சர்வதேச அனிமேஷன் நாள்: அக்டோபர் 28 | மனம் கவர்ந்த அனிமேஷன் கதாபாத்திரங்கள்

சர்வதேச அனிமேஷன் நாள்: அக்டோபர் 28 | மனம் கவர்ந்த அனிமேஷன் கதாபாத்திரங்கள்
Updated on
4 min read

மனித மனம் எதை எண்ணினாலும் அனிமேஷனால் அதனை விளக்கிட முடியும் என்கிற வால்ட் டிஸ்னியின் கருதுகோள் இன்று நம்ப முடியாத அளவில் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. அனிமேஷன் கார்ட்டூன்கள் குழந்தைகளுக்கானவை என்கிற எல்லையிலிருந்து விடுபட்டு பெரியவர்களின் பக்கம் என்றைக்கோ நகர்ந்துவிட்டன. ஸ்மார்ட் போன், தொலைக் காட்சி, திரையரங்கம் என அனைத்திலும் அனிமேஷன் கதாபாத்திரங்களே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் உள்ளோம். அந்த வகையில் மனம் கவர்ந்த சில அனிமேஷன் கதாபாத்திரங்கள்:

மிக்கி மவுஸ்: டிஸ்னியின் அடையாளமான மிக்கி மவுஸ் 1928ஆம் ஆண்டு அறிமுகமானது. அனிமேஷன் கதாபாத்திரங்களில் காலத்தால் பழமையானது என்றாலும் இன்றும் அனைவரது நினைவில் சட்டெனத் தோன்றுவது மிக்கி மவுஸ்தான். துறுதுறுவென திரையில் தோன்றி மிக்கி செய்யும் சின்னசின்ன சாகசங்கள்தான் அந்தத் தொடரின் பிளஸ். மின்னி, டொனால்ட், டெய்சி, கூஃபி, புளூட்டோ எனத் தனது நண்பர்களுடன் 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'யாக உலா வரும் மிக்கி நமக்குக் காட்டிய உலகம் கருணையும் அன்பும் நிறைந்தது.

ராபன்ஸல்: ஜெர்மனி நாட்டுப்புறக் கதைகளில் பிரபலமானது ராபன்ஸல். தனது உயரத்தைவிட மூன்று மடங்கு நீளமான பொன்னிற முடியை உடைய இளவரசி சிறுவயதில் பெற்றோரிடமிருந்து கடத்தப்பட்டு சூனியக்காரியால் காட்டுக்குள் வளர்க்கப்படுகிறாள். எதிர்பாராமல் சந்திக்கும் இளைஞனால் ராபன்ஸலின் வாழ்க்கையில் நிகழப் போகும் அடுத்தடுத்த தருணங்கள் காதலும் நகைச்சுவையும் நிறைந்தவை. ராபன்ஸல் கதையை அடிப் படையாக வைத்து இது வரை மூன்று திரைப் படங்கள் வெளிவந்துள்ளன.

மோனா: 2016இல் திரைக்கு வந்த ‘மோனா’, அனிமேஷன் உலகில் நிலவிவந்த நிறவெறியை உடைத்த படங்களில் ஒன்று. கதையில் வரும் மோனா பாலினேசியத் தீவைச் சேர்ந்த பெண். தீவைக் காப்பாற்ற மோனா தனது நண்பர்களுடன் செல்லும் பயணம் சாகசம் நிறைந்தது. சூழ்நிலைகள் எவ்வாறு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் தீர்மானிக்கின்றன என்பதைக் கோலூன்றிச் சொல்லும் மோனாவை ‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ' என்றே ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

தி சிம்ப்சன்ஸ்: சமீபத்தில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக் குள்ளானது நினைவிருக்கலாம். அந்தத் தருணத்தில் நீர்மூழ்கி கப்பல் விபத்தை அன்றே கணித்த சிம்ப்சன்ஸ் என்று சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்திருந்தார்கள். இப்படி நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் செல்லும்போது ஏற்படும் விபத்து குறித்துப் பல வருடங்களுக்கு முன்னரே சிம்ப்சன்ஸ் தொடரில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு நம்மைச் சிந்திக்க வைத்து விவாதத்தைத் தூண்டும் கதாபாத்திரமான சிம்ப்சன்ஸுக்கு, அமெரிக்காவில் அதிக நாள்கள் ஒளிப்பரப்பான அனிமேஷன் தொடர் என்கிற கூடுதல் பெருமையும் உண்டு.

குங் ஃபூ பாண்டா: குங் ஃபூ பாண்டாவைக் காட்டினால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் ஏராளம். குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற குங் ஃபூ பாண்டா தொடர், டிராகன் போர்வீரனாக மாற விரும்பும் பாண்டா கரடியைப் பற்றியது. குழந்தைகள் மத்தியில் நான்தான் சூப்பர் ஸ்டார் என வலம் வரும் குங் ஃபூ பாண்டா இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள் ளது. இதன் நான்காவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

டாம் & ஜெர்ரி: ‘எலிக்கும் - பூனைக்கும் சண்டை ஊரே கொண்டாடுது...’ வில்லியம் ஹன்னா - ஜோசப் பார்பெராவால் உருவாக்கப்பட்ட டாம் - ஜெர்ரி என்னும் அனிமேஷன், கார்ட்டூன்களில் முன்னிலை வகிப்பதற்கு அதன் நகைச்சுவையான திரைக்கதைக்கு முக்கிய பங்கிருக்கிறது. வீட்டுப் பூனைக்கும் - எலிக்கும் இடையே நடக்கும் போட்டா போட்டியே கதை என்றாலும், ஆங்காங்கே டாமுக்கும் - ஜெர்ரிக்கும் இடையே வெளிப்படும் நட்பு நம்மையும் ‘தோஸ்து படா தோஸ்து’ எனக் கண்கலங்கச் செய்துவிடும்.

பாலு: ‘ஜங்கிள் புக்’ தொடரில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் கள்வரை அனைவரையும் கவர்ந்தவை. அதிலும் கரடியாக வரும் பாலுவின் கதாபாத்திரத்தை பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 'தோழா தோழா தோள் கொடு தோழா'வாக கதை முழுவதும் உலாவரும் பாலு, பிறர் துயர்களைக் காது கொடுத்து கேட்பவன். வாழ்க்கையில் துவண்டுவிடாமல் இருக்க நம்பிக்கை தரும் கதைகளைக் கூறித் தேற்றுபவன். மொத்தத்தில் பாலு அன்பால் உங்களை ஆக்கிரமிப்பவன்.

நீமோ: பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்காமல் ஆபத்துகளில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களா நீங்கள். ஆம் என்றால் நீமோவும் உங்களை போன்றவன்தான். ‘ஃபைண்டிங் நீமோ’ படத்தில் நீமோவின் முகப் பாவனைகள், அதன் வழிகாட்டியாக வரும் டோரி என அனைத்துக் கதாபாத்திரங்களும் சுவாரசியம் கூடியவை. பரந்து விரிந்த கடலில் நீமோ நீந்திச் செல்லும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும். ‘ஒவ்வொரு அலையின் பின்னாலும் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே' என உணர்வுகளை அள்ளித் தெளிக்கும் நீமோ உண்மையில் ஒரு ஹீரோ!

பாப்பய்: எதிரியிடம் சண்டையிடுவதற்கு முன்னர் கீரையை லபக்கென்று முழுங்கி பலத்துடன் நிற்கும் பாப்பயை ரசிக்காதவர்கள் கிடையாது. பாப்பய் பார்த்த பிறகு அதிகளவில் கீரையை உணவில் சேர்த்துக் கொண்ட சிறுவர்களின் தலைமுறையும் இங்கு உண்டு. எல்சி கிறிஸ்லரால் உருவாக்கப்பட்ட பாப்பய் 1929ஆம் ஆண்டு முதலில் கார்ட்டூனாக உருவாகி, பின்னாளில் அனிமேஷன் அவதாரம் எடுத்தது. அனிமேஷன் துறையை விரும்பும் மாணவர்களுக்கு பாப்பய் கதாபாத்திர வடிவமைப்பு நல்ல படிப்பினையைத் தரக்கூடியது. பாப்பய் கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமானதோ அதே அளவு பிரபலமானதுதான் அதன் பாடலும்: ‘பாப்பய் தி செய்லர் மேன்... பாப்.. பாப்..!’

எல்சா: ‘ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே' என்று காலம் காலமாக அழகை வைத்தே பெண்களை மதிப்பிட்ட டிஸ்னி படங்களிலிருந்து விலகிய கதாபாத்திரங்களுள் எல்சாவும் ஒருத்தி. ஃபோர்சன் படத்தில் எல்சா சுதந்திரமானவள், வலுவானவள், மாயாஜாலங்கள் நிறைந்தவள். தனது அரசாங்கத்தைக் காயப்படுத்த நினைக்கும் அனைவருக்கும் பெரும் சவாலாக எதிர்த்து நிற்கும் துணிச்சல், மக்கள் மீது காட்டும் அன்பு என எல்லா இடங்களிலும் ஆளுமை செலுத்தும் எல்சா கொண்டாட்டத்துக்கு உரியவள்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in