மற்றவை நேரில்...

மற்றவை நேரில்...
Updated on
2 min read

தொலைத்தொடர்பு வசதிகள் பெருகாத 1990களில் கடிதங்களே உறவுகளின் இணைப்புப் பாலமாக விளங்கின. நேரடி அறிமுகம் இல்லாதவர்கள்கூடக் கடிதங்கள் மூலம் நட்பைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை ‘பேனா நட்பு’ வழங்கியது.

ஊரிலிருந்து வரும் கடிதங்களை அம்மாவுக்கு வாசித்துக் காட்டுவதில் பள்ளிச் சிறுமியான எனக்குப் பெருமையும் விருப்பமும் அதிகம். பெரியப்பா எழுதுகிற கடிதங்களில், ‘பாசக் குலக்கொடிக்கு...’ என்று என்னை விளித்து எழுதியிருப்பார். அதைப் படித்துக்காட்டும்போதே எனக்குப் பெருமிதம் பிடிபடாது.

எங்கள் பக்கத்து வீட்டில் ‘பச்சைப் புடவை ஆயா’ வசித்தார். அவருடைய அக்கா மகன்களுக்குக் கடிதம் எழுத என்னைத்தான் அவர் தேடுவார். 15 பைசா மஞ்சள் அட்டையில் நுணுக்கி நுணுக்கி எழுதுவேன். இப்படிக் கடிதம் எழுதிக் கொடுத்தே அவர் வீட்டு விஷயங்களில் பாதி எனக்கு அத்துப்படி. கடிதத்தை எழுதி முடித்ததும், ‘பாட்டி சொல்படி...’ என்று என் பெயரைப் போட்டு அனுப்புவேன். எல்லாம் தற்பெருமைதான்.

அத்தை வீட்டில் இருந்து கடிதம் வந்தால் கடிதத்தின் தொடக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் குழந்தைகளான எங்களுக்கு அக்கறையில்லை. முடிவில் எங்களுக்கான தகவல் இருக்கிறதா எனக் காத்திருப்போம். ‘கோடை விடுமுறைக்குக் குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவைக்கவும்’ என்கிற ஒரு வரிக்காகக் காத்திருந்த நாள்கள் அவை. சித்தியிடம் அடிவாங்கிய சித்தப்பாவுக்கு, ‘மத்தால் அடி வாங்கவும்’ என்று எழுதிய இளங்கன்று நாள்களுக்கு இறப்பில்லை.

அப்போதெல்லாம் ‘பொங்கல் வாழ்த்து அட்டை’கள் மிகப் பிரபலம். விதவிதமான வாழ்த்து அட்டைகளையும் அவற்றில் எழுதப்பட்டிருக்கும் ‘வாழ்த்துக் கவிதை’களையும் வாசித்துத் தேர்ந்தெடுப்பதே பெரும் கொண்டாட்டமாக இருக்கும். அட்டையின் பின் பக்கம் முகவரி எழுதவும் நம் கைவண்ணத்தைக் காட்டவும் இடம் இருக்கும். 25 பைசா கொடுத்து வாழ்த்து அட்டை வாங்குவது ‘கம்பெனி'க்குக் கட்டுப்படியாகாது என்பதால், மஞ்சள் நிறத் தபால் அட்டையை வாங்கி, அதில் நாங்களே பொங்கல் பானையையும் கரும்புகளையும் வரைந்து அனுப்புவோம். அப்பா சிவாஜி ரசிகர் என்பதால் சிவாஜியின் விதவிதமான படங்கள் கொண்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி வைத்திருப்பார்.

கடித வரிகளுக்கு நடுவே நாங்கள் வைத்து அனுப்புகிற ரகசியங்களின் முன்னால் இன்றைய திரைப்படங்களின் ‘குறியீடுகள்’ தோற்றுப்போக வேண்டும். சம்பந்தப்பட்டவரைத் தவிர யாருக்கும் அவை புரியாத அளவுக்குச் செய்நேர்த்தி அதில் வெளிப்படும்.

இறப்புக்குக் காரிய பத்திரிகை அச்சடிக்கச் செலவாகும் என்பதால் அதற்கும் தபால் அட்டையைத்தான் எங்கள் உறவினர்களில் பலரும் பயன்படுத்தினார்கள். அட்டையின் நான்கு மூலைகளிலும் கறுப்பு மையைப் பூசியிருந்தாலே அது ‘உத்திரகிரியைப் பத்திரிகை’ என்பது புரிந்துவிடும்.

அந்நாளில் உறவினர்களைப் பார்க்க முடியாத வருத்தத்தைக் கடிதங்களே போக்கின. நேரில் பேசினால்கூட அவ்வளவு நெருக்கமாக உணர்வோமோ, தெரியாது. வளைவான, நெளிநெளியான, நீளமான, குண்டான கையெழுத்துகளில் புதைந்திருக்கும் அன்புக்கும் நேசத்துக்கும் வேறெதுவும் நிகர் இல்லை. அவை காதல் கடிதங்களாக இருக்கிறபோது அந்த வரிகளுக்கு மகோன்னத உயிர்ப்பு கிடைத்துவிடுகிறது.

அப்பா கடிதம் எழுதும் ஒவ்வொரு முறையும், ‘இதுதான் சங்கதி. மற்றவை நேரில்’ என முடிப்பார். எங்களுக்கும் அது தொற்றிக்கொண்டது. ஆனால், கடிதத்தின் தொடக்கம் மட்டும் ஆளுக்கேற்ப நாங்களே மாற்றிக்கொள்வோம். ‘நலம், நாடலும் அஃதே’ என்று எழுதியதெல்லாம் புலமையின் வெளிப்பாடு என்று நம்பிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டென்றால், அது கடிதங்கள் உயிர்ப்போடு இருந்த காலம் என்றறிக!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in