அறிவொளி: நூல்கள் எனும் ஆவணம்

அறிவொளி: நூல்கள் எனும் ஆவணம்
Updated on
2 min read

அறிவொளி இயக்கம் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் 1989ஆம் ஆண்டு முதல் 2012 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. எளிய வாசித்தல், எழுதுதல் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் சிறு நூல்கள், பயிற்சிப் புத்தகங்கள், சுவரொட்டிகள் வடிவில் தயாரிக்கப்பட்ட செய்தித்தாள்கள், அவற்றில் வாராந்திர இணைப்பிதழ்கள், மின் அட்டைகள் போன்ற பல்வேறு கற்பித்தல் சாதனங்கள் வழங்கப்பட்டன.

சிறு-குறு நூல்கள், 16 முதல் 32 பக்கங்கள் அளவில் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றில், ஒரு பக்கம் செய்திகளும் எதிர்ப்பக்கத்தில் படங்களுமாக அச்சிடப்பட்டிருந்தன. கற்போர் எளிதாகப் படிப்பதற்கேற்ற முறையில் பெரிய தடித்த வடிவ எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் உள்ளடக்கப் பொருண்மைகள் வெவ்வேறானவை. பெரும்பாலும் கதைகளின் வடிவில் இருக்கும். இந்தக் கதைகளிலும் 75 % கதைகள் சுவையான, படிப்பதற்கு ஆர்வமூட்டும் வடிவில் அமைந்திருந்தன. இவை முதலில் களத்தில் கற்போர் நடுவே வாசிக்கப்பட்டு, அவர்களின் எதிர்வினைகளுக்கேற்பத் திருத்தியமைக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட பின், அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

புகழ்பெற்ற படைப்புகள்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிறுகதைப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுசாமி, ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், தனுஷ்கோடி ராமசாமி போன்றோர் படைத்த சிறுகதைகளிலிருந்து கற்போருக்கு ஏற்ற கதைகள் தேர்வு செய்யப்பட்டு நூல்கள் ஆக்கப்பட்டன. மதுரை பிஜிவிஎஸ் கருத்துக்கூடத்தில் பேராசிரியர் ச.மாடசாமி, ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தலைமையில் ஓர் ஆசிரியர் அணியால் மறுவரைவுகளாகத் தயாரிக்கப்பட்டன. உள்ளூரில் புகழ்பெற்ற நல்லதங்காள் கதை உள்ளிட்ட நாட்டார் கதைகள் புத்தகங்கள் ஆகின. அதே போன்று உலகப்புகழ் பெற்ற படைப்பாளிகளான மாப்பஸான், ஓ.ஹென்றி, டால்ஸ்டாய் போன்ற பலரின் புகழ்பெற்ற கதைகளும் தரப்பட்டன.

மக்கள் நடுவே, குறிப்பாகப் பெண்களிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு ரூபாய் விலையில் நூல்கள் தயாரிக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டன. பைகளில் புத்தகங்களுடன் கிராமம் கிராமமாக நடையாய் நடந்து வீடுகள்தோறும் மக்கள் நடுவே விற்பனை செய்யும் தொண்டர் அணியினரால் இவை விற்பனை செய்யப்பட்டன. இக்கதைகளைச் சிறு சிறு நாடகங்களாக்கி மாலை நேர வகுப்புகளிலும், வாரா வாரம் ஊர் கூடும் வீதி நிகழ்வுகளிலும் மக்கள் திரளின் முன்னே அரங்கேற்றப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கெனப் பயிற்சி பெற்ற கலைக்குழுவினர் நாடகங்கள், பாடல்கள் மூலம் கல்வி கற்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டினர்.

மேலே குறிப்பிடப்பட்ட சிறுகதை நூல்கள் மட்டுமே சுமார் நூறு இருக்கும். இவை தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து சிறு நூல்கள் ஏராளமாகத் தயாராகின. விருதுநகர் மாவட்டத்தில் கல்வியில் புதிய பரிசோதனைகள், பயிற்சிப் புத்தகங்கள், கையேடுகள்; வேலூர் மாவட்டத்தில் சுகாதாரம்; புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுதொழில்-குறிப்பாகக் கல் உடைத்தல் (குவாரி); கன்னியாகுமரியில் சிறு சேமிப்பு - இப்படியாகப் பல்வேறு பொருண்மைகளில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுக் கற்போரால் படிக்கப்பட்டன. எல்லா மாவட்டங்களிலும் இப்படித் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் சுமார் முந்நூறுக்கு மேல் இருக்கும்.

அளப்பரிய சாதனைகள்

இந்த இயக்கம் மகத்தான வீச்சுடன் தமிழ்நாட்டில் நடைபெற்றது. பல்லாயிரம் தொண்டர்கள் இதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். தமது கல்வித்தகுதியையும் இவர்கள் உயர்த்திக்கொண்டனர். கல்லாதவர்களைப் படிக்கவைக்க தமது கல்வித்திறனைப் பயன்படுத்தினர். முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு இது நடந்தது. குறிப்பாகப் பெண்கள் இந்த இயக்கத்தில் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

இந்த இயக் கத்தை வழி நடத்திய முக்கியமான தலைவர்களில் வெங்கடேஷ் ஆத்ரேயா வும் ஒருவர். அவரும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலாராணி சுங்கத்தும் இணைந்து புதுக்கோட்டை அறிவொளி அனுபவங்களை ‘Literacy and Empowerment’ ஆங்கில நூலாகப் படைத்தனர். பேராசிரியர் ச.மாடசாமியின் ‘சொலவடைகளும் சொன்னவர்களும்’ உள்ளிட்ட சில நூல்கள்; ச.தமிழ்ச்செல்வனின் ‘இருளும் ஒளியும்’; ஆம்பூர் ந.கருணாநிதியின் ‘பேரழகு பிறந்தது’; புதுக்கோட்டை கவிஞர் ஆர்.நீலாவின் பாமர தரிசனம், கலைப்பயண அனுபவங்கள், புதுகைச் சிறைக்குள் படிப்பறிவைப் புகட்டிய அனுபவங்கள் உள்ளிட்ட நூல்கள் அறிவொளி இயக்கத்தின் சாதனைகளை ஆவணப்படுத்தின.

இவை தவிர டாக்டர் சுந்தரராமன் தயாரித்த இந்திய விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிய ஆறு நூல்கள், ச.மாடசாமியின் பயிற்சிப் புத்தகங்கள் பலவும் முக்கியமானவை. விருதுநகர் மாவட்டப் புதிய கற்போருக்காக அந்த மாவட்ட அறிவொளி இயக்கம் தயாரித்த ‘உலகம்-அம்மாவுக்குக் கடிதம்’ என்கிற வரிசை நூல்கள் மிகவும் பரவசமூட்டியவை. அறிவொளியில் புதிதாகப் படிக்கக் கற்றுக்கொண்ட ஒரு கற்போர், தான் அறிந்துகொண்ட உலகம் பற்றிய செய்திகளைத் தனது கையேட்டில் பதிவுசெய்ததை அப்படியே ஒளிப்பட நகலாக்கி நூல் வடிவம் கொடுத்திருந்தார்கள். அத்தகைய நூல்களின் வாசிப்பு அனுபவங்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.

நல்லதங்காள் கதை, கம்மங்குழி அம்மன் கதை போன்ற உள்ளுர்க்கதை களைத் தொண்டர்கள் உரக்க வாசிக்கையில் விருதுநகர் மாவட்டக் கிராமங்களில் எளிய உழைப்பாளி மக்கள்-தீப்பெட்டிகளை ஒட்டித் தீக்குச்சிகளை நிரப்பும் வேலை செய்வோர், பீடி சுற்றுவோர் - கண்களில் நீர் நிரம்ப, வாய் விட்டு அழுததையும் நேரில் பார்த்த அனுபவம் பலருக்கு உண்டு. அந்த அறிவொளி அனுபவங்களை இன்னும் முற்றிலும் ஆவணப்படுத்தாமால் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு மேலிடுகிறது.

கமலாலயன்
kamalalayan@gmail.com

கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in