

ஆறுகள் செழித்திருக்கும் ஊர்களில் பதினெட் டாம் பெருக்கு கொண் டாட்டமாக அமையும் போது பாலாறும் அதன் கிளை ஆறுகளும் ஆடி பிறந்துவிட்ட பிறகும்கூடக் கரைதொட்டுச் சுழித்தோடுவது அரிது. வருடத்தின் பெரும்பாலான நாள்கள் வறட்சியை மட்டுமே காணும் வட தமிழகத்தின் பல ஊர்களில் ஆடி மாதம் குலதெய்வ வழிபாட்டுக்காக ஒதுக்கப்படும். சிலர் கன்னிகளுக்கும் சிலர் காட்டேரி, முனீஸ்வரன் உள்ளிட்ட சிறு தெய்வங்களுக்கும் பொங்கல் வைப்பார்கள். பெரும்பாலும் தங்கள் கழனிகளில்தாம் பொங்கல் வைப்பார்கள். கோயில்கள் பெருகிவிட்ட இந்நாளில் கோயில்களிலும் பொங்கல் வைப்பதுண்டு.
பிற ஊர்களைப் போலவே வட பகுதியிலும் ஆடி வெள்ளி சிறப்புக்குரியது. வெள்ளிதோறும் அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். மூன்றாம் வெள்ளி ஜாத்திரையோடு கொண்டாட்டம் நிறைவுக்கு வரும். அம்மனை அலங்கரித்து ஊருக்குள் அழைத்துவருவார்கள். சாமி ஊர் சுற்றி முடித்துக் கோயிலில் நிலைகொண்டதும், ஊர் பொதுவெளியில் ஆட்டம் நடைபெறும். ரேணுகாதேவி சரித்திரம் உள்ளிட்ட அம்மன் கதைகளையே தெருக்கூத்தாக நடிப்பார்கள். ஆடி வெள்ளியில் அலகு குத்திக்கொண்டும், வேப்பஞ்சேலை அணிந்துகொண்டும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவோர் உண்டு.
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டையைச் சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் சித்திரையில் நடைபெறும் அக்னி வசந்த விழா, மயானக் கொள்ளை போன்ற சிலவற்றைத் தவிர்த்துப் பெரும்போக்கான விழாக்கள் குறைவு. எல்லாமே சிறு அளவிலான குடும்பக் கொண் டாட்டங்களாக இருக்கும். இந்தப் பகுதியில் ஆடியில் அம்மனுக்குக் கூழ் வார்த்தல் நடைபெறும். வீடுகளில் கூழ் ஊற்றுவோர் ஞாயிற்றுக்கிழமையில் அதை நிறைவேற்றுவார்கள். அன்றைக்குக் கூழுடன் பொங்கச்சோறு, கருவாட்டுக்குழம்பு, வேர்க்கடலையைச் சேர்த்துச் செய்யும் முருங்கைக்கீரை பொரியல், கொழுக்கட்டை, துள்ளுமாவு (பச்சரிசி மாவில் வெல்லமும் வேப்பிலையும் கலந்து வைப்பார்கள்) ஆகியவற்றைப் படையலிடுவார்கள். சென்னைப் பகுதிகளில் சிலர் கறிக்குழம்பு வைத்தும் படைக்கிறார்கள்.
ஆடி அமாவாசையிலும் ஆடிக் கிருத்திகையிலும் வடை, பாயசத்துடன் சோறு உண்டு. இது குன்றுகள் சூழ்ந்த பகுதி என்பதால் ஆடிக் கிருத்திகையில் முருகனுக்குக் காவடி எடுப்பார்கள். பொதுவாக வள்ளிமலை, ரத்னகிரி உள்ளிட்ட முருகன் கோயில்களுக்குச் சென்றுவருவார்கள். காவடி, பால் காவடி, மயில் காவடி என அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப காவடி எடுப்பார்கள்.
கிணற்றுப் பாசனத்தையும் ஏரிப் பாசனத்தையும் நம்பியிருக்கும் பகுதிகளில் சித்திரை, வைகாசியில் விதைப்பு இருக்கும். ஆடியில் களையெடுப்பு நடக்கும். வீடுகளிலும் கழனிகளின் வரப்போரங்களிலும் அவரை, பூசணி, சுரை விதைகளை ஊன்றுவார்கள். இப்போது நட்டால் பொங்கலுக்குக் காய்த்துவிடும். நாட்டுக் காய்களையும் தானியங்களையும் சேர்த்துச் செய்யப்படும் கொட்டைக் குழம்புக்காக இவை விதைக்கப்படும். கலாச்சாரப் பரவல் காரணமாகச் சில வீடுகளில் ஆடிச் சீர், ஆடிப் பெருக்கு போன்றவற்றையும் தற்போது கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.