உலக உணவு நாள்: அக்டோபர் 16 | மனதுக்கும் நிறைவளிக்க வேண்டாமா?

உலக உணவு நாள்: அக்டோபர் 16 | மனதுக்கும் நிறைவளிக்க வேண்டாமா?
Updated on
1 min read

ஒரு காலத்தில் வசதியானவர் களுக்கு மட்டுமே கிடைத்துவந்த உணவு வகைகள் இன்று சாதாரண உணவகங்களிலும் கிடைக்கின்றன. குளிர்சாதன வசதி, குஷன் இருக்கைகள், சுவர்களில் வண்ணமயமான அலங்காரம் என உணவகங்களுக்குச் சென்று உணவு அருந்துவது சொகுசான அனுபவமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வசதிகள் எல்லாம் வெளிப் பார்வைக்கு மட்டுமே. பிரம்மாண்டமாகவும் பளபளப்பாகவும் இருக்கும் பல உணவகங்களில் அடிப்படையான விஷயங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி.

முதலாவது விடுமுறை நாள்களில் உணவகங்களுக்குச் செல்பவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருப்பவர்களுக்குப் போதுமான இருக்கைகள் போடப்படுவதில்லை. சில இடங்களில் காத்திருப்பவர்களை படிக்கட்டு களில் உட்கார வைக்கும் அவலமும் நடக்கிறது.

ஒரு வழியாக இடம் கிடைத்து உள்ளே சென்று அமர்ந்தால், உணவு மேஜையில் தண்ணீர் இருக்காது. ஊழியர்களிடம் இரண்டு மூன்று முறை கேட்ட பிறகுதான் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கும். சுடுநீர் கேட்டால் நாக்கு பொசுங்கிவிடும் சூட்டில் கொண்டுவந்து வைப்பார்கள்.

எவ்வளவு பெரிய உணவகம் என்றாலும் ஒரே ஒரு கழிப்பறைதான் இருக்கும். சில உணவகங்களில் ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று என்று அதிகபட்சம் இரண்டு கழிப்பறைகள் இருக்கும். சில உணவகங்களில் மாடிப்படி ஏறிச் சென்று மோசமான பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். நூறுக்கு மேற்பட்டோர் கூடும் இடத்தில் ஒன்றிரண்டு கழிப்பறைகள் மட்டுமே இருப்பது எப்படிச் சரி?

முன்பு நட்சத்திர உணவகங்களில் மட்டுமே பஃபே உணவு முறை இருந்தது. இன்று அதற்கென்றே உணவகங்கள் அதிகரித்துவிட்டன. ஆயிரம் ரூபாய்க்குள் செலவழித்தால் பல உணவு வகைகளைச் சுவைத்துவிடலாம். ஆனால், பல உணவகங்களில் பஃபே உணவு முறையில் வைக்கப்படும் ரொட்டி, பிரியாணி போன்ற முதன்மை உணவு வகைகளின் தரம் மிகவும் சுமாரானதாக இருக்கும். அதே உணவைத் தனியாக ஆர்டர் செய்தால் ஒப்பீட்டளவில் நல்ல தரத்தில் கிடைக்கும் பஃபே வசதி கொண்ட உணவகங்களில் வார இறுதி, விடுமுறை நாள்களில் விலை அதிகமாகவும் வார நாள்களில் விலை குறைவாகவும் இருக்கும்.

உணவகங்கள் சமையலையும் உணவு வகைகளையும் ஜனநாயகப்படுத்தி யுள்ளன. உணவகங்களில் சாப்பிடுவது சமையலறைப் பணிகளிலிருந்து பெண் களுக்குத் தற்காலிகமாகவாவது விடுதலை அளிக்கிறது. எனவே, உணவகங்கள் பெருகுவதும் உணவகங்களில் சாப்பிடு பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் வரவேற்கத்தக்கவைதான். ஆனால், ஒரு வளமான உணவகக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க மேலே சொல்லப்பட்டது போன்ற பிரச்சினைகளைக் களைவதும் அவசியம். உணவகங்கள் வயிற்றை நிரப்புவதோடு மனதுக்கும் நிறைவளிக்க வேண்டுமில்லையா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in