

அறிவொளி இயக்கம் எழுந்து, நடந்து 30 வருடங்கள் ஆகின்றன. அறிவொளியில் பாடல்கள் பல பாடப்பட்டன. வீதி விழாக்கள் பல நடைபெற்றன. கலைகளுக்கும் விழாக்களுக்கும் அடிப்படையாக இருந்தது இதுதான்:
புத்தகம் கையில் எடுத்துவிடு
அதுவே உன் போர்வாள்!
‘இது இப்படித்தான்’ என்று சலனமின்றி, சமூகம் கடந்துவிடுபவை பல. விடுபட்டவற்றைப் பார்க்க மனசாட்சியும் தேவை. மனிதநேயமும் தேவை.
உழைப்பாளிப் பெண்களுக்கு வாசிப்பின் மீது இருந்த தாகத்தையும், புத்தகங்களின் மீது இருந்த விருப்பத்தையும் முதன்முதலாகப் பார்த்து உணர்ந்தது அறிவொளி இயக்கம்.
எளிய மக்களைப் புத்தகங்களிடம் இருந்து பிரித்துவைத்தது எது? கடினமான இதயம் மட்டுமா? இல்லை. கடினமான மொழியும்தான்.
“சிறுவர்களுக்காக எழுதப்படும் பாட நூல்களில் கடினமான சொற்களும் சிறுவர்களின் அறிவுக்கு மேம்பட்ட விசயங்களுமே இடம்பெறுகின்றன” என்று கவலை தெரிவிக்கிறார் தமிழறிஞர் ச.வையாபுரிப் பிள்ளை. தெரிவித்த ஆண்டு-1939!
அறிவொளியின் பார்வையும், தமிழறிஞரின் கவலையும் அரசுப் பள்ளிப் பிள்ளை களுக்காக இன்று தொடங்கப்பட்டுள்ள வாசிப்பு இயக்கத்துக்கான ஆரம்பப் படிகள்.
பெண்களின் இயக்கம்
பெண்களின் தன்னலமற்ற பங்கேற்பு இந்த இயக்கத்தின் தனிச்சிறப்பு.
எழுத்தறிவு இயக்கம் பெண்கள் இயக்கமாக மலர்ந்தது தமிழ்நாட்டில் மட்டுமா? நெல்லூரில் (ஆந்திரம்) எழுத்தறிவு இயக்கத்தில் கற்ற பெண்கள் ஒன்றுகூடி, சாராயக்கடைகளை மூடவைத்த போராட்டமும், பிஹாரில் தும்கா மாவட்டத்தில் ‘விழித்திடு சகோதரி' என்கிற பெயரில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கத்தில் ஆதிவாசிப் பெண்கள் திரள் திரளாகப் பங்கேற்றதும், புதுக்கோட்டையில் குவாரிகளில் வேலை செய்த பெண்கள் அறிவொளியில் விழிப்புணர்வு பெற்றதும், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதும் வரலாற்றின் சில பக்கங்கள்.
அறிவொளியில் சேகரித்த விடுகதைகள், சொலவடைகள், பாடல்கள், கதைகள் அனைத்திலும் பெண்களின் குரல்கள்; கண்ணீர்த் துளிகள்! கண்ணீருக்கு இரண்டு காரணம். ஒன்று - மரணம், மற்றொன்று - திருமணம்.
பொருத்தமற்ற திருமணங்களில் சிக்கிப் பெண்கள் சிந்திய கண்ணீர் ஆறாய்ப் பெருகி ஓடுவதைப் பாடல்களில் பார்க்கிறோம்.
சோறாக் கொதிக்கேன் அம்மா- நான்
சுண்ணாம்பா வேகுறேனே!
கஞ்சியாக் கொதிக்கேன் அம்மா- நான்
கானலா வேகுறேனே! - என்பது ஒரு பருக்கை.
தங்களைப் பற்றிப் பிணித்த துயரங்களில் இருந்து அவர்கள் விசும்பி, வெளியேறி ஓர் இயக்கமாய்த் திரளக் கைகொடுத்தது அறிவொளி இயக்கம். எளியோர் வாழ்வில் ஒரு பக்கம் கண்ணீர் என்றால், மறுபக்கம் அன்பு. தன் காதலனை இப்படி விளிக்கிறார் ஒரு பெண்.
அஞ்சு ரூவா புத்தகமே
அரிச்சந்திர நாடகமே
இப்படி மீண்டும் மீண்டும் புத்தகத்தின் ஞாபகம் அவர்களுக்கு வந்துகொண்டே இருந்தது!
உள்ளடக்கம்
ரசனைகள் விதம்விதமாக இருக்கின்றன. மக்கள் விரும்பும் உள்ளடக்கம் குறித்து, உடனடி முடிவுக்குப் போய்விட முடியாது. அறிவொளியில் கற்போர் பலர் விரும்பி வாசித்த இரண்டு புத்தகங்களைப் பற்றி மட்டும் சொல்லியாக வேண்டும். ஒன்று: ‘நல்லத்தங்காள் கதை’ - விருதுநகர் அறி வொளி வெளியிட்ட புத்தகம். மற்றொன்று: வேல.ராமமூர்த்தி எழுதிய ‘கிறுக்கு சண்முகம்’ - மதுரை கருத்துக் கூடம் புதிய கற்போர் வாசிக்க வெளியிட்ட புத்தகம்.
தடுமாற்றமான முடிவுகள் கொண்டு வரும் சோகத்தைச் சொல்வது - நல்லத்தங்காள் கதை. அளவற்ற மனிதநேயம் நிரம்பியது - கிறுக்கு சண்முகம்.
இந்த இரண்டு உள்ளடக் கங்களும் வாசிப் போருக்குப் பிடித்திருந்தன.
பெண் படைப்பாளிகள்
அதிகாரங்களும் ஆதிக்கங்களும் நுட்பமான வடிவெடுத்து நிற்கின்றன - ஆணா திக்கம் உள்பட. கூச்சல் போடும் அதிகாரங்களைத் தமிழ் சீரியல்களில் மட்டும் பார்க்க முடியும்.
விருதுநகர் அறிவொளி இயக்கம் புத்தகமாக்கி வெளியிட்ட கதைகளில் பெரும் பாலானவை பெண்கள் சொன்னவையே. படைப்புலகில் ஆணின் ஆதிக்கத்தைத் தாண்டுவது ஒரு நுட்பமான போராட்டம். இயக்கம் அந்தச் சக்தியைப் பெண்களுக்குத் தருகிறது.
பள்ளிப் பிள்ளைகள் வாசிப்பு இயக்கத்தில் ‘வாசிக்க எளிய மொழி’ குறித்த ஓயாத கவலைதான் தொடக்கத்தில் இருந்தது. முதல் கட்டப் புத்தக உருவாக்க முடிவில், பெண் படைப்பாளிகள் பலரைக் கண்டபோது அறிவொளி ஞாபகம் தவறாமல் வந்தது.
வே.வசந்திதேவி (குழந்தையின் சிரிப்பு), அ.வெண்ணிலா (மீனா கேட்ட தோசை), ஞா.கலையரசி (கொண்டைக் குருவி), சாலை செல்வம் (நான் தோசை சுடுவேன்), பிரியசகி (மீன் பார்க்க வாங்க), ராணி குணசீலி (இனிப்புக் கீரை), ச.முத்துக்குமாரி (வெளிச்சம்), சப்திகா (அமலிப் பாட்டியின் ரயில் பயணம்), தங்க துரையரசி (14), மலர்விழி (எனக்குப் பிடிச்ச டீச்சர்), கி. அமுதா செல்வி (கரப்பான் பூச்சி), சர்மிளா (எவன் சொன்னது ராஜான்னு), சரிதா ஜோ (கிளியோடு பறந்த ரோகிணி), ரமணி (பூக்களின் நகரம்)-எனப் படைப்பாளிகள் பட்டியல் நீள்கிறது. படைப்பாளிகளில் ஆண், பெண் பேதமில்லை என்பதும் உண்மை. புதிய படைப்பாளிகள் பலரைப் பெண்களாகப் பார்க்கையில் இயக்கத் துக்கு இறக்கை முளைப் பதும் உண்மை.
வீதியும் கல்விக்கூடமும்
அறிவொளியின் மையம் வீதி. வாசிப்பு இயக்கத்தின் களம் பள்ளிக் கூடம். ஒன்றுக்கொன்று தொடர்பும் இருக்கிறது. வேறுபாடும் இருக்கிறது.
சமூகமும் பள்ளிக்கூட மும் சந்திக்க வேண்டும் என்பது கல்வி யாளர்கள் பலரின் விருப்பம். வாசி! வாசி! என்று கட்டளை இடுகிறது பள்ளி. வாசிக்கத் தெரியாவிட்டால் அது வருத்தம் கொள்கிறது.
இத்தகைய வருத்தம் அறிவொளியில் ஒருபோதும் வந்ததில்லை. அறிவொளியில் வாசிப்பு சார்ந்த வற்புறுத்தல் இல்லை. மாறாக, வாசிக்கும்போது, எழுதும்போது ‘குறுக்கே குறுக்கே பேசாதீங்க!’ என்று எங்கள் வாய்க்குப் பூட்டுப்போட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
இந்தச் சுதந்திரம் பள்ளிக்குள் வந்து விட்டால் எளிய வீட்டுக் குழந்தைகளுக்குப் பள்ளி ஒருபோதும் சுமையாக இராது. வாசிப்புக்கான தாகம் ஒவ்வொரு குழந்தை யிடமும் இருக்கிறது. தேவை- எளிய மொழி யில் படங்களுடன் சின்னஞ்சிறு புத்தகங்கள். இது அறிவொளி உணர்த்திய உண்மைதான். பள்ளி வாசிப்பு இயக்கமும் இதனையே திரும்ப உணர்கிறது. நாம் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான அம்சம் இது.
கட்டுரையாளர், அறிவொளி
முன்னாள் ஒருங்கிணைப்பாளர்;
‘நிறத்தைத் தாண்டிய நேசம்’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
smadasamy1947@gmail.com