

எனது பால்யகாலத்தில் என்னுடைய தாயார் ஆடிப் பெருக்கன்று நதிக்கரையில் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் பூஜை செய்த மஞ்சள் நீரை வீட்டுப் புறக்கடையிலிருக்கும் செடிகொடி களுக்கும் மரங்களுக்கும் ஊற்றுவார். வாசலில் அழகான கோலமிட்டு, பிறகு, மஞ்சள் சரடைச் சுற்றி கஞ்சி, தேங்காய்ப்பால், வடை ஆகியவற்றை வைத்து அலங்கரித்து பூஜைகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.
திருமணமான பெண்கள் ஆடிப்பெருக் கன்று தாலிபிரித்துக் கோக்கும் முக்கியச் சடங்கின் அற்புதத்தை எனது புனைவுகளில் எழுதியிருக் கிறேன். காவிரி நதி சார்ந்து இலக்கியம் படைத்த என் முன்னோடிகள் தி.ஜானகிராமனையும் கு.ப.ராஜகோபாலனையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
பெண்களின் விழா
தமிழக வரலாற்றில் தொன்மங்களின் கூறுகளாகப் பண்பாடு சார்ந்தும், பண்டைய தமிழர்களின் மரபு சார்ந்தும் தொன்றுதொட்டுப் பல விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அப்படி நடக்கின்ற விழாக்களில் ஒன்றுதான் ஆடிப் பெருக்கு விழா. பாமர மொழியில் ‘ஆடி பதினெட்டாம் பெருக்கு’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆடி பதினெட்டாம் நாள் நடக்கின்ற சிறப்பான விழா இது.
தமிழர்கள் கொண்டாடுகிற விழாக்களில் தேதி பார்த்து நடக்கிற விழாக்களாக ஆடிப் பெருக்கையும் தை ஒன்றாம் நாள் நடக்கிற அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையையும் சொல்லலாம். மற்றவை நாள், நட்சத்திரம் பார்த்து நடக்கிற விழாக்களாகவே இருக்கின்றன.
ஆடிப் பெருக்குத் திருநாளை ‘சப்தகன்னி’களுக்கு நடத்தப்படுகிற ஒரு விழாவாகவே வரலாறு காட்டுகிறது. முழுக்க முழுக்க பெண்கள் சார்ந்து நடத்தப்படுகிற ஒரு விழா இது. ‘ஆடி அமாவாசை’, ‘ஆடி வெள்ளி’, ’ஆடிப் பிறை’, ‘ஆடிக் கார்த்திகை’, ‘ஆடிப் பூரம்’ ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.
ஆடியும் வேளாண்மையும்
‘ஆடிப் பிறையைத் தேடிப் பார்’ என்றொரு பழமொழி புழக்கத்தில் இருக்கிறது. பிறையின் வடகோடி உயர்ந்திருந்தால் அவ்வருடம் ‘வெள்ளாமை’ உயர்ந்திருக்கும் என்பதும் தென்கோடி உயர்ந்திருந்தால் ‘வெள்ளாமை’ தாழ்ந்திருக்கும் என்பதும் நம்பிக்கை. ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்த காலங்களெல்லாம் உண்டு. இன்றைக்கு அப்படியில்லை.
தமிழகத்தில், குறிப்பாக ‘டெல்டா’ பகுதிகளில் ஆடியில் காற்றடித்தால் குடகுமலைச் சாரலில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி புனல் பெருகி காவிரியின் பதினெட்டுப் படிகளில் நிரம்பி நீர் ஓடும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பர். அவ்வளவு காற்று ஆடியில் மட்டுமே அடிக்கும். ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும் என்பதும் நம்பிக்கைதான். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிந்து காவிரியில் நீர் பெருகிவரும் அந்த ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்தால் தை மாதத்தில் அறுவடையைப் பார்க்கலாம். அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
வழிபாடு
ஆடி மாதத்திற்கு முன்னோ பின்னோ திருமணமான பெண்களுக்குத் தாலி பிரித்துக் கோக்கும் சடங்குதான் முக்கிய அங்கம் வகிப்பதாயிருப்பதோடு, ஏற்கெனவே திருமணமான சுமங்கலிகளும் தங்கள் கழுத்தில் அணிந்திருக்கிற தாலியை அவிழ்த்துப் புதுக் கயிற்றில் அணிந்துகொள்ளும் பழக்கமும் இருக்கிறது.
ஆடிப் பெருக்கை வழிபட நதிக்கரைக்குச் செல்லும் பெண்கள் சடங்கு நடைபெறும் இடத்தைத் தூய்மை செய்து சாணத்தால் மெழுகியதும் தலைவாழை இலை பரப்பி, சர்க்கரைப் பாகுடன் எள், ஏலம், தேங்காய்ச்சில் சேர்த்துக் கலந்த காப்பரிசியில் பிள்ளையார் பிடித்து சந்தன குங்குமத்தில் பொட்டிட்டு, பிள்ளையாருக்கு உகந்த பூவுடன் அருகம்புல் மாலையிட்டுப் படையலில் மங்கலப் பொருள்களுடன் வெற்றிலை பாக்கு பழங்களுடன் வகைவகையான காப்பரிசிகளும் வைக்கின்றார்கள். அதோடு படையலில் வைக்கப்படும் முக்கியப் பொருள்களாகவும் ஆற்றில் விடுவதற்காகவும் காதோலை கருகமணியும் எலுமிச்சையும் இடம்பெறுகின்றன. பித்ருக்களை வழிபடும் இடமாகவும் இது பார்க்கப்படுகிறது.
‘ஆட்டணத்தி’ என்கிற தலைவனும் ‘ஆதிமந்தி’ என்கிற தலைவியும் ஆடிப் பெருக்கு அன்றைக்கு நீராடுவதற்காக நதியில் இறங்கியபோது நீரில் சென்றுவிட்டதாகச் செவிவழி செய்தி இருக்கிறது. சேரனுக்கு உகந்த மாலை ‘பனம்பூ’ மாலை. அதனால் சேரன் ஆட்டணத்திக்குப் ‘பனை ஓலை’யும் ஆதிமந்தி விருப்பத்துடன் அணியும் கருகமணியும் சேர்த்தே ஆற்றில் விடப்படுவதாக ஐதிகம் இருக்கிறது.
நீரும் நம்பிக்கையும்
நீரை வழிபடுவதற்கான மாதமாக இது கொண்டாடப் படுவதைப் போல் வெக்கை தணிந்த மாதமாகவும் இது போற்றப்படுகிறது. இதோடு வேம்பைக் கொண்டாடும் மாதமாகவும் இது அமைந்திருக்கிறது. நிறைய பிள்ளைச் செல்வங்களைப் பெற்ற குடும்பத்தார்கள் கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு ‘போதும் செல்வம்’ என்று பெயரிடுவார்களாம். அதேபோல் ஆடி மாதத்தில் பிறக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு ‘வேம்பு’ என்று பெயரிடுவதும் ஆண்பிள்ளைக்கு ‘வேம்பையன்’ என்று பெயரிடுவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
திருமணம் ஆன பெண்களும் ஆகாத பெண்களும் நதிக்கரையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள் என்றால், அது ஆடிப் பெருக்கு அன்று மட்டுமே. அந்த வழிபாட்டில் திருமணம் ஆகாத பெண்கள் சாதம், வெல்லம், தேன், காதணிகள், கறுப்பு நிற மாலைகள் போன்றவற்றைச் சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம் தங்கள் விருப்பம்போல் கணவனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கில் வழிபாடு செய்யும் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும் என்பதும் திருமணமான பெண்களின் கணவன்மார்களுக்கு ஆயுள் விருத்தியடையும் என்பதும் நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.
திருமணமான ஆண்களை ஆடிப் பெருக்கு அன்று அவர்களது மாமியார்கள் அழைத்துப் புத்தாடைகள் பரிசாக வழங்குவது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்துவருகிறது. திருமணமான பெண்கள் ஆடி பிறப்பதற்கு முன்பே அவர்களின் பெற்றோர் இல்லம் சென்று மாதம் முழுவதும் தங்கிக்கொள்வது புழக்கத்தில் இருக்கிறது. ஆடியில் ‘கரு’ உண்டானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பதாலேயே இந்தக் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார்கள்.
வளம் பெருகும்
ஆடிப் பெருக்கன்று பலவிதமான அரிசி வகைகளை நிவேதனமாகப் படைக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயிகள் ‘மாப்பிள்ளை சம்பா’, ‘சண்டிகார்’, ‘சிறு மணியன்’ போன்ற பலவிதமான நெல் வகைகளை நிலத்தின் குறைவான பகுதியில் மட்டும் பயிர்செய்து விளைவிப்பார்கள். காவிரித் தாய்க்குப் படைக்க உகந்தது என்கிற கொள்கையால் மட்டுமே இது நடக்கும். இந்த மாதிரி வகைகளைச் சமைப்பதற்குப் பயன்படுத்த மாட்டார்கள். ஆடிப் பெருக்கை அரிசிகளின் திருவிழா என்றும் அழைக்கலாம். அழிந்து போயிருக்கும் இம்மாதிரியான நெல் வகைகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்.
பழையன மறந்து புதியன பிறப்பதற்காகச் செல்வத்தையும் செழிப்பையும் தருவதாக அசைக்க முடியாத நம்பிக்கையை ஆடிப் பெருக்கு தருகிறது. விதைகள் விதைப்பதற்கும் மரக்கன்றுகளை நடுவதற்கும் ஏற்ற மாதமாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. வருண பகவான் நீரின் வடிவில் அருள்கொடைகளைப் பொழி கின்றார். ஆடியில் பயிரிட்டு தை மாதம் அறுவடை செய்யும் உயிர் இயக்கத்தின் முதல் தொடக்கமாக ஆடிப் பெருக்கு நாள் அமைகிறது.
நீர்ச் சடங்குகள் பொருள் சார்ந்த நன்மைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல மனிதர் வாழ்வில் நீர் வகிக்கும் பங்கையும் புரிந்துகொள்ளவே கொண்டாடப்படுகின்றன. எதிர்காலச் சந்ததியினர் புரிந்துகொள்ளவும் இதை நடைமுறைக்குக் கொண்டு வரவும் ஆடிப் பதினெட்டாம் பெருக்குத் திருநாளை நமது முன்னோர்கள் கொண்டாடியதைப் போல் இப்போதும் கொண்டாடப்பட வேண்டும்.
நதித் தீரங்களிலும் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளிலும் கொண்டாடப்பட்ட இவ்விழாவானது வறண்ட சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் குழாயடிகளிலும் கிணறுகளிலும் கொண்டாடப்பட்டுவருவது கவலை அளிக்கிறது.
நீரும் மண்ணும் பயிரும்தான் நம் மக்களை இயங்க வைக்கும், இயக்கவும் வைக்கும். வணிகர்களுக்கு ஆடித் தள்ளுபடி. நமக்கோ நல்ல காரியங்கள் செய்வதற்கு ஆடி தள்ளுபடி. ஆடியும் மார்கழியும் இறைவனுக்கும் இறைவிக்கும் உகந்த மாதங்கள் என்பதாலும் அவர்களைக் கொண்டாடி குதூகலிக்க வைக்க வேண்டும் என்பதாலுமே நல்லன செய்வதற்கு இடமளிக்கவில்லை என்று தோன்றுகிறது. நீரையும் பாலையும் இன்று ஒரேவிலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டிருக்கிறோம். இக்கொடுமைகள் அகலவும் நதித் தீரங்களில் வற்றாத மழை பொழிந்து நீர் பெருகவும் அதனால் பயிர்கள் செழிக்கவும் வளம் பெருகவும் ஆடியை ஆடிக் களிப்போம்! நீரின்றி அமையாது உலகு!!
- சி.எம்.முத்து
கட்டுரையாளர் - எழுத்தாளர், ‘மிராசு’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்