தமிழ்நாடு: கவனம் பெறும் 10 | வரலாறு சொல்லும் நதிகள்

தமிழ்நாடு: கவனம் பெறும் 10 | வரலாறு சொல்லும் நதிகள்
Updated on
6 min read

தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்ததில் அகழாய்வுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூரில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2015-16இல் நடத்தப்பட்ட அகழாய்வில் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுத் தொடக்கக் காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகள் தொடங்கி சுடுமண் உறைகிணறு வரை அந்த அகழாய்வில் கண்டறியப்பட்டன.

இந்தியத் தொல்லியல் துறை சார்பாக நடத்தப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2017 முதல் நடத்தப்பட்டுவரும் தொடர் அகழாய்வுகள், ‘கீழடி’ என்கிற சொல்லுக்கு உலகளாவிய அறிமுகத்தை ஏற்படுத்தித்தந்தன. கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருளின் காலத்தைக் கணித்தபோது அது பொ.ஆ.மு (கி.மு.) 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கீழடி, கொந்தகை, மணலூர் அகழாய்வுகள், சங்க காலத்திலேயே வைகை நதிக்கரையோரத்தில் நகர நாகரிகம் செழித்தோங்கியிருந்ததை உறுதிப்படுத்தின. கீழடியைப் போலவே தாமிரபரணிக் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் தமிழ் வரலாற்றுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி வருகின்றன.

- ப்ரதிமா

எல்லைகளுக்குள் முடங்காத எழுத்து

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவல் சர்வதேசப் புகழ்பெற்ற புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் இடம்பிடித்தது. சர்வதேச விருது ஒன்றின் நெடும்பட்டியலில் இடம்பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்கிற பெருமையையும் அவர் பெற்றார். சமீப காலமாக பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்துக்குச் சென்றுள்ளன. அது மட்டுமில்லாமல் முதல் பன்னாட்டு புத்தகக் காட்சியை தமிழ்நாடு அரசு சென்னையில் 2023 பொங்கல் விடுமுறை நாள்களில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த அம்சங்கள் மூலம் சர்வதேச இலக்கிய உலகில் தமிழ்நாடு தடம் பதிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி.

‘தி சத்தானிக் வெர்சஸ்’ (The Satanic Verses) நாவலால் கொலை மிரட்டலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் தாக்கப்பட்டார். ஹாடி மாடர் என்பவர் சரமாரியாகக் கத்தியால் குத்தியதால் ருஷ்டி கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக மீண்டுள்ளார். சமீபத்தில் வெளியான அவரது ‘விக்டரி சிட்டி' நாவல் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. தென்னிந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவலில் ஆண்டாளின் பாசுரமும் இடம்பெற்றுள்ளது.

-விபின்

அண்ணாந்து பார்க்கவைக்கும் சாதனைகள்

சமீபத்திய ஆண்டுகளில், இந்திய அறிவியல் எட்டிப் பிடித்துள்ள உயரம், அறிவியல் துறைகளில் மேம்பட்டு விளங்கும் நாடுகளை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியைப் பொறுத்தவரை, 61 செயற்கைக்கோள்களுடன் இந்தியா தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது; நிலவுக்குச் சந்திரயான் 3, சூரியனுக்கு ஆதித்யா எல்-1 என விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாத்தியங்களை திறந்துவிட்டுள்ளது. இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக 2014இல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. ஈர்ப்பு அலைகள் முதன்முறையாக 2015 செப்டம்பரில் கண்டறியப்பட்டன. புனேயில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வானியல்-வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த சஞ்சீவ் துரந்தர், பி.சத்யபிரகாஷ் என்கிற இரண்டு பேராசிரியர்கள் உருவாக்கிய கணிதவியல் நுட்பம் அதற்கு அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஐசிஎம்ஆர்-உடன் இணைந்து பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசி (மே 2020), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் இந்தியத் தடுப்பூசியாக வரலாற்றில் இடம்பெற்றது.

-அபி

பாய்ச்சல்களும் பிரச்சினைகளும்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நேர்ந்த கற்றல் இழப்புகளைச் சரி செய்வதற்காக எட்டாம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே தன்னார்வலர்கள் சென்று கற்பிப்பதற்கான 'இல்லம் தேடிக் கல்வித்' திட்டம் இரண்டாவது ஆண்டாக செயல்பட்டுவருகிறது. அரசுப் பள்ளிக் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விரும்பி வாசிப்பதற்கு உகந்த வகையில் எளிய மொழியில் எழுதப்பட்ட படங்களுடன் கூடிய 53 நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2022இல் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பகுதி அளவில் தொடங்கப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தற்போது அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற பாராட்டத்தக்க நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் போதாமை, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது, ஆசிரியர்களுக்கு அதிக பணிச்சுமை எனப் பல பிரச்சினைகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உயர்கல்வியைப் பொருத்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரியதாகவே தொடர்கிறது. அனைத்துக் கல்லூரிகளும் மாநில உயர் கல்வி மன்றம் (TANSCHE) வகுத்துள்ள பொதுப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டது பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பாதிக்கும் என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

- நந்தன்

இசையால் இணையும் இந்தியா!

இளையராஜாவின் 81ஆவது பிறந்த நாளையொட்டி ஹரிபிரசாத் சௌரசியா, எல்.சுப்பிரமணியம், ரஞ்சனி - காயத்ரி, சிக்கில் குருச்சரண் ஆகியோர் நிகழ்ச்சிகள் நடத்திய விதம், ஒரு திரைப்பட இசையமைப்பாளராக மட்டுமே இளையராஜாவின் இசைத் திறமையை சுருக்கிப் பார்க்க முடியாது என்பதை உலகத்துக்குச் சொல்லியது.
`குயின் ஆஃப் காபரே சாங்க்ஸ்' என்று இந்தியத் திரைப்பட உலகைத் தாண்டி, உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஆஷா போஸ்லே, தன்னுடைய 90ஆவது பிறந்த நாளை துபாயில் கடந்த மாதம் ரசிகர்களின் முன்பாக நேரடி யாக இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டாடினார். `ஹரி ஓம்' திரைப்படத்தில் பின்னணிப் பாடலைப் பாடியிருக்கும் ஆஷாவின் குரலுக்கு இன்னும் ஆகவில்லை 90 வயது!

`பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம்' பிரிவில் `டிவைன் டைட்ஸ்' இந்த ஆண்டுக்கான கிராமி விருதை வென்றது. சுயாதீன இசை அமைப்பாளரும் சூழலியலாளருமான ரிக்கி கேஜ், உலகப் புகழ் பெற்ற டிரம்மர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து இசையமைத்திருக்கும் மூன்றாவது ஆல்பம், பெற்றுள்ள மூன்றாவது கிராமி விருது இது. இவையெல்லாம் இசையுலகின் எல்லை விரிவடைந்து வருவதற்கான சான்று.

- யுகன்

நாம் என்ன செய்யப் போகிறோம்?

10-20 ஆண்டு களுக்கு முன் சுற்றுச் சூழல் பிரச்சினை கள் குறித்துப் பேசுபவர்கள் சிறு கூட்டமாக, வளர்ச்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தடைக்கற்களாகப் பார்க்கப்பட்டு வந்தார்கள். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பவை நம் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடியவை என்பதை ஏதோ ஒரு வகையில் உணரத் தொடங்கிவிட்டோம். சுற்றுச்சூழல் என்பது செயல்பாட்டாளர்கள், அறிவியலாளர்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல என்பதை இன்றைக்கு எல்லாருமே ஓரளவுக்காவது உணர்ந்திருக்கிறோம். லிபியப் பெருவெள்ளம், உலகெங்கிலும் காட்டுத்தீ தொடங்கி யானைகள்/சிறுத்தைகள்-மனிதர் எதிர்கொள்ளல், கொளுத்தியெடுக்கும் வெயில் எனப் பல்வேறு பிரச்சினைகளை உலக அளவிலும் உள்ளூர் அளவிலும் நாள்தோறும் எதிர்கொண்டுவருகிறோம். இந்தப் பிரச்சினைகளின் பெரிய வடிவமாக காலநிலை மாற்றம் இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அரசும் முதலாளித்துவ நிறுவனங்களும் தீர்வு காண வேண்டும். அப்படிப்பட்ட தீர்வுக்கு உந்தித்தள்ளுகிற நபர்களாக நாம் மாறப் போகிறோமா, வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கப் போகிறோமா? நிச்சயமாக காலம் இதைத் தீர்மானிக்க முடியாது. இதற்கான எந்தப் பதிலை நாம் முன்வைக்கிறோமோ, அதற்கேற்பவே நம் எதிர்காலம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

- நேயா

கதவை மூடிய ஓடிடி

கரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பொது முடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்தக் காலத்தில் சந்தித்த வசூல் இழப்பு, சிறு முதலீட்டுப் படங்களைப் பாதித்தது. கடந்த 3 ஆண்டுகளாக வெளியாக முடியாத, 1 கோடி முதல் 3 கோடி வரையில் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள், தற்போது வாரத்துக்கு 4 அல்லது 5 எனக் கூட்டம்கூட்டமாக ரிலீஸ் ஆகி வருகின்றன. ஆனால், இச்சிறு படங்களை ('லவ் டுடே’, 'குட்நைட்' விதிவிலக்கு) பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், இரண்டாம் நாளே திரையரங்குகளை விட்டு எடுக்கப்பட்டு விடுகின்றன. இப்படங்களை ஊடகங்களோ, யூடியூப் விமர்சகர்களோ கண்டுகொள்வதில்லை. உள்ளடக்கமும் உருவாக்கமும் சுமாராக இருந்தால்கூட, ‘திரையரங்கில் வெளியாகியிருந்தால் இப்படங்களின் ‘டிஜிட்டல் உரிமை’யை நியாயமான விலைக்கு வாங்கிவந்த ஓடிடி தளங்கள், தற்போது கதவை மூடிவிட்டன. மூன்று, நான்காவது இடத்தில் இருக்கும் பிரபல நடிகர்கள் நடித்துள்ள படங்களின் ‘டிஜிட்டல் ரைட்’ஸை விற்க முடியாமல் அவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லாட, அவற்றை மலிவான விலைக்குத் தர முன்வந்தால் மட்டும் வாங்க முன்வரும் போக்கு, ஓடிடி சந்தையை ஆக்கிரமித்துவிட்டது.

- ஜெயந்தன்

மருத்துவத் தலைமையகம்

இந்தியாவின் மருத்துவத் தலைமையகம் தமிழ்நாடு என்று கூறும் அளவுக்கு சுகாதாரம், மருத்துவத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்துவருகிறது. உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலிருந்து சிகிச்சைக்காக தமிழக அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் சாமானிய மக்களே இதற்கு சான்றுகள். மேம்பட்ட மருத்துவ வசதிகள் உள்ளதால்தான் கரோனா பெருந்தொற்றினை தமிழ்நாடு மிகச் சிறப்பாகக் கையாண்டதை பிரதமர் மோடி பாராட்டினார். 32 மாவட்ட மருத்துவமனைகள், 278 மாவட்டத் துணை மருத்துவமனைகள் என உறுதியான மருத்துவக் கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

வாழ்க்கை முறை நோய்களான நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' தற்போது செயல்பட்டு வருகிறது. தங்களுடைய மிகக் குறைந்த வருமானத்தில் இந்த நோய்களுக்காக 10 சதவீதம் செலவுசெய்து வந்தவர்களின் செலவு பாதியாகக் குறைந்திருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தில் இன்னும் சில குறைகள் களையப்பட வேண்டும் என்கிற குரலும் ஒலிக்கிறது.

- இந்து

வகை வகையாய்... வாய்க்கு ருசியாய்

சுவையான உணவு வகைகளைத் தேடித் தேடி ருசிப்பதிலும் கொண்டாடுவதிலும் தமிழர்கள் தனித்துவமானவர்கள். அதனால்தான் தெருவுக்கு ஒரு தேநீர்க் கடை இருக்கிறது. அங்கேயும் சாக்லெட் டீ, மசாலா டீ, ரோஸ் டீ, சுலைமானி டீ, ஹைபிஸ்கஸ் டீ என ஏராளமான சுவைகளில் தேநீர் கிடைக்கிறது. சூடாகக் குடிக்கக்கூடிய காபியை, ‘கோல்ட் காபி’யாகவும் சில்லென்ற ஐஸ்க்ரீமை ‘ஃபிரைட் ஐஸ்க்ரீம்’ ஆகவும் சாப்பிடும் தலைகீழ் மாற்றமும் வந்திருக்கிறது. வாழை இலையில் கட்டும் ‘கிழி பரோட்டா’வும் ‘பொதி சோறு’ம் இளநீர்ப் பாயசமும் இன்றைய ஃபேஷன் ஆகியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் பானிபூரிக் கடைகள் வந்துவிட்டன. இத்தாலிய பீட்சாக்களில் இருந்து உள்ளூர் பீட்சாக்கள் வரை நகரங்களில் கிடைக்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் உணவு செயலிகள் மூலம் வீட்டுக்கே உணவு வகைகள் தேடிவந்தன. அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இவ்வளவுக்கு இடையிலும் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளைத் தேடிச் செல்லும் ஆர்வமும் ஆரோக்கியம் குறித்த அக்கறையும் அதிகரித்துவருகிறது. ஒரு சொம்பு கூழுக்கு ஒன்பது வகை சைட்டிஷ் கொடுக்கும் கம்மங்கூழ், கேப்பைக்கூழ் கடைகளில் கூட்டம் அலைமோதுவதையும் சிவப்பு அரிசி, மட்டை அரிசி, சிறுதானியங்களுக்கு வீடுகளில் கிடைக்கும் வரவேற்பையும் பார்க்க முடிகிறது.

- ஸ்நேகா

தமிழகம் வந்த சர்வதேசப் போட்டிகள்

சமீபகாலமாக செஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், வாள்வீச்சு போன்ற சில விளையாட்டுகளில் தமிழர்கள் சாதிக்கத் தொடங்கியிருக் கிறார்கள். என்றாலும், இன்னும் தலைச்சிறந்த வீரர்கள் உருவாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு முதல் படியாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் அதிகம் நடத்தப்பட வேண்டும்.
சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே நடைபெற்றுவந்த இத்தொடர் இந்தியாவில் கடந்த ஆண்டுதான் முதன்முறையாக நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய ஆடவர் சாம்பியன் கோப்பைத் தொடர் நடைபெற்றதும் இதே போன்றதுதான். அண்மையில் மாமல்லபுரம் அருகே உலக சர்ஃபிங் லீக் (அலைச்சறுக்கு) நடைபெற்றது. ஆசிய, ஆஸ்திரேலிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் இதில் பங்கேற்றன.

இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிய உதவும் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுகள் இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளன. தொடர்ந்து இப்படிப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதன் மூலம், அந்த விளையாட்டுகளுக்கு முக்கியத் துவம் கிடைக்கும். அவற்றை விளையாட இளம் தலைமுறையினருக்கு ஆர்வமும் பிறக்கும்.

- மிது கார்த்தி

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in