

கோவணம் மட்டுமே கட்டியிருந்த அந்தக் கறுத்தச் சிறுவன் உமிழ்நீரைப் பழையாற்றிலே வேகமாய் உமிழ்ந்ததைப் பார்த்த பார்வதி “மோனே ஆறு அம்மாவாக்கும், அம்மா மேல நீ துப்புவியா?” என்று கேட்டுவிட்டு, அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள். பார்வதிக்கு வயது நூறை எட்டிவிட்டது என்று சொன்னார்கள்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் எனது முனைவர் பட்ட ஆய்வுக்குக் கதைப்பாடல்களைத் தேடி அலைந்த காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தோட்டமலைக்குப் போயிருந்தேன். காட்டையும் விலங்குகளையும் அழிக்கக் கூடாது. ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பின்னணியில் மலைவாழ் மக்களான காணிக்காரர்கள் நடத்திய கூத்தைப் பார்க்கப்போயிருந்த நேரத்தில்தான் அந்த மூதாட்டியைச் சந்தித்தேன்.
அவள் அம்மா
தோட்டமலை சப்போங்குப் பாறையில் அந்த மூதாட்டியின் குடிசை இருந்தது. பேச்சிப்பாறை அணை வேலை நடந்தபோது (1907) புதுமணப் பெண்ணாய் அங்கு வந்தவராம். அவர் கணவர் அங்கு வேலை செய்தாராம். பார்வதிக்குப் பழையாற்றின் ஆரம்பப் பகுதிகள் அத்துபடி. மேற்கு மலைத் தொடரில் குட்டிக்குட்டியாய் ஓடிய சிற்றோடைகளை எல்லாம் அவர் அறிந்திருந்தார். அந்தப் பகுதியில் ஓடைகளுக்கும் ஆறுகளுக்கும் பெயருண்டு. அந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. மூதாட்டி இதை எல்லாம் சொல்லிவிட்டு, “மோனே அதெல்லாம் உயிருள்ள ஜீவன்லா. அதாக்கும் அவளுக்குப் பேரவச்சு கூப்புடுதோம். எல்லா ஆறுகளும் நம்மள பெத்தவளாக்கும்” என்றார். அவர் ஆறுகளைப் பெண்பாலாகவே குறிப்பிட்டுப் பேசினார்.
மூன்று ஆறுகள்
குமரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பில் (1,684 சதுர கி.மீ.) மூன்றில் ஒரு பகுதி மலைக்காடு களும் சமூகக்காடுகளும் நிறைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் குமரியின் தாமிரபரணியாறு, பழையாறு, வள்ளியாறு என மூன்று ஆறுகளும் முக்கியமானவை. நாஞ்சில் நாட்டின் செழிப்புக்குக் காரணமான ஆறு, பழையாறு. மகேந்திரகிரி மலையில் உற்பத்தி ஆவது. இது அனந்தபுரத்து ஆறு, குன்னிமுத்து ஆறு, சோலையாறு, கரும்பறைத் தோட்ட ஆறு, அலத்துறை ஆறு ஆகிய ஆறுகள் இணைந்து உண்டாவது. தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய வட்டங்களில் 37 கி.மீ. ஓடி மணக்குடி கடல் கழிமுகத்தில் கலக்கிறது. இந்தியாவின் தென்கோடியில் ஓடும் ஆறு இதுதான்.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் பகுறுளியாற்றைத்தான் (பறளியாறு), பழையாறு என்று கூறுகின்றனர். பறளியாற்றின் குறுக்கே பாண்டியன் ஒருவன் அணை கட்டிய பின்பு, அது கோதையாற்றில் கலந்துவிட்டது. நாஞ்சில் நாட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டு, ‘கோட்டாறு’ என்று பழையாற்றைக் குறிப்பிடுகிறது. பழைய ஓலை ஆவணங்களிலோ வேறு கல்வெட்டுகளிலோ இந்தப் பெயர் இல்லை. பழையாறு என்கிற பெயர் 14ஆம் நூற்றாண்டு ஓலை ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. பழையாறு பாயும் பகுதி எப்போதும் நாஞ்சில் நாடு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
சோழர் அணைக்கட்டுகள்
பழையாற்றின் குறுக்கே சிறிய கல்லணை கட்டி நாஞ்சில் நாட்டுக் குளங்களுக்கும் சிறு வாய்க்காலுக்கும் நீரைத் திருப்பிவிட்ட செயல்பாடுகள் 16ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டன. பாண்டியன் அணைக்கும் மணக்குடி கழிமுகத்துக்கும் இடையில் 13 அணைக்கட்டுகள் உள்ளன. இவை 16 - 19ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை.
இந்த அணைகளுக்கும் வட்டார ரீதியான வாய்மொழிக் கதைகள் உள்ளன. கட்டியவரின் மேல் உள்ள கரிசனம் இன்றும் தொடருகிறது. வீரப்புலி அணை, சோழன் திட்டை அணை இரண்டும் சோழருடன் தொடர்புடையவை. பூதல வீரராமவர்மா என்கிற வேணாட்டு அரசனின் மனைவி சோழ வம்சத்தினள். அவரது நினைவாகக் கட்டப்பட்டது வீரப்புலி அணை. சோழ மரபில் பிறந்த படைத்தலைவன் ஒருவன் வேணாட்டு அரசரின்கீழ் பணிபுரிந்தான். அவன் நினைவாகக் கட்டப்பட்டது சோழன் திட்டை அணை.
‘பஞ்சத்தில் கல்முழுங்கி அணை’, மழையில்லாத போதும் அணை மூழ்கும் அளவுக்கு, நீர்வரத்து இருப்பதால் பெயர் பெற்றது. பழையாற்றில் நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி குளித்துக்கொண்டிருந்தாள். அப்போது தண்ணீரிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அவள் குளித்த இடத்தில் உள்ள அணையைப் ‘பிள்ளைப் பெத்தான் அணை’ என்றனர்.
இந்த அணைக்கட்டுகளில் சில கருங்கற்களால் கட்டப்பட்டவை. கற்களை ஒன்றுடன் இன்னொன்று இணைப்பதற்குப் பூட்டு அமைப்பு (Lock System) உள்ளது. இணைக்கும் இடத்தில் உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றியிருக்கின்றனர். கொடும் வெயிலில் உலோகத்தை உருக்கும் போது செப்பனிடுவதற்குக் கொல்லர் ஒருவரும், அணையின் அருகிலேயே குடியிருந்திருக்கிறார்.
நான் குளித்த பழையாறு
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைவதற்கு ஆறேழு மாதங்களுக்கு முன்பு அம்மாவுடன் அருமநல்லூர் பழையாற்றில் குளித்த அனுபவத்தை இன்னும் அசைபோட முடிகிறது. ஆற்றங்கரை ஊர்க் குழந்தைகள் நீச்சல் தெரிந்தவர்கள்.
அன்று ஆற்றங்கரையிலும் தோட்ட வேலிகளிலும் அன்னாசி மரங்கள் நின்றன. ‘புருத்திச்கக்கா’ என அழைக்கப்பட்ட அந்தப் பழத்தின் அருமை நாஞ்சில் நாட்டில் தெரியாது. காய்கள், பழங்களை வெட்டி சாலை ஓரத்தில் போடுவார்கள். ஆற்றங்கரை மரங்களிலிருந்து தானாகப் பழங்கள் ஆற்றில் விழும், அது தின்பதற்கு அல்லாதது என்று மனதில் உறைந்திருந்த காலம். ஊர்ப் பெரியவர்கள் அந்தப் பழங்களை ஆற்றிலிருந்து எடுத்து மாடு களுக்குப் போடுவார்கள்.
அன்று நான் குளித்த ஆற்றில் நீரில் மூழ்கி, கண்ணை விழித்துப் பார்க்கலாம்; அடிமணல் பாலாய்த் தெரியும்; மீன்கள் தெரியும். இன்று நினைத்துப் பார்க்க முடிய வில்லை. கற்பனை செய்ய முடியவில்லை. இந்த ஆறு இப்படி ஆனதற்கு, ஆற்று மணலைக் கேரளத்துக்குக் கடத்தும் புண்ணியவான்கள் காரணமா, ஆற்றில் சாக்கடையை விடும் அரசு நிர்வாகம் காரணமா, குப்பைகளைப் போடுவதில் கூச்சமில்லாத மக்கள் காரணமா?
பதிவுகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழையாறு தூய்மையாக இருந்ததற்கு பழைய பதிவுகளை அடையாளம் காட்ட முடியும். கேரளத்தில் வைக்கம் கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்த காலம் (1925 - 30) பழையாற்றின் மணல் பரப்பில் உள்ள சுசீந்திரம் கோயிலிலும் போராட்டம் நடந்தது. அப்போது மழையில்லாத பங்குனி மாதத்தில் பழையாற்று மணல்வெளியில் பெரியார் பேசினாராம். அந்த நினைவுகளை பட்டேல் சுந்தரம்பிள்ளை எழுதியிருக்கிறார், ‘பழையாற்று வெளியில் கூட்டம் போடலாம் என்று முடிவுசெய்தது, அதன் சுத்தம் கருதித்தான். பொடி பச்சரிசிக் குருணை மாதிரி பரந்து கிடந்த ஆற்று மணல் வெளியில் கூடினோம். ஆற்றின் வடக்குப் பகுதியில் மட்டும் தெளிந்த நீரோடையாய் தண்ணீர் ஓடியது. சத்தியாகிரகிகள் குறைவாகத்தான் வந்திருந்தனர். சிலர் மாடு தண்ணீர் குடிப்பதைப்போல் குனிந்து ஆற்று நீரைக் குடித்தார்கள்’ என்கிறார்.
அழுகிய பிணமாய்
இப்போதும் பழையாறு சுருளக்கோடு தாண்டுவதற்கு முன்பு ஓரளவு நன்றாகத்தான் இருக்கிறது. அரும நல்லூரிலிருந்து தன் பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பூதப்பாண்டிக்கு வரும்போது அரை உயிராகி விடுகிறது. நாகர்கோவில் ஒழுகினசேரி சுடுகாட்டுக்கு அருகே வரும்போது பிணமாகி, சுசீந்திரத்தில் நாற்றமடித்த அழுகிய பிணமாகி மணக்குடிக் கடலில் ஊதிப்பெருத்துக் கலந்து விடுகிறாள்.
நாகர்கோவிலின் வடக்கே ஓடும் பழையாறு நூறு விழுக்காடு சாக்கடையாகிவிட்டது. செத்த பூனைக்குட்டியிலிருந்து மெத்தை வரை தூக்கி எறிய வேண்டிய இடம் பழையாறு என்பதை மெத்தப் படித்தவர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்!
இந்தக் கட்டுரை எழுதவேண்டி பழையாற்றின் பல பகுதிகளுக்குச் சென்றேன். சுசீந்திரம், துவாரகை கோயிலின் அருகே படிக்கட்டில் இறங்கிப் பழையாற்றைப் பார்த்தேன். யாரோ வீட்டைக் காலி செய்து ஆற்றில் போட்டிருக்கிறார்கள். சாய்பாபா, ஷீரடி பாபாவின் உடைந்த படங்கள், தலையணை, கிழிந்த சர்ட், பேன்ட் இப்படிப் பல பொருள்கள் கிடந்தன. “பஞ்சாயத்து அலுவலகம் அருகில்தான் இருக்கிறது” என்றார் அங்கே நின்றவர்.
திமிறத்தான் செய்வாள்
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு முறை பெய்த மழையால் பழையாறு பெருக்கெடுத்து ஊரில் நுழைந்திருக்கிறது. குடியிருப்புகளை அழித்திருக்கிறது. சுசீந்திரம் கோயில் தேரைக்கூடச் சங்கிலி போட்டுக் கட்டினார்கள். எனக்கு மூதாட்டி பார்வதி, “இவள் (பழையாறு) அம்மா அல்லே, அவளிடம் பாலைக் குடிக்கலாம்; ரத்தத்தை உறிஞ்சினால் திமிறத்தான் செய்வாள்” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
என் மூத்த அண்ணன் 37 வயதில் காசநோயால் மருத்துவ விடுதியில் இருந்தபோது இரவு கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போவதை துக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதே வகையான துக்கத்தை இந்தக் கட்டுரை எழுத இருசக்கர வாகனத்தில் பழையாற்றின் கரை வழியே பயணித்தபோது, மீண்டும் உணர்ந்தேன். இந்த ஆற்றின் மீது மக்களுக்கு அப்படி என்னதான் வஞ்சம்?.
படங்கள்: அ.கா.பெருமாள்