இலக்கிய நண்பர்கள்

இலக்கிய நண்பர்கள்
Updated on
2 min read

தமிழ்ச் சங்க இலக்கியம் நட்பைப் பாடியுள்ளது. கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் உள்ள நட்பு அதற்கோர் உதாரணம். பாகவத புராணத்தில் கண்ணனுக்கும் சுதாமாவுக்குமான நட்பும் பிரசித்திபெற்றது. பிற்கால இலக்கியத்தில் இம்மாதிரியான காவியத் தன்மையுடைய நட்புக் கதைகள் உருவாகவில்லை. உணர்ச்சிமயத்திலிருந்து கதைகள் விடுபட்டுவிட்டது, அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எழுத்தாளர்கள் இணை, இலக்கியத் துறையில் நண்பர்களாக இயங்குவது என்கிற போக்கு பின்னால் உருவானது.

தமிழ் எழுத்தாளர்களில் புகழ்பெற்ற இணை, சுபா. சுரேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய கல்லூரிக்கால நண்பர்கள் இருவர் இணைந்து ‘சுபா’ என்கிற பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினர். துப்பறியும் கதை உலகில் இவர்கள் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தனர். 1979இல் எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளைக் கடந்து அதே நட்புடன் இன்றும் இருவரும் எழுதி வருகிறார்கள். ‘அயன்’, ‘கோ’ போன்ற வெற்றிப் படங்களின் கதை கள், இந்த இணை எழுத்தாளர்களின் பங்களிப்பே.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் நன்கு அறியப்பட்ட மற்றொரு நட்பு இணை, பிரேம் - ரமேஷ். தமிழில் பின்நவீனத்துவம் என்கிற சித்தாந்தத்தைக் கசடற அறிமுகப்படுத்தியவர்களுள் இவர்கள் முக்கியமான வர்கள். இவர்கள் இணைந்து எழுதிய கவிதைகள் தமிழ் நவீனக் கவிதைத் தளத்தில் பாதிப்புகளை விளைவித்தன. ‘சொல் என்றொரு சொல்’ உள்ளிட்ட நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளனர். ஆனால், இந்த இணை 2007 முதல் பிரிந்து தனித் தனியாக எழுதத் தொடங்கிவிட்டனர்.

நவீனத் தமிழ்க் கவிதையில் புதிய அலை ஒன்று 70களில் உருவானது. அதற்குத் தொடக்கம் குறித்தவர்களில் கவிஞர்கள் ஆனந்தும் தேவதச்சனும் பிரதானமானவர்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து ‘அவரவர் கைமணல்’ என்கிற பெயரில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர். இந்தத் தொகுப்பு 'நவீன கிளாசிக்'குளில் ஒன்று.

கோவில்பட்டிக்கு அருகில் இடைச்செவல் என்கிற கிராமத்தில் ஒரே தெருவில் பிறந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும் பால்யம் முதலே இணை பிரியா நண்பர்கள். அழகிரிசாமி வேலை கிடைத்து வெளியூருக்குப் போன பிறகு தன் நண்பனைப் பார்க்காமல், பேசாமல் சங்க இலக்கியப் பெண்கள்போல் புலப்பித் தள்ளியிருக்கிறார். ‘ஆபீஸ் முடிந்தததும் வேறெங்கும் போகாமல் ஒரு தனியிடத்துக்கு வந்துவிடுவேன். ராஜநாராயணனைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி சொல்லி முடியாது. ஒரு சங்கீதம் கேட்கிற மாதிரி இருக்கிறது' என அழகிரிசாமியே அதைப் பற்றி எழுதியிருக்கிறார். இவர்கள் இருவருமே சாகித்திய அகாடமி விருதுபெற்றவர்கள் என்பதும் விசேஷமானது.

எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமிக்கும் கிருஷ்ணன் நம்பிக்குமான நட்பும் தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்ட ஒன்று. பராரிகளாகச் சுற்றித் திரிந்த எழுத்தாளர்கள் கோணங்கி - எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் இலக்கியத்துக்குச் சில கதைகளைக் கொடுத்துள்ளன. இலக்கிய வாதிகள் பொதுவாகத் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள் எனச் சொல்வோர் உண்டு. அதையும் தாண்டி இந்த நட்புகள் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளன; நட்புக்கும் இலக்கணமாயின.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in