

“சென்னையிலே குஜிலியின் முக்கில் ஒரு வீதிக்கு ஈவினிங் பெஜார் என்றும், அடுத்த வீதிக்கு தீவிங் (thieving) பெஜார் என்றும் பெயரிருந்தது.
இதை நான் முதலில் கவனித்தபோது உண்மை எவ்வாறிருப்பினும், ராஜதானி நகரத்திலே ஒரு வீதிக்கு தீவிங் பெஜார் ரோடு என்றிருப்பது நகரவாசிகளுக்கேனும் போலீஸாருக்கேனும் கௌரவம் தருவதன்று என்று நினைத்து, அப்பொழுது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர் மலோனி துரைக்கு அதைப் பற்றி எழுத, அவர் தீவிங் பெஜார் என்ற பெயரை குஜிலி பெஜார் என்று மாற்றினார்.”
- ஆ.மாதவையா தனது ‘பஞ்சாமிர்தம்' பத்திரிகை புரட்டாசி 1925 இதழில் எழுதியது.
இது மலை கோ.பட்டாபிராம முதலியார் ‘விஷ்ணு ஸ்தல மஞ்சரி' 1908-1912 இரண்டாம் பாகத்தில் கூறுவதாவது: “குஜிலிக் கடை, சைனா பஜார் வீதி - மாலைக் காலத்தில் எப்போதும் ஜன நெருக்கமுள்ள இவ்வீதியைப் பார்க்க வெகு வினோத விழாவாயிருக்கும். செலவழிக்க மனம் வராதவர்களும், வாங்கக்கூடிய துணிமணிகளும், கண் கவரும் பழ தினுசுகளும், பித்தளை வெங்கலப் பாத்திரங்களும், வாசனை திரவியங்களும், குடை ஜோடு கொம்பு தடிகளும், மிட்டாய் தினுசுகளும், புஸ்தகங்களும் மற்றும் பல வஸ்துக்களும் விற்கும் கடைகள் எண்ணிறந்தன.
வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல், அப்போதுக்கப்போது தங்களுடையே ஜேபியிலேயிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளை கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில் முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம். இங்கு விளக்கு வெளிச்சம் போராத குறையொன்றுண்டு. சென்னை நகர சபையார் இதைக் கவனித்து ஜியார்ஜ் அரசரின் உருவகச் சிலைக்கு எதிரில் அதிக வெளிச்சம் தரக்கூடிய கொத்து விளக்கு அமைக்கப் பெற்றால் வெகு நலமாயிருக்கும்”.
குஜிலி புத்தகங்கள்
கேளம்பாக்கம் அருணகிரி மதுரை முதலியார் மதராஸ் பட்டணத்தில் கந்த கோட்டத்தின் அருகில் உள்ள குஜிலி பஜாரில் ஒரு புத்தக விற்பனை நிலையத்தைத்தான் தொடங்கினார். பின்னரே னிவாசா அச்சகமும், ஷண்முகாநந்தா புத்தகசாலையும் உருப்பெற்றது என்றுரைக்கும் அவரது பேரன் தியாகராஜன், கந்தசாமி கோயிலையொட்டி வரிசையாக நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தக விற்பனை யாளர்களும் பதிப்பாளர்களும் கடைவிரித்த நாளை நினைவுகூர்கிறார். பின்னாளில் குஜிலி பஜார் புத்தகக் கடைகள் கோயில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டு, இரும்புக் கடைகளும் அதையொட்டிய இதர கடைகளும் அங்கே வந்தன என்று ஆதங்கம் கொள்கிறார். இங்கு பிரசுரிக்கப்பட்ட, விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களே குஜிலிகளாக பின்னாளில் புகழ்பெற்றன.
ஈவினிங் பஜார், ரத்தன் பஜார் சந்திப்பின் கிழக்கு முனையிலிருந்து தொடங்கி மேற்கில் வால்டாக்ஸ் சாலையை இணைக்கும் முக்கியமானதொரு தெரு ராசப்ப செட்டித் தெரு. இது கந்த கோட்டத்தையொட்டிய தெருவாகும். இத்தெருவின் குறுக்கில் வால்டாக்ஸ் சாலைக்கும் ரத்தன் பஜாருக்கும் இடையில் வடக்கு தெற்காக தேவராஜ முதலி தெரு, வெங்கடாசல ஆச்சாரி தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு ஆகிய தெருக்கள் செல்கின்றன. மேற்கில் நைனியப்ப நாயக்கன் தெரு, வடக்கில் ராசப்ப செட்டித் தெரு, கிழக்கில் வளைவான ஈவ்னிங் பஜார் சாலை ஆகியவற்றுக்குள் அடங்கிய முக்கோணப் பகுதியே குஜிலி பஜாரின் மையமாக இருந்திருக்கிறது.
இந்த குஜிலி கடைத்தெரு குறித்து அன்றைய தினம் பல்வேறு பத்திரிகைகளிலும் கதைகளிலும் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேபியிலுள்ள நோட்டுகளும், மடியிலுள்ள காசுகளும், மேலேயுள்ள அங்கவஸ்திரங்களும், ஸ்திரீகளின் கண்டமாலைகளும் இப்பகுதியில் உலவுபவர்களைக் கண்டால் மாயமாய்ப் போய்விடும். கோழி திருடிக் கூடவிருந்து குலாவுவதுபோல், இவர்கள் மிகவும் பரிதபித்து ‘படவாவைப் பிடி பிடி அதோ ஓடுகிறான், கழுதை அடி அடி' என்று கூவிப் போக்குக் காட்டும் வேலையில்லாதோர் பற்றிய அபிநவக் கதைகளை ‘முச்சந்தி இலக்கிய'த்தில் ஆ.இரா.வேங்கடாசலபதி சுவைபடக் கூறியுள்ளார்.
1900 வாக்கில் மூர் மார்க்கெட் செயல்படத் தொடங்கிய போதும், பிரசித்தி பெற்ற வர்த்தக மையமாக அது மாற்றம் கண்டது நாற்பதுகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பதுகளில் குஜிலி பஜாரில் உள்ள புத்தக வியாபாரிகளின் இடப்பெயர்வு, பெரும் மக்கள் மையமாக இருந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்ததோடு மட்டுமின்றி. குஜிலி பஜாரின் அபகீர்த்தி வாய்ந்த அனைத்து அம்சங்களையும் மொத்தமாக உள்ளடக்கியதாலோ என்னவோ, பின்னாளில் மூர் மார்க்கெட்டுக்கு மவுசு கூடியது.
- கட்டுரையாளர், சென்னை வரலாற்றாய்வாளர்