மொழிபெயர்ப்புத் திறனாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன: ஆழி செந்தில்நாதன்

மொழிபெயர்ப்புத் திறனாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன: ஆழி செந்தில்நாதன்

Published on

பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், மொழி நிகர்மைச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் ஆழி செந்தில்நாதன். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்பு நிறுவனத்தை நடத்திவரும் செந்தில்நாதன், ஐலேசா (Ailaysa) என்கிற மொழிபெயர்ப்பு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கி நடத்திவருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சியையும் பணிவாய்ப்புகளையும் வழங்கிவருகிறார். இன்றைய தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:

தமிழில் மொழிபெயர்ப்புத் துறையில் இளைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? இளைஞர்கள் மொழிபெயர்ப்பாளராகவோ மொழிபெயர்ப்பு சேவை வழங்கும் தொழில் நிறுவனத்தை நடத்துபவராகவோ இருக்கும் பணியை வாழ்வாதாரமாகக் எடுத்துக்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டதா அல்லது எதிர்காலத்தில் அது நிகழ வாய்ப்புள்ளதா?

மொழிபெயர்ப்புத் துறை ஒரு தனித் தொழில்துறையாக வளர்ந்துவரும் போக்கு, இப்போதுதான் இந்தியாவில் தொடங்கியுள்ளது. நாங்கள் மிகவும் முன்பே இந்தத் துறையில் நுழைந்துவிட்டோம் என்பதால், உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு எனக்குச் சிரமமாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் மொழிக்கொள்கையும் இந்திய நிறுவனங்களின் மொழிக்கொள்கையும் இந்திய மொழிகளுக்குச் சாதகமாக இல்லாமலிருந்தன. இப்போது சில மாற்றங்கள் தென்படுகின்றன.

அத்துடன் மொழிபெயர்ப்பு என்பது தனிச் செயல்பாடு அல்ல. அது ஊடகம், பதிப்புத் துறை, மார்க்கெட்டிங், அரசுத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, சட்டத்துறை, மென்பொருள், ஓடிடி என விரிவாகப் பல தளங்களில் பல வகைகளில் மொழிபெயர்ப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எனவே, மொழிபெயர்ப்பாளர் என்கிற நேரடி அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாமல் மொழிபெயர்ப்புத் திறன் கொண்ட திறனாளர் என்று எடுத்துக் கொண்டால் மிகப் பெரிய அளவில் வாய்ப்பு வரத்தொடங்கியிருக்கிறது என்றுதான் பொருள்.

கூகுள் டிரான்ஸ்லேட், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி களின் தாக்கம் மொழிபெயர்ப்புத் துறையில் ஏற்படுத்தியிருக்கும் நன்மைகள், சவால்கள் என்ன? மொழிபெயர்ப்பில் ஈடுபடும் நபர்கள் இதற்கு எப்படி முகம்கொடுக்க வேண்டும் அல்லது தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும்?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதன்முதலில் அறிமுகமானத் துறைகளில் ஒன்று மொழிபெயர்ப்பு. மனிதர்கள் சொல்வதை ஓர் இயந்திரம் கேட்கவும் புரிந்துகொள்ளவும் பதில் அளிக்கவும் செய்யாவிட்டால், செயற்கை நுண்ணறிவே சாத்தியமில்லை. எந்த மொழி பெயர்ப்பாளரும் இனி செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும். அது எந்த அளவு துல்லியமானது என்கிற கேள்விக்கு பதில் - காலம்தான் சொல்லும். நேற்றைவிட இன்று அது சிறப்பாக இருக்கிறது, நாளை இதைவிடச் சிறப்பாக இருக்கும்.

பலரும் சொல்வதைப் போல அல்லாமல், செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பாளர் களுக்கானத் தேவையை குறைக்காது. மாறாக அது மொழிபெயர்ப்பாளரை முழுமையான மொழி செம்மையாக்குநராக மாற்றும். அதில் அதிகம் வேலை கிடைக்கும்.

இன்றைய சூழலில் மொழிபெயர்ப்பில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய அடிப்படைத் திறன்கள், தகுதிகள் என்னென்ன?

மூன்று தகுதிகளைச் சொல்லலாம். முதலாவ தாக அவர்கள் முதலில் தங்கள் தாய்மொழியில் மிகப்பெரிய அளவுக்கு வாசிப்பும் எழுத்துப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது, ஆங்கிலம். மூன்றாவது, எந்த துறையைச் சார்ந்த உரைகளை நீங்கள் மொழிபெயர்க்கப் போகிறீர்கள் என்பது. படைப்பிலக்கியமாக இருந்தால், நீங்களும் ஒரு படைப்பிலக்கியவாதியாக இருக்க வேண்டும். கவித்துவ மொழி உங்களுக்குக் கைவராவிட்டால் கவிதையை மொழிபெயர்க்க முடியாது. தொழில்முறை மொழிபெயர்பு என்றால், நீங்கள் சில முக்கியத் துறைகளிலாவது பழகியிருக்க வேண்டும். மருத்துவமோ பிசினஸோ அறிவியலோ பயணமோ, ஒரு துறை குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளாமல் அந்தத் துறையிலுள்ள எதையும் மொழிபெயர்க்க இயலாது. இப்படி மூல மொழி, இலக்கு மொழி, அறிவுத் துறை என மூன்றிலும் தேவைக்கேற்ப நாம் திறன் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், மொழிபெயர்ப்புப் பக்கமே வர வேண்டாம். அதுதான் கூகிள் டிரான்ஸ்லேட் இருக்கிறதே.

மொழிபெயர்ப்பு நாவல்கள் உள்ளிட்ட புனைவுகளுக்கு ஓரளவு பரவலான வாசகர்கள் உள்ளனர். அபுனைவு மொழிபெயர்ப்புக்கு அதே அளவு வளர்ச்சி, மதிப்பு இருக்கிறதா? இதில் என்ன மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

புனைவில்லா எழுத்துகளுக்கான சந்தை புனைவுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. ஆனால், மதிப்பு என்று வரும்போது சற்று குறைவாகத்தான் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், தமிழில் புனைவில்லா எழுத்து என்பது சுயமுன்னேற்ற எழுத்து என்றே புரிந்துகொள்ளப் படுகிறது. ஆனால், பல அரசியல், தத்துவ நூல்களை மொழிபெயர்த்தவர்களுக்கு நல்ல மரியாதை இல்லாமல் இல்லை. மூல நூல்களுக்குத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள மரியாதை அவற்றின் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் கிடைக்கிறது என்றே நம்புகிறேன்,

ஆங்கிலம் அளவுக்கு தமிழில் பல நவீன வளர்ச்சிகள் சார்ந்த சொல்லாடல்கள், கலைச் சொற்கள் வளரவில்லை, புதிதாக உருவாக்கப்பட்ட சில சொற்களும் பரவலான புழக்கத்துக்கு வரவில்லை. ஃபேஸ்புக் என்று எழுதுவதா முகநூல் என்று எழுதுவதா என்பதிலேயே தமிழ்ச் சமூகம் இன்னும் அறுதியான முடிவுக்கு வரவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன?

கலைச் சொல்லாக்கம் மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியே ஒழிய முன் நிபந்தனை அல்ல. நாம் அனைவரும் ஒரே மாதிரி கலைச் சொல்லாக்கங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறை பிரச்சினையே ஒழிய, மொழிபெயர்ப்பு சார்ந்த பிரச்சினை அல்ல. இதில் உள்ள கருத்துவேறுபாடுகளைப் பார்க்கும்போது, எல்லா மொழிகளிலும் இருப்பதைப் போலவே தமிழிலும் இருப்பதாகவே நினைக்கிறேன். மொழி எந்த ஒரு தனிப்பட்டக் குழுவுக்கும் சொந்தமில்லை. எனவே, பலவிதமான கலைச் சொல்லாக்க நடைமுறைகள் உருவாகின்றன. எனவே, தமிழ்ச் சமூகத்தால் இவற்றுக்கெல்லாம் அறுதியான முடிவுகளை எட்ட இயலாது. அதற்கு அதைவிட பெரிய வேலைகளும் முன்னுரிமைகளும் இருக்கின்றன.

உண்மையில், மொழிபெயர்ப்பாளர்கள் கவனம் செலுத்தவேண்டிய முதல் இடம் - மொழிபெயர்ப்பு உத்தியும் மொழிநடையும்தான். கலைச் சொல்லாக்கம் மெல்லமெல்ல ஒரு தரநிர்ணயத்துக்குள் வந்துவிடும். முப்பதாண்டு காலமாக பார்த்துவிட்டேன், மொழிபெயர்ப்பதா ஒலிபெயர்ப்பதா என்கிற பட்டிமன்றம் ஓய்ந்த பாடில்லை. ஓயவும் போவதில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பில் நான் இப்போது பார்க்கும் பிரச்சினை, கூகிள் டிரான்ஸ்லேட் டோடு போட்டியிடும் மொழிபெயர்ப்பாளர்கள் அதிகமாகிவருகிறார்கள் என்பதுதான். நீங்கள் செயற்கை நுண்ணறிவை விஞ்சாவிட்டால், அந்த ரோடு ரோலர் உங்கள் மீது ஏறிச்சென்றுவிடும். நாம் கவனம் செலுத்தவேண்டியது இலக்கு வடிவம் மூல வடிவத்தின் நோக்கத்தையும் பாணியையும் தமிழில் வெளிப்படுத்தியிருக்கிறதா இல்லையா என்பதுதான். வெளிப்படுத்தத் தவறினால், மொழிபெயர்ப்பு தோற்றுப்போய்விடும். அல்லது செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பே போதும் என்றாகிவிடும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in