பதினாறு கண்ணுடையாள் எங்கள் தாய்...

பதினாறு கண்ணுடையாள் எங்கள் தாய்...
Updated on
1 min read

நாளேடுகளிலும் வானொலி, தொலைக்காட்சி செய்திகளிலும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிலவரத்தைத் தேடிக்கொண்டிருந்த காவிரிப் படுகை மக்கள், இன்று மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிட்டனர். வண்டலைக் குவித்து வளம் சேர்த்த காவிரி, காலத்தின் கட்டளைக்காகக் காத்து நிற்கிறாள்.

ஆறுகளின் அருங்குணங்களுக்கு விதிவிலக்கு இன்றி, காவிரியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடி, பேரழிவுகள் நிகழ்ந்தது உண்டு. நூறாண்டுகளுக்கு முன்னர் 1924இல் காவிரி ஓடிவரும் வழியெல்லாம் பெருவெள்ளம். கணக்கிடவியலா பேரழிவு. அன்று பாடப்பட்ட வெள்ளச் சிந்துகள் இன்னும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. திருச்சியில் மலைக் கோட்டைக்குச் செல்லும் பெருங்கதவு வரையில் தண்ணீர் தேங்கி நின்றதை அன்றைய பத்திரிகைச் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

படுகையை நோக்கி அவ்வப்போது பாய்ந்து வந்த வெள்ளம், மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. முறை வைத்து விடப்பட்ட தண்ணீரால் பாசனப் பரப்பும் விரி வடைந்தது. தஞ்சைக்குத் தெற்கே பட்டுக்கோட்டை வரையில் வானம் பார்த்த பூமியாகக் கிடந்த, பெயரில் மட்டுமே வளநாடுகளைச் சுமந்துகொண்டிருந்த ஊர்கள் ஒரு நூற்றாண்டுக்குள் உழைப்பின் பெருமையை அறுவடை செய்திருக்கின்றன. அது நான்கைந்து தலைமுறைகளுக்கு உள்ளேயே முற்றுப்பெற்றுவிடுமோ என்கிற அச்சம் எழுந்தபடியிருக்கிறது.

தெளிவாகக் கட்டமைக்கப்பட்டது, புது ஆற்றின் பாசனப் பரப்பு. ஆனால், அணையிலிருந்து உரிய நேரத்தில் நீர் வந்தால் மட்டுமே விவசாயத்திற்கு உறுதி சொல்ல முடியும். எதிர்பாரா பெருமழை இடர்கள் தனி.

கடைமடையினும் கடைமடையாக ராஜாமடம் அருகே கடலோடு சேரும் பாசன வாய்க்கால்களை மட்டுமே நம்பி மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் மனிதர்களும் மாடுகளும் மரங்களும் தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரியைப் பொங்கிவரும் புது வெள்ளமாகவோ, ஆர்த்தெழுந்து வீழும் அருவியாகவோ இந்தக் கடைமடை மனிதர்கள் தரிசிப்பதில்லை. வரப்பை வெட்டியதும், நுரைபூக்கக் கால் நனைக்கும் தாய்ப்பாலாகத்தான் காவிரி காட்சி தரும் அவர்களுக்கு. கடைமடைக்கு அருளும் எங்கள் தாயாக மேட்டூர் அணையே தெரிகிறது. அவளின் பதினாறு கண்களில் ஒரு சிலவாவது சுரந்துகொண்டிருக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in