

‘பதநீர் பொங்கல்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதைச் சாப்பிடுவதற்காகவே கோடை விடுமுறையில் சித்தி வீட்டுக்குச் செல்வோம். ஒரு பங்கு பச்சரிசி, நாலு பங்கு பதநீர் சேர்த்து மண்பானையில் கொதிக்கவிட்டு, முக்கால் பதம் அரிசி வெந்து கெட்டியாகும்போது, நறுக்கிய தேங்காய், பொரித்த எள் சேர்த்து இறக்கினால், பதநீர் பொங்கல் வாசம் ஊரைக் கூட்டும்! பிசுபிசுப்பாக, மென்று விழுங்கக்கூடியதாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருக்கும்! நெய், முந்திரி, ஏலக்காய், வெல்லம் எதுவும் இதற்குத் தேவையில்லை!
l சொதி
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ‘சொதி’ இல் லாமல் தென் தமிழகக் கல் யாணங்களே கிடையாது. ஆனால், இன்றோ அது ‘மாப்பிள்ளை சொதி’ என்கிற பெயரில் திருநெல்வேலியின் சிறப்பு உணவாகச் சுருங்கிவிட்டது! அசைவ உணவுக்கு ஈடுகட்டும் விதத்தில் புது மாப்பிள்ளைக்கு விருந்து வைப்பவர்கள் ‘சொதி’ செய்வார்கள். தேங்காயைத் துருவி, இரண்டு பால் எடுத்து, இரண்டாவது பாலில் கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், சின்ன வெங்காயத்தை வேகவைத்து, தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலை தாளித்து, குழைவாக வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, முதல் தேங்காய்ப்பாலைக் கலந்து, துளி எலுமிச்சைச் சாறு விட்டால் அட்டகாசமான சொதி தயார்.
l களறிக் கறி
காயல்பட்டினம் ‘களறி கறி’யில் சாப்பிடும் விதம் மிகவும் வித்தியாசமானது. ஆட்டுக்கறியில் செய்த ஸ்பெஷல் குழம்பு, கத்தரிக்காய் மாங்காய் பருப்புக் கறி ஆகியவற்றைச் சிறு கிண்ணங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய தாம்பாளத்தில் சாதத்தைக் கொட்டி, கிண்ணங்களை அதில் வைத்துவிட வேண்டும். தாம்பாளத்தைச் சுற்றிலும் 2, 3 பேர் அமர்ந்து சாப்பிடு வதுதான் இதன் சிறப்பு!
l சுழியம்
சுழியம், சுவியம், சுய்யம் என்று இன்னும் பல பெயர்களில் இரண்டு விதமாக இந்த இனிப்புப் பலகாரம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் செய்யப்படுகின்றன. பச்சரிசியுடன் சிறிது உளுந்து சேர்ந்து அரைத்து, கடலைப்பருப்பு அல்லது பாசிப்பயறு, வெல்லம், தேங்காய் சேர்த்த பூரணத்தை உருட்டி, மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். சுவையில் அசரடிக்கும் இந்தச் சுவியம் 12 மணி நேரம்தான் தாங்கும். மைதாமாவில் இதே பூரணத்தை வைத்து, எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் சுழியனை 2, 3 நாள்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
l தட்டுவடை
சமீபத்தில் உருவாகியிருக்கும் ‘ஆரோக்கிய அக்கறைகாரர்’ களைச் சமாளிக்க யாரோ கண்டு பிடித்ததுதான் ‘தட்டுவடை செட்’. கேரட், பீட்ரூட், வெங்காயம், சாட் மசாலா, புதினா, காரச் சட்டினிகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து, எண்ணெயில் பொரித்த இரண்டு தட்டுவடைகளுக்கு இடையில் வைத்துச் சாப்பிட்டால் சுவை பிரமாதம்!
l அசோகா அல்வா
அல்வாவைப் போல் கடின உழைப் பைக் கோராத, அல்வாவைவிட மென்மையான இனிப்புதான் திருவையாறு ‘அசோகா’. பாசிப்பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை, நெய் அல்லது எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் அசோகாவை ஒன்றரை மணி நேரத்துக்குள் செய்து முடித்துவிடலாம். செய்த நேரத்தைவிட குறைவான நேரத்தில் அசோகா காலியாவது உறுதி.
l கடப்பா
சாம்பார் பாதி, குருமா பாதி இரண்டும் சேர்ந்த விநோத கலவையில் உருவான ‘கும்பகோணம் கடப்பா’, சுவையால் ஸ்பெஷல் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது! உருளைக்கிழங்கு, பட்டாணி, பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து, தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து ஊற்றி, துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் கடப்பா தயார். கடப்பா போடும் நாள்களில் உணவகங்களில் கூட்டம் அலைமோதுகிறது!
l குடலை இட்லி
அரிசியையும் உளுந்தையும் சம அளவில் ஊறவைத்து, கொஞ்சம் கரகரப்பாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதில் முந்திரி, கடலைப்பருப்பு, பொடித்த மிளகுத்தூள் ஆகியவற்றை நெய்யில் வறுத்து மாவில் கொட்டி, சுக்குத்தூள் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, டம்ளர் அல்லது இட்லி தட்டுகளில் ஊற்றி எடுத்தால் ‘காஞ்சிபுரம் குடலை இட்லி’ தயார்.
l வடகறி
மீதமான வடைகளை வீணாக்காமல், அவற்றை உதிர்த்து, பட்டை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, தேங்காய் அரைத்து ஊற்றி, உதிர்த்த வடைகளைப் போட்டு இறக்கினால் சுவையான சைதாப்பேட்டை ‘வடகறி’ கிடைத்துவிடும். வடகறியின் சுவைக்கு மக்கள் ஆதரவு கரம் நீட்ட, வடகறிக்காகவே வடை களைத் தயார்செய்வது இப்போது வழக்கமாகிவிட்டது. சாம்பார், சட்னிபோல் தொடுகறியாகவே இருந்தா லும் வடகறியை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்பதிலிருந்து, வடகறியின் மவுசைப் புரிந்துகொள்ளலாம்.