மதுக்கரை மகாராசாவும் அரிசிக் கொம்பனும் என்ன சொல்ல வருகின்றன?

மதுக்கரை மகாராசாவும் அரிசிக் கொம்பனும் என்ன சொல்ல வருகின்றன?
Updated on
4 min read

ஆற்றோரங்களில் செழித்து வளரும் நீர்மத்தி மரங்கள் குறித்துக் கணக் கெடுப்பதற்காக முதுமலையில் உள்ள மாயாற்றிலும் அதன் துணை ஆறுகளிலும் கடந்த வாரம் களப்பயணம் மேற்கொண்டிருந்தோம். இம்மரங்கள் பாறுக் கழுகுகள் கூடமைக்க ஏற்றவை என்பதும் எங்கள் பயணத்திற்கான கூடுதல் காரணம்.

இம் மரங்கள் ஆங்காங்கே பட்டுப்போய்விட்ட தற்கு என்ன காரணம்? தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கியதாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்று அறிந்து வருவதற்காக ஆற்றோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, நாங்கள் சென்ற வழியில் யானைக் கூட்டம் ஒன்று கன்றுகளுடன் மேய்ந்துகொண்டிருந்தது. நான்கு யானைகளும் இரண்டு கன்றுகளுமே அக்கூட்டத்தில் இருந்தன. சுமார் 55 முதல் 60 யானைகள் கூட்டமாக இருந்த காட்சியைப் பார்த்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன.

கன்றுடன் அவை ஆற்றோரத்தில் மேய்ந்துவந்த காட்சியைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆயினும் இருட்டுவதற்குள் 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்குமிடத்தை நாங்கள் அடைந்தாக வேண்டும் என்பதால், அங்கிருந்து எப்படிப் பாதுகாப்பாகச் செல்லலாம் என யோசித்தபடி நின்றுகொண்டிருந்தோம். யானைகள் மேய்ந்துகொண்டிருக்கும் பாதை வழியாகத்தான் நாங்கள் போயாகவேண்டும். மாற்று வழியில் செல்லலாம் என்றால், அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டது.

இன்னும் அரை மணி நேரத்திற்குள் இருட்டி விடும் என்பதாலும் கூடுதலாக 4 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வேண்டும் என்பதாலும் சற்றுப் பொறுத்திருந்தோம். மனிதர்கள் இருப்பதை உணர்ந்த அக்கூட்டத்தின் தலைவி, தனது கூட்டத்தாருக்குச் சங்கேத மொழியில் உத்தரவிட, அந்த இடத்தை விட்டு அவை நகர்ந்தன. நாங் களும் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் எங்கள் இருப்பிடத்தைப் பாதுகாப்பாகச் சென்றடைந்தோம்.

வெறுப்பு மனநிலையின் வித்து

அடுத்த நாள் எதிர்பாராத வேளையில் யானை ஒன்று காலை 8.30 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த முகாமைக் கடந்து சென்றது. யானையைப் பார்த்த நாய்கள் குரைத்தன. அந்த ஒலி யானைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வாலைத் தூக்கிக்கொண்டு பிளிறியபடியே சாலையைக் கடந்து ஓடையைத் தாண்டிக் காட்டுக்குள் செல்ல முயன்றது. இதைச் சற்றுத் தொலைவிலிருந்து கவனித்த சுற்றுலா சவாரி வந்த ஆறேழு ஜீப்புகள், யானை சென்ற பாதையை முற்றுகை இட்டன. செல்பி எடுக்கவும் ஒளிப்படம் எடுக்கவும் முண்டியடித்துச் சுற்றுலாப் பயணிகள் முன்னேறிச் சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடம் பரபரப்பாகிவிட்டது. அந்தக் காட்சியைத் தங்களது கைபேசியிலும் ஒளிப்படக் கருவியிலும் படம்பிடித்த பலரும் தங்களை யானை துரத்தியது என்று சமூக ஊடகத்தில் அன்றைக்கே வைரலாக்கி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

யானைகள் குறித்து வைரலாகி வரும் ஒளிப்படங்களும் காணொளிக் காட்சிகளும் பெரும்பாலும் புழுதி பறக்கக் கடுங்கோபத்துடன் பிளிறியபடியும் துரத்தியபடியும் வரும் காட்சியைக் காட்டுபவையாகவே இருக்கின்றன. மனித மனம் இதைத்தான் விரும்புகிறதா? யானை தனது குட்டியுடன் விளையாடும் காட்சிகள், இயற்கைச் சூழலில் தனது கூட்டத்துடன் மேயும் காட்சிகள், இயல்பான அதன் நடவடிக்கைகள் ஏன் பெரும்பாலான மனிதர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுபவையாக இல்லை? அவை படும் அவலங்கள் ஏன் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை?

காட்டிற்குச் சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் ஏதாவது சாகசம் செய்வதுபோல் தங்களை முன்னிறுத்திக்கொண்டே காட்டைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள். தங்களை ஹீரோ வாகக் காட்ட மயிர்க்கூச்செறியும் கதைகளையே சொல்லிச் சொல்லி காட்டு விலங்குகள் குறித்து ஒருவித வெறுப்பு மனநிலையைத் தொடர்ந்து ஏற்படுத்தி விடுகிறார்கள்.

உணவுக்கு எங்கே போகும்?

அந்த வாரம் முழுவதும் முதுமலைக் காட்டின் பல்வேறு இடங்களுக்கும் செல்ல நேர்ந்தது. காட்டின் பெரும்பாலான பகுதிகள், அதாவது சுமார் 45 விழுக்காடு பரப்பளவு யானைகள் விரும்பி உண்ணாத களைச்செடிகளான பார்த்தீனியம், தகரை, உன்னிச்செடி, சப்பாத்திக் கள்ளி, சீமைக் கருவேலம் உள்ளிட்டத் தாவரங்கள் சுற்றி வளைத் திருந்தன. இப்படியிருந்தால் யானைகள் உணவுக்கு எங்கே போகும்? தீவனத்தைத் தேடி காட்டை விட்டு வெளியே வந்துதானே ஆக வேண்டும்.

தற்போது இந்தச் சிக்கலைக் களைய வனத்துறையினர் சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அங்கு புல் விதைகளைத் தூவும் முயற்சியில் ஈடுபட்டுவருவதை முதுமலைக் காட்டில் பார்க்க முடிந்தது. ஆயினும் இதற்கென ஒதுக்கப்படும் நிதி வெகு சொற்பமே. ஆண்டுக்குச் சில நூறு ஹெக்டேர்களில்தாம் இந்த வேலை நடைபெறுகிறது. அதுவும் சீமைக் கருவேலம் அகற்றப்பட்ட இடத்தில் தொடர்ச்சியாகக் களைச்செடிகள் வளராமல் பராமரிக்கப் படுவதில்லை. இதனால் சீமைக் கருவேல மரங்கள் தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம், மீண்டும் அந்நியக்களைச் செடிகளும் சீமைக் கருவேலமும் ஏகத்துக்கு வளர ஆரம்பித்துவிடுகின்றன.

யானைகள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்களான அகழி வெட்டுதல், மின்வேலி அமைத்தல், விடுவித்த யானைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காகச் சிறுபடையே தொடர்ந்து ஜீப்பில் சுற்றுதல் உள்படப் பல திட்டங்கள் யானைக்குக் கேடாகவே இருக் கின்றன. யானைகளின் உரிமையில் இவை தலையிடுகின்றன

இயல்பை இழந்துவிட்டோம்

தற்போதுப் புதுப் புது இடங்களில் எல்லாம் யானைகள் வலம்வர ஆரம்பித்துள்ளன. அண்மையில் யானைகளால் தாக்குதலுக்கு உள்ளாகி இறக்க நேரிட்ட பெரும்பாலான மரணங்கள், மனிதர்களது கவனக்குறைவாலேயே நேர்ந்துள்ளன. குறிப்பாக கைபேசியில் பேசியபடியே செல்வது, பாட்டுக் கேட்டுக்கொண்டும் கைபேசியைப் பார்த்துக்கொண்டும் செல்வது என்பது போன்ற காரணங்களை அடுக்கலாம். இளம் தலைமுறையினரிடம் இந்தப் போக்குக் கூடுதலாகவே காணப்படுகிறது.

யானைகளுடன் ஒருவித எச்சரிக்கை உணர்வுடனும், இயைபுத்தன்மையுடனும் தானே இத்தனை ஆண்டுக் காலம் மனிதகுலம் வாழ்ந்து வந்தது. அந்த இயல்பான சகிப்புத்தன்மை இப்போது குறைந்துவிட்டதா? யானைகள் தப்பித்தவறி ஊருக்குள் வந்துவிட்டால் யானையைப் பிடித்துக் காட்டுக்குள் விடவேண்டும் என்கிற கூக்குரல் எழுகிறது. யானைகள் எதிர்த்துக் கேள்வி கேட்காது என்பதால் தலைவர் ஆக வேண்டும் என நினைக்கும் நபர்கள் திடீரென இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்கேற்ப அரசும் யானையைப் பிடித்துக் காட்டில் விட முற்படுகிறது. அப்போதும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. எங்கள் காட்டுக்குள் யானையைக் கொண்டுவந்து விடாதீர்கள் என்று எதிர்க்குரல் எழுகிறது. போதாக்குறைக்கு இது கர்நாடக யானை, இது கேரள யானை என்கிற பிரிவினை வேறு.

நாங்கள் சென்று வந்த அதே பகுதியில்தான் கடந்த ஆண்டு கோயில் திருவிழாவைக் காணவந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நான்கு பேர் மரணமடைந்தனர். இதே மரணம் யானையால் நேர்ந்திருந்தால் அந்தப் பக்தர்கள் கூட்டம் சும்மா இருந்திருக்குமா? அந்த யானையைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று மறியல் செய்திருப்பார்கள், இல்லையா?

வாழ்வா? சாவா?

இந்தக் காடு யானைகளுக்குமானதுதான் என்று ஏன் நம் மனம் ஒப்புக்கொள்வதில்லை. இந்த மனமாற்றத்திற்கும் தற்போது அதிகரித்துவரும் பிணக்குகளுக்கும் என்ன காரணம்? ஒன்றிரண்டு காரணங்களை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

முன்பு ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. அதனால் அறுவடைக்குப் பின்னர் யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அந்த இடத்தை மேய்ச்சலுக்குப் பயன்படுத்திவந்தன. அந்தக் காலகட்டத்தில் மனிதர்களுக்கும் விலங்கு களுக்கும் பாதுகாப்பான இடைவெளி இருந்தது. இன்று ஆழ்துளைக் கிணறு போட்டு முப்போகமும் வேளாண்மை செய்வதால், யானைகள் போக இடமின்றித் திக்குமுக்காடுகின்றன. தண்ணீர் தேடி ஆற்றோரமோ அணையோரமோ சென்றால் அங்கும் பொதுப்பணித் துறை உதவியுடன் தண்ணீர் வற்றுமிடங்களிலெல்லாம் வேளாண்மை செய்யப்பட்டுவருகிறது. போதாக்குறைக்கு மின்வேலிகளும் ரயில் பாதைகளும் இடர்படுகின்றன. இதனால் அவை ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்கிற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?

யானைகள் வாழ்வாங்கு வாழப் பல்வேறு கூட்டுமுயற்சிகள் தேவை. பெருகிவரும் மக்கள்தொகையையும் யானைகளின் எண்ணிக்கையையும் கருத்தில்கொண்டு பல்வேறு தொடர்நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவேண்டும்.

குறிப்பாக, தண்ணீர் வற்ற வற்ற அணைக்கட்டுப் பகுதியில் வேளாண்மை செய்வதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும்.யானை தண்ணீர் குடிக்க வரும் இடங்களைக் கண்டறிந்து எளிமையாக வந்து செல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்.

அந்நியக் களைச்செடிகளை அகற்றி இயற்கையாக வளரும் புல் வகை, மூங்கில் உள்ளிட்டத் தாவரங்கள் வளர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

யானைகளுடன் எப்படி எச்சரிக்கையாகவும் அதே நேரம் இயைந்தும் வாழவேண்டும் என்று காட்டுக்கு அருகிலிருக்கும் பள்ளிகளுக்கும் மக்களுக்கும் வாழ்க்கை முறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது யானைகளின் உணவுப் பழக்கவழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எளிமையாக கிடைக்கிறது என்பதற்காக அரிசியையும் வேளாண் பயிர்களையும் வீட்டில் வைத்திருக்கும் காய்களையும் அவை உண்டு பழக ஆரம்பித்துவருகின்றன. இவற்றைத் தொடரவிடாமல், இப்பழக்கத்திற்கு ஆட்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.

வருங்காலத்தில் யானை மனிதப் பிணக்குகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதைக் கருத்தில் கொண்டு காலாவதியாகும் தேயிலைத் தோட்டங் களின் பெரும்பாதியை மறுபடியும் காடாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது யானை களுக்கு மட்டுமல்ல வருங்காலத் தலைமுறைக்கும் பயன்தரும் பேருதவியாக அமையும்.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில்தான் பெரும் நெருக்கடிகளுக்கு நடுவே யானைகளும் புலிகளும் சிங்கங்களும் வாழ்ந்துவருகின்றன. எனவே, இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை.

- சு.பாரதிதாசன்
கட்டுரையாளர், காட்டுயிர் எழுத்தாளர்- பாறுக் கழுகுப் பாதுகாப்பு செயல்பாட்டாளர்

arulagamindia@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in