்றும், அவற்றைப் போல் பாவனை செய்தும் காண்பிக்கிறார் பெரியவர். அப்போது அனிமேஷனில் அவையும் அவர் அருகில் வந்து தாங்கள் எப்படி இருக்கின்றோம் என்பதைப் பெரியவரின் விவரிப்புக்கு ஏற்பக் காண்பிக்கின்றன. இவற்றை அனிமேஷனாகப் படம் சித்தரித்துள்ளது.
ஊரெங்கும் குறுக்கும் நெடுக்குமாக மின் கம்பங்கள் வழி மின்சாரம் பாயத் தொடங்கிய பிறகு பிசாசுகள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாகவும் பெரியவர் மிக உணர்ச்சிகரமாக இதில் சொல்கிறார். இம்மாதிரியான தொன்மங்கள் இன்று மூடநம்பிக்கைகளாகப் பார்க்கப்பட்டாலும், நம் கற்பனை வளம் இந்தப் பின்புலத்தில்தான் தொடங்கியது எனலாம். அறிவியலும் கற்பனையின் விளைவுதானே? அந்த அறிவியலின் கண்டுபிடிப்பான அனிமேஷன் உதவியால் தொன்மத்துக்கு உயிர் கொடுத்து, அதைச் சுவாரசியமான கலைப் படைப்பாக மாற்ற முடியும் என்பதை ‘கண்டிட்டுண்டு’ குழுவினர் இதன் வழி நிரூபித்துள்ளனர்.
அனிமேஷன் படத்தைக் காண: https://shorturl.at/bdkS1