

கைக்கு எட்டிய பொருள்களை வைத்து உணவுக்கு உயிரூட்டுவதில் என் அம்மாவுக்கு நிகர் அவருடைய அம்மா மட்டுமே. உணவு குறித்த கதைகளை அம்மா சொல்லச் சொல்ல அவற்றை ருசித்த உணர்வு ஏற்படும். அவர் தன் சிறு வயதில் சாப்பிட்டதாகச் சொல்லும் சில உணவுப் பண்டங்களை, நான் பார்த்ததுகூட இல்லை.
அம்மா வீட்டில் ஜனக்கட்டு அதிகம். காய்கறிகளை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். கழனிக் காட்டில் விளைபவைதான் அடுப்பில் வேகும். கழனியில் விளையும் ‘பிச்சக்காய்’ என்று ஒரு வகைக் காயை உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவார்களாம். சட்டி நிறைய இருக்கும் அந்தக் காய்தான் அந்நாளில் அவர்களின் பசியைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.
கைகொடுக்கும் சோளம்
எங்கள் பூர்விகக் கிராமத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் மிக எளிமையான சமையல்தான். இன்றுபோல் அன்று குழம்புக்கு வெங்காயம், தக்காளியை எண்ணெய் ஊற்றி வதக்க மாட்டார்கள். குழம்புக்குத் தேவையான அனைத்தையும் ஒன்றாகக் கூட்டிவைத்துவிட்டுக் கடைசியில் தாளிப்புக் கரண்டியில் துளி எண்ணெய்யைக் காட்டி வடகமோ கடுகோ தாளித்துக் கொட்டுவார்கள்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் இரவு மட்டுமே நெல்லுச்சோறு. பகலில் சோளக்கூழ் மட்டுதான். கேழ்வரகுக்கூழும் சில நேரம் உண்டு. பச்சைச் சோளத்தை (மக்காச்சோளம் அல்ல. வெள்ளைச் சோளம்) உரலில் இட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கூழ் காய்ச்சுவார்கள். பச்சைச் சோளம் இல்லாத நாள்களில் சோள மாவு கைகொடுக்கும். பிஞ்சு சோளத்தை வேகவைத்து அதனுடன் வெல்லத்தைக் கலந்து சாப்பிடுவதே கிராமத்து ‘சாட்' உணவு.
பருவத்துக்கு ஏற்ப உணவு முறையும் மாறும். பனம்பழங்கள் மணக்கிற கோடைக்காலத்தில் பனஞ்சக்கையை அவித்துத் தருவார்கள். பனங்கிழங்கும் உண்டு. தை மாதப் பிறப்புக்கு முன்னதாக தானியங்கள் விளைந்து நிற்கும். அப்போது வேர்க்கடலை, காராமணி, பச்சைப்பயறு, மொச்சை போன்றவற்றை அவித்து முறத்தில் கொட்டிவிடுவார்கள். வயிறு முட்ட சாப்பிடலாம்.
ஈசலும் குப்பைக் கீரையும்
மழை பெய்தால் வறுத்த வேர்க்கடலை உண்டு. வறுபட்ட வேர்க்கடலையின் தோலை லேசாக உடைத்து கம்மல் போல் காதில் மாட்டிக்கொண்டு கடலையைச் சாப்பிடுவோம். வேர்க்கடலை இல்லாத நாள்களில் சோளப்பொரிதான் ஒரே மார்க்கம். என் அம்மாவழி ஆயாவின் உபயத்தால் ஆண்டுக்கு ஒரு முறை ஈசல் கிடைத்துவிடும். ஈசலோடு வேர்க்கடலை, சோளம், துவரை, அரிசி, காராமணி போன்றவற்றை வறுத்துச் சேர்த்து உப்பு, காரம் போட்டுக் கலந்து வைத்திருப்பார்கள்.
ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் ஈசல் என்பது பூச்சி என்று தெரிந்தது. மழைக்காலத்தில் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மின் கம்பத்தின் கீழே பூச்சிகள் குவிய, அவற்றை அம்மாவும் அப்பாவும் அன்னக்கூடை முழுக்க அள்ளிச் சேர்த்தனர். மறுநாள் காலை இறக்கை யெல்லாம் உதிர்ந்து பூச்சியின் உடல் மட்டும் இருந்தது. அதை வெயிலில் காயவைத்துப் புடைத்து எடுத்த அம்மா, அதுதான் ஈசல் என்றார். அன்றைக்குப் பயத்தில் சாப்பிடாமல் விட்ட ஈசலை இன்று எங்கு தேடியும் காணவில்லை.
இன்றுபோல் ஞெகிழிக் குப்பையும் வேதி உரங்களும் இல்லாத அந்நாளில் குப்பை மேட்டைச் சுற்றி விதவிதமான கீரைகள் மலர்ந்திருக்கும். ஒன்றிரண்டு தூறல் போட்டாலே போதும். பச்சைப் பசேலென விளைந்திருக்கும் கீரைகளைப் பறித்துவந்து புளி போட்டுக் கடைந்துவிடுவார்கள். அவற்றுக்கெனத் தனிப் பெயர் கிடையாது. மொத்தமாக ‘குப்பைக் கீரை’ என்பார்கள். சேக்கிழாரின் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் இடம்பெற்ற பாடலில் மழைக்கால இரவொன்றில் சிவனுக்கு அமுது படைத்த இளையான்குடி மாறனார் பற்றிய கதை வரும். அதில், ‘குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவி...’ என்னும் வரியைப் படிக்கும்போதெல்லாம் ‘குப்பைக் கீரை’தான் நினைவுக்கு வரும்.
மழைநாளில் வீட்டுத் தோட்டத்தில் முட்டை முட்டையாகக் காளான் பூத்திருக்கும். அவற்றில் சமைக்க உகந்த காளானைப் பறித்துக் குழம்பு வைத்தால் கறிக்குழம்பு நாணும். சிவப்புப் பசலையின் செவ்வரியோடிய இலைகளைப் பறித்து வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டுக் கடைந்தால் சோளக் களி தொண்டைக்குள் வழுக்கிக்கொண்டு இறங்கும். பசலைக்கீரையில் இருந்து எழும் மண் மணமே அதன் சிறப்பம்சம். பச்சை வேர்க்கடலையில் கத்தரிக்காய், கருவாடு போட்டுக் கெட்டியாக வைக்கும் குழம்பைக் களி, சோறு ஆகிய இரண்டுடனும் சாப்பிடலாம். கால மாற்றத்தில் இந்த எளிய உணவு வகைகள் எல்லாம் வெகுதொலைவு சென்றுவிட்டன. ஆனால், பெயரைச் சொன்னதுமே நினைவுக்குள் மணக்கிற உணவு வகைகள், ஏதோவொரு வகையில் நம்மோடு பயணித்தபடி இருக்கின்றன.