இத்தனை வருசமா எங்க போயிருந்தீங்க?

இத்தனை வருசமா எங்க போயிருந்தீங்க?
Updated on
2 min read

ஆலங்குளம் ஒன்றியத்தில் மாறாந்தையைத் தாண்டி குறிப்பன்குளம் என்கிற கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். நான், ஒரு பெண் தொண்டர் இருவர் மட்டும். அந்தப் பெண் அந்தப் பகுதியில் பல காலமாகச் சமூக சேவை செய்துவருபவர். அவரிடம் ஒரு டி.வி.எஸ்.-50 இருந்தது. “ஏறுங்க சார் பின்னாடி”, என்று அவர் வண்டியை ஸ்டார்ட் செய்ததும், ஒருவித மனச் சங்கடத்துடன் “வண்டியை நான் ஓட்டறேன்'' என்று இழுத்து “சரி” என்று அவர் பின்னாடி உட்கார, நான் வண்டியை ஓட்டினேன்.

தார்ச்சாலை - மண்சாலை எல்லாம் முடிந்து ஒத்தையடிப் பாதையில் வண்டி இறங்கியது. நிலா வெளிச்சமும் இறங்கி வந்தது. அந்தப் பாதையில் தொடர்ந்து வண்டியை ஓட்ட என்னால் முடியவில்லை. “அதான் முதல்லயே சொன்னேன்”, என்ற சிரிப்புடன் அவர் வண்டியை வாங்கினார். என்ன லாகவமான டிரைவிங். என்னைவிட வயசில் ரொம்ப சிறியவரான அப்பெண்ணின் முன் ஒரு சிறு பையனாக உணர்ந்தபடி சென்றது பயணம்.
பாதை என்ற ஒன்றே இல்லாத அந்த ஊருக்குள் (1991லும் இப்படி ஒரு ஊரா? எனப் பேசியபடி) நுழைந்தோம். அந்த ஊரைத் திரட்டி, எரிந்துகொண்டிருந்த ஒரே ஒரு தெரு விளக்கின் கீழ் அரை மணி நேரத்தில் உட்காரவைத்தார் நம் பெண்மணி.

தெரு விளக்கு போடுங்க!

குழந்தைகளும் பெண்களும் கூட்டமாக முன்னால் உட்கார்ந்திருக்க, ஆண்கள் கொஞ்சம் எட்டி அரைவட்டமாக நிற்க (இதுதான் அநேகமாக எல்லாக் கிராமங்களிலும் அமையும் கூட்ட வடிவம்), நம் பெண்மணி பாட்டுப் பாடினார். தொண்டு நிறுவனம் ஒன்றில் பல ஆண்டுகள் பணிபுரிந்து பலப்பல ‘விழிப்புணர்வு' பாடல்கள் அவருக்குத் தெரிந்திருந்தன. ‘பெண்ணை அடிமை செய்யும் ஆணின் முகத்தில் காறித்துப்பு” என்கிற மாதிரியான ‘தொண்டு நிறுவனப் புரட்சிகரப் பாடல்'களை அவர் பாடினார். கூட்டம் மிரள விழித்தாலும், உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

“கலெக்டர் ஆபிசிலிருந்து சார் வர்றாங்க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ‘கல்வியின் அவசியம்' பற்றி இப்போ உங்க மத்தியில் பேசுவாங்க”, என்று என்னை அறிமுகம் செய்தார். உடனே ஆண்கள் மத்தியில் இருந்து ஒருவர் “முதல்ல நாலு தெருவிலேயும் தெரு விளக்கு போடுங்க” என்றார் சத்தமாக, “அதெல்லாம் பி.டி.ஓ. ஆபிசிலே கேக்கணும். சார் கலெக்டர் ஆபிசிலே அறிவொளி இயக்கத்திலே இருந்து வர்றாங்க”, என்று கேள்வியாளரை அடக்கினார் நம் பெண்மணி.

படிக்காமல் இருக்கலாமா?

நான் என் பேண்ட்-சட்டை மீது வெறுப் படைந்தேன். வேட்டி கட்டிக்கொண்டு வந்திருக் கலாம் என நினைத்தேன். வேட்டி கட்டி வந்திருந்தாலும் அவர்களோடு ஒருவனாக ஆகியிருக்க முடியாதுதான். 40 வருடமாக பவுடர் அடித்து வெம்பிப் போன என் மத்தியதரவர்க்க முகத்தை, எப்படி உடனே அழிக்க முடியும்?

நான் ஒரு அதிகாரி இல்லை என்பதை விளக்கிவிட்டு, நானும் உங்களைப் போல உழைத்துச் சாப்பிடுகிற ஒருவன்தான். ‘உங்கள் ஊரில் எழுத்தறிவு இல்லாத மக்களைப் படிக்க வைப்பதற்காக அறிவொளி இயக்கம் வந்திருக்கிறது. முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர். சந்திரன் மேல கால வெச்ச காலம், இன்னும் கைநாட்டுப் போடுவது அலங்கோலம்' என்று அரை மணி நேரம் பேசி படிக்காமல் இருப்பது சரியல்ல என்கிற குற்ற உணர்வை அவர்கள் மனசில் ஏற்படுத்த முயன்றேன்.

கல்லாதவர் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தி அந்த உணர்வைப் பயன்படுத்தி - அவர்களை அறிவொளி வகுப்புகளில் உட்காரவைப்பது எங்கள் அன்றைய தந்திரமாக (Strategy) இருந்தது.

பிரம்படி!

நான் பேசி முடித்ததும் அமைதி நிலவியது. சில நிமிடங்கள் கழிந்ததும் ஆண்கள் மத்தியில் இருந்து தெளிவான குரல் ஒன்று கேட்டது.
“இவ்வளவு அக்கறையா பேசுறீகளே, இத்தனை வருசமா எங்க போயிருந்தீக?”

உண்மையில் அன்று நிலைகுலைந்துபோனவன் தான், இன்றுவரை என்னால் மனதளவிலும்கூட அந்தக் கேள்விக்கு முகம் கொடுக்க முடியவில்லை.
சிவபெருமான் முதுகில் விழுந்த பிரம்படிபோல, படித்த நம் எல்லோர் முகத்திலும் அறைந்த கேள்வியாக அது இப்போதும் நிற்கிறது.

- (இருளும் ஒளியும், ச.தமிழ்ச்செல்வன்,
பாரதி புத்தகாலயம் - நூலில் இருந்து ஒரு பகுதி)

tamizh53@gamil.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in