கங்கை அன்னை

கங்கை அன்னை
Updated on
3 min read

கங்கையைத் தரிசிக்கும்போது நம் கண் முன்னால் பயிர்கள் அசைந்தாடும் பசுமையான வயல்களும் சரக்குகளால் நிரம்பியுள்ள கப்பல்களும் மட்டும் தோன்றுவதில்லை. வால்மீகியின் காவியம், புத்தர்- மகாவீரரின் விஹாரங்கள், ஹர்ஷர், சமுத்திரகுப்தர், அசோகர் ஆகிய பேரரசர்களின் பராக்கிரமம். துளசிதாஸ், கபீர்தாஸ் போன்ற சான்றோரது பக்தியிசை-இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. கங்கா தரிசனம், தெய்விக உண்மையின் பூரண நேர்முகமான தோற்றமாகும். கங்கையின் தரிசனம் எல்லா இடங்களிலும் ஒரே வகையாக இருப்பதில்லை.

ஒவ்வோர் உருவம்

கங்கோத்ரியின் அருகே இமயத்தை அடுத்துள்ள பிரதேசங்களில் துள்ளிவரும் கன்னியின் உருவம், உத்தரகாசியின் நெடி துயர்ந்த தேவதாருகள் காவிய அழகுடைய வனப்பிரதேசத்தில் நிறைந்த பெண்ணின் இளம் உருவம்; தேவப்பிரயாகையின் மலைப்பாங்கான பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் ஒளிவீசும் அலக்நந்தாவின் அருகே விளையாட்டுச் சிறுமியின் உருவம். லட்சுமணஜூலாவில் இறங்கிய பின், ஹரித்வார் அருகே பல உபநதிகளின் தெளிந்த பிரவாகம், கான்பூரைத் தொட்டுச் செல்லும்போது வரலாற்றுப் புகழ்பெற்ற நீரோட்டம், பிரயாகையில் விசாலமான நீரோட்டத்தில் காளிந்தி நதியுடன் இணைந்த திரிவேணி சங்கமம். ஒவ்வொன்றின் அழகுமே புதுமையானது. ஒன்றைப் பார்த்தவுடன் இன்னொன்றைக் கற்பனை செய்துவிட முடியாது. ஒவ்வோர் இடத்தின் அழகு, செழுமை, சூழல், பெருமை- இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்புடையவை.

பிரயாகையில் கங்கை நதி ஒரு தனி உருவம் தரிக்கிறது. கங்கோத்ரி முதல் பிரயாகை வரை ஒரே சீராகப் பெருகிச் செல்லும் ஓர் உருவம் எனலாம்; ஆனால், பிரயாகையில் யமுனை வந்து கலக்கிறது. யமுனைக்கோ முன்பே இரண்டு தன்மைகள் உண்டு ஓடியும் குதித்தும் வந்தாலும், அதில் விளையாட்டு நடை தெரியாது. கங்கை சகுந்தலையைப் போல் தவச்செல்வியாகத் தோன்றுவார். கருமையான யமுனையோ திரௌபதியைப் போல மதிப்பிற்குரிய இளவரசியாகத் தென்படுவார்.

சங்கமங்கள்...

சர்மிஷ்டா தேவயானி கதையைக் கேட்கும்போது, பிரயாகையில் இணையும் கங்கை, யமுனை நதிகளின் வெண்மை- கருமை நிற நீர்ப்பெருக்குகளின் நினைவு வரும். இந்தியாவில் பல நதிகள் இருப்பதால், சங்கமங்களுக்கும் குறைவில்லை. இவை அனைத்திலும் நம் முன்னோர்கள் கங்கை, யமுனையின் இந்த சங்கமத்தைத்தான் மிகவும் விரும்பியுள்ளனர். எனவேதான் 'பிரயாகை' என்கிற பெருமைக்குரிய பெயரும் கொடுத்துள்ளனர். இந்தியாவில் முஸ்லிம்களின் வருகைக்குப் பின்னால் எப்படி வரலாற்றின் வடிவம் மாறியதோ - அதேபோல டெல்லி-ஆக்ரா மதுரா-பிருந்தாவன் அருகில் வரும் யமுனையின் பிரவாகத்தினால் கங்கையின் உருவமும் பிரயாகைக்குப் பிறகு முற்றிலும் மாறுதலடைகின்றது.

பிரயாகைக்குப் பிறகு கங்கை ஒரு நற்குடிப் பெண்ணைப் போலப் பெருமிதமும், சீரும் சிறப்பும் கொண்டு விளங்குகிறாள். அதன் பிறகு பெரிய பெரிய உபநதிகள் இதில் இணைகின்றன. யமுனை நீரானது மதுரா—பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுடைய லீலைகளை நினைவூட்டுகின்றது. அயோத்தியா வழியே வரும் சரயூ நதியோ ராஜா ராமச்சந்திரனின் புகழையும், கருணையையும் நம் கண் முன் தோற்றுவிக்கின்றது. தெற்கேயிருந்து பாயும் சம்பல் நதியோ மன்மதனின் யாக - யக்ஞங்களின் செய்தி சொல்கின்றது. மிகுந்த கோலாகலத்துடன் சோணபத்ரன்-கஜக்ரானாவின் ரூபம் தரித்து மற்போர் காட்சிகளை மனக்கண் முன் கொணர்கின்றது.

இவ்வாறு சீரும் சிறப்பும் சேரவரும் கங்கை பாடலிபுரத்தருகே, மகத ஆட்சிப்பகுதியைப் போலவே அகன்று செல்கிறது. இருந்தும் நதி தனது மதிப்புமிக்க தொழில் வளத்தை வாரி வழங்கத் தயங்கவில்லை. ஜனகர், அசோகர், புத்தர். மகாவீரர் ஆகியோர் வாழ்ந்த பூமியிலிருந்து முன்னேறிச் செல்லும்போது இனி எங்கே செல்வது என்கிற நினைவில் ஆழ்ந்து நிற்பதுபோலத் தோன்றும். இவ்வளவு பெரிய நதி மிகுந்த வேகத்துடன் கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்துவிட்டு, திடீரெனத் தெற்கு நோக்கி திரும்புவது எளிதா என்ன? எப்படியோ திரும்பிப் பாய்ந்து வருகிறது.

பிரம்மாண்டங்களின் சந்திப்பு

இரண்டு அரசர்களோ, இரண்டு மகான் களோ திடீரென்று ஒருவரை இன்னொருவர் சந்திப்பதுபோல - கங்கையும் பிரம்மபுத்திராவும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. பிரம்மபுத்திரா இமாலயத்தின் சாரலிலுள்ள நீரையெல்லாம் திரட்டிக்கொண்டு அசாம் வழியாக மேற்கு நோக்கிப் பாயும்போது கங்கை மேற்கேயிருந்து கிழக்கே பாய்கின்றது. எதிரெதிராகச் சந்திக்கும் நிலை எப்படி இருக்கிறது? யார் முதலில் வளைவது? யார் யாருக்கு வழி விடுவது? இறுதியில் இருவரும் தெற்கு நோக்கிச் சென்று ஸரித்பதியின் தரிசனம் செய்ய, ஆம்-சமுத்திரராஜனுடன் சங்கமிக்க முடிவாகின்றது. பக்தியுடனும் பணிவுடனும் அடக்கமாக முன்னேற. எங்கெங்கே இயலுமோ ஆங்காங்கே ஒருவரை இன்னொருவர் சந்திக்க வேண்டும்.

இதுபோன்று கோலாலந்தி அருகே கங்கையும் பிரம்மபுத்திராவும் இணைந்த நீர்ப்பிரவாகத்தைக் காண முடிகிறது. சமுத்திரம் என்பது அதுதானோ என்று இங்கு ஐயம் தோன்றுகிறது. வெற்றிக்குப் பிறகு எஞ்சி நிற்கும் சேனை எவ்வாறு ஆங்காங்கு செல்லுமோ; வெற்றி பெற்றவர்கள் எவ்வாறு இங்குமங்கும் களிப்போடு சுற்றித் திரிவார்களோ; அதே நிலையில் இந்த இரண்டு பெரிய நதிகளின் போக்கு இனிமேல் காணப்படுகின்றது. பல நதிகளாகப் பிரிந்து அவை சமுத்திரத்தைச் சென்றுசேர்கின்றன. ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு பெயர். சில கிளை நதிகளுக்குப் பல பெயர்களும் உண்டு. கங்கையும் பிரம்மபுத்திராவும் இணைந்த பின் பத்மா நதி என்று பெயர் வழங்குகின்றது. இதுவே மேலே செல்லும்போது மேக்னா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தப் பல முகங்களுடைய கங்கை எங்கே செல்கிறது? சுந்தரவனத்தின் மூங்கில் காடுகளை நனைக்கவா? சாகர புத்திரர்களுடைய ஆசையைத் தணித்து அவர்களை உய்விக்கவா? இப்போது நீங்கள் சென்று பார்த்தால், மிகுதியான பழைய காலியிடங்கள் அங்கே இராது. எங்கு பார்த்தாலும் பலப்பல தொழிற்சாலைகள் அல்லவா காணப்படுகின்றன? முற்காலத்தில் இந்தியாவின் தொழிற்பொருட்கள் பலவும் இங்கிருந்து கப்பல்கள் மூலமாக இலங்கைக்கும். ஜாவா தீவுக்கும் சென்று கொண்டிருந்தன. இதே வழியாக இப்போது வெளிநாட்டு, ஜப்பானியக் கப்பல்கள் வெளி நாட்டுத் தொழிற்சாலைகளில் தயாரான பொருள்களை இந்தியச் சந்தைகளை நிரப்பு வதற்காகக் கொண்டுவருவதைப் பார்க்க முடிகிறது. கங்கையன்னை முன்போலவே நமக்கு எல்லா வளங்களையும் வாரித் தந்து வருகிறாள். ஆனால், நமது மெலிந்த கைகளால் அவற்றை அள்ளத்தான் முடியவில்லை.

கங்கையம்மா! இந்தக் காட்சியைப் பார்க்க உனக்கு இன்னும் எத்தனை நாள் விதித்திருக்கிறதோ?

(நன்றி: இந்திய இலக்கியச் சிற்பிகள் - காகா காலேல்கர், விஷ்ணு பிரசாத்

(தமிழில்: அகிலா சிவராமன்), சாகித்ய அகாடமி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in