

எதிர்காலத்தைப் பற்றிப் பேசுதல் என்பது ஆருடங்களால் ஆனதல்ல. அல்லது ஆசைகளிலிருந்தோ அச்சுறுத்தல்களிலிருந்தோ பேசப்படுவதுமல்ல. அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தின்படியும் வரலாறு சார்ந்த போக்குகளை ஆராய்வதன் மூலமும்தான் எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்பது ஓரளவுக்குப் பலனளிக்கும். அது மட்டுமல்ல, எந்த ஓர் எதிர்காலத்தைப் பற்றியும் தீர்க்கதரிசனமாக எப்போதுமே நாம் சொல்லிவிட முடியாது. மாறாக. சாத்தியமுள்ள பல எதிர்காலங்களைப் பற்றித்தான் பேசமுடியும். தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, தமிழ்நாடு எதிர்கொள்ளும் சாத்தியமுள்ள திசைவழிகள் என்று புரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.
இந்திய, உலகப் போக்குகள்
தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பது முதலில் தமிழ்நாட்டின் அக, புறச் சூழல்களைச் சார்ந்தது. பிறகு இந்திய, உலகப் போக்குகளிலிருந்து முற்றிலும் விடுபட்ட ஒன்று அல்ல அது. தமிழ்நாடு உலகத்தின் கடைக்கோடி அல்ல. உலகின் மையத்தில் இருக்கும் பல்வேறு சமூகங்களில் ஒன்றை அது தன்வசம் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் எதிர்காலம் இரண்டு பெருங்காரணிகளால் தீர்மானிக்கப்படலாம். ஒன்று, இந்திய ஒன்றியத்தின் போக்குகள். இரண்டாவது, உலகளாவியப் போக்குகள். அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் இந்தக் காரணிகள் மிகப்பெரிய அளவுக்கு உருவாக்கவுள்ள மாற்றங்களால், தமிழ்ச் சமூகமும் பண்பாடும் மொழியும் வாழ்வும் முன்னெப் போதும் காணப்படாத நிலைகளுக்கு நம்மை விரட்டியடிக்கலாம்.
இந்தியா பிரிட்டிஷ் காலனியாக இருந்தபோது, அது விடுதலை அடையவேண்டும் என்றொரு இயக்கம் உருவானது. அது இந்திய தேசிய இயக்கம். அப்படி விடுதலையடையும் இந்தியாவில் அதிகாரங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் களிடம் அல்லது வர்க்கத்திடம் அது மாட்டிக்கொள்ளக் கூடாது என்றொரு இயக்கம் எழுந்தது. அது சமூக நீதி இயக்கம். காந்தியோ அம்பேத்கரோ நேருவோ பெரியாரோ அண்ணாவோ தங்கள் எதிர்காலத்தை இந்தக் கோரிக்கைளின் ஊடாகவே கண்டறிந்தார்கள். இந்த இரண்டு போக்குகளுடன் தமிழ் இன உரிமைக் கனலொன்றும் தமிழ்நாட்டில் மூண்டது. இவை அனைத்தும் சேர்ந்து அன்று உருவாக்கிய எதிர்காலக் கனவுகளின் நிஜம்தான் இன்றைய காலம். அப்படியென்றால் இன்று எதைக் கனவு கண்டு, எதை நோக்கிச் செல்லப்போகிறோம்?
தமிழ்நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாக இருப்பதாகக் கருதிக்கொள்ள இயலாது என்பதுதான் கசப்பான ஓர் உண்மை. 2024 தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமானால், அது தன்னுடைய கொள்கைகளைத் தொடருமானால், தமிழ்நாடு என்கிற அரசு (state), தன்னுடைய அதிகாரங்களை தற்போது இருப்பதைவிடக் கூடுதலாக இழக்க நேரிடலாம். மத்திய கால முடியாட்சி வார்ப்பில் ஒரு ஒற்றையரசை உருவாக்க இந்தியாவில் முயலப்பட்டுவருகிறது. எனவே, முதலுக்கே மோசம் ஏற்படலாம் என்கிற அச்சம் புறக்கணிக்கத்தக்க ஒன்றல்ல.
இரண்டாவதாக, 2026இல் இந்தியாவின் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கும்போது, மக்கள்தொகை சார்ந்த மாற்றங்களின்படி தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் தேசிய அளவில் குறையலாம். தமிழ் முழக்கங்களோடு திறக்கப்பட்ட இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பங்கு அதீதமாகக் குறைக்கப்படலாம். தென்னிந்தியா தன் பலத்தை மேலும் இழக்கக்கூடும். இதனால் ஏற்கெனவே இந்தியாவில் நிலைகுலைந்துள்ள அதிகாரச் சமநிலை கூடுதலாகப் பாதிக்கப்படலாம் என்கிற அச்சம் பலரிடமும் இருக்கிறது. இந்த இரண்டு போக்குகளுமே தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின், எதிர்காலத்தைப் பற்றியும் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
இன்னொரு பக்கம், சர்வதேச அளவில் உலகின் அத்தனைப் போக்குகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். வருமானச் சமமின்மையால் ஏற்படும் சமூக வர்க்கப் பிளவுகள், தமிழ்நாட்டிலும் ஆழமாகித்தான் வருகின்றன. நீட் போன்றவை அடிப்படையில் சாதியச் சிக்கல்களாக மட்டுமின்றி, வர்க்கச் சிக்கல்களாகவும் இருக்கின்றன. இன்னொரு பக்கம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு நாமும் தப்பப்போவதில்லை.
நம்முன் நிற்கும் கேள்விகள்
கடந்த காலத்தில் இச்சமூகம் தனக்கான எதிர்காலத்தைச் சரியாகக் கணித்திருந்தது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் காமராசரும் அண்ணாவும் கருணாநிதியும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு இட்ட அடித்தளம்தான் இன்று இந்திய அளவிலும் உலக அளவிலும் தமிழ்நாட்டை ஒரு பெரிய பொருளாதாரமாக மாற்றியது. பிந்தைய ஆட்சிக் காலங்களிலும் அந்தப் போக்குத் தொடரத்தான் செய்தது. கல்வி, பொது உள்கட்டமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் அவற்றை உறுதிப்படுத்தின. வேளாண்மை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பக் காலகட்டங்களை இப்படி வெற்றிகரமாக கடந்து முன்னேறியது தமிழ்நாடு. ஆனால், இந்தத் தேரோட்டம் தொடரத்தான் செய்யுமா?
இப்போது, செயற்கை நுண்ணறிவுப் புரட்சியையும் நான்காவது தொழிற்புரட்சியையும் எதிர்கொண்டிருக்கிறோம். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதைப் பொறுத்துதான் தமிழர்களின் தொழில் அதிகாரத்துக்கும் வேலைவாய்ப்புக்குமான எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகிறது. நமது மொத்த வாழ்க்கையின் உள்கட்டமைப்பும் கல்வியும் பொழுதுபோக்கும் இனி மாறப்போகின்றன. தொண்ணூறுகளில் நாம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை வெற்றிகரமாக எதிர்கொண்டோம் என்றால், அதற்கான வித்துகள் ஒரு தலைமுறைக்கு முன்பாகவே இடப்பட்டிருந்தன. இன்று?
இன்றைய தமிழ்நாடு அரசு இதை நன்கு உணர்ந்துகொண்டிருக்கிறது. இரண்டு தசாப்த தூக்கத்திலிருந்து நாம் விழித்துக்கொண்டுவிட்டோம் என்பதை அதன் பல்வேறு புதிய திட்டங்கள் காட்டுகின்றன. ஆனால், நேரமும் அதிகாரமும் கரைந்துகொண்டிருக்கின்றன.
இந்த மாற்றத்தையும் நாம் எதிர்கொள்ள முடியுமா? கடந்த காலத்தின் மாற்றங்களை முன்கண்டறிந்து எதிர்கொண்டதுபோல இந்த மாற்றத்தையும் தமிழ்நாடு எதிர்கொள்ளுமா? இந்திய அளவிலோ உலக அளவிலோ நடக்கும் எல்லாவித மாற்றங்களுக்கும் எதிர்வினையாற்றக்கூடிய அதிகாரம் நம்மிடம் இருக்கிறதா? - இப்படிப் பல கேள்விகள் நம்முன் உள்ளன.
அறிவாசானின் எச்சரிக்கை
தமிழர்களாக ஒன்றிணைந்து அபாயங்களி லிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டு மென்றால் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றிய அறிவுபூர்வமான புரிதல், முதலில் நம் தலைவர்களுக்கும் சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆனால், இந்த விவகாரங்கள் பற்றிய விவாதங்கள் கூட இங்கே அதிகம் நடப்பதில்லை. அவை சில தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் சமாச்சாரங்களாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன.
இதன் அர்த்தம், எதிர்காலம் இருண்ட மயமாகத்தான் இருக்கும் என்பதல்ல. ஆனால், அது ஒளிமயமாகத்தான் இருந்தாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. நம் எதிர்காலம் சிதறுண்டு போகலாம், தாழ்ந்துபோகலாம், நெடுந்தூக்கத்தில் ஆழலாம், அல்லது வெகுண்டு மீள் எழலாம், தப்பிப் பிழைக்கலாம், அல்லது நாம் மீண்டும் ஒரு முறை மீளெழலாம், வையத் தலைமைகொள்ளலாம்.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (அறிவுடைமை - 429)
எதிர் வரும் ஆபத்துக்களை முன்னறிந்து செயல்படும் அறிவுள்ளவர்களுக்கு, அவர்கள் அதிர்ந்துபோகும்படியான எந்த திடீர் ஆபத்துகளும் வந்துவிடாது என்று திருவள்ளுவர் எச்சரித்திருக்கிறார். தமிழ் நாட்டின் எல்லைச் சாமிபோல உயர்ந்து நிற்கும் நம் அறிவாசானின் எச்சரிக்கை உணர்வில்தான் நாம் இக்கணம் கரையத்தோன்றுகிறது.
- கட்டுரையாளர், எழுத்தாளர்