

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பல்வேறு துறைகளில் சர்வதேச அளவில் சாதனைகள் படைத்துவருகிறார்கள். தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் அனைத்துத் தளங்களிலும் நவீனமடைந்துகொண்டே இருப்பதற்குத் தங்கள் மாறுபட்ட சிந்தனைகளாலும் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளாலும் இவர்கள் பங்களித்துவருகிறார்கள். அவர்களில் நால்வர்:
l வினிஷா உமாசங்கர்
பேச்சாளார், கண்டுபிடிப்பாளர், சூழலியல் ஆர்வலராக அறியப்படும் வினிஷா, திருவண்ணாமலையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ‘புகார் சொல்வதைவிட, ஒரு சிறு செயலைச் செய்வது மேல்’ என்று சொல்லும் வினிஷா, 12 வயதில் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் இஸ்திரிப் பெட்டியைக் கண்டறிந்தார். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இஸ்திரிப் பெட்டி முயற்சியைப் பாராட்டி, ஸ்வீடனைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று, குழந்தைகளுக்கான ‘பருவநிலை’ விருதை இவருக்கு வழங்கியிருக்கிறது. 2021இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 26ஆவது பருவநிலை மாற்ற மாநாட்டில் தனது பேச்சால் உலகத் தலைவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
l ‘நீச்சல்காரன்’ ராஜாராமன்
‘வாணி’ (http://vaani.neechalkaran.com/) எனப்படும் தமிழின் முதல் இணைய எழுத்துப் பிழைத்திருத்தியை உருவாக்கியவர், ராஜாராமன் (34). மதுரையைச் சேர்ந்த இவர், ‘நீச்சல்காரன்’ என்கிற புனை பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கியபோது, எழுத்துப் பிழைகளைக் களைவதற்காக இந்தப் பிழைத்திருத்தியை உருவாக்கினார். தொடர்ந்து, ‘பேச்சி’ மொழிபெயர்ப்புக் கருவி, ‘சுளகு' எழுத்தாய்வுக் கருவி, ‘ஓவன்’ ஒருங்குறி மாற்றி உள்ளிட்ட மென்பொருள்களையும் உருவாக்கினார்; தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளில் ஒருவராகவும் இவர் செயல்பட்டுவருகிறார். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘கணிமை விருது’, 2015இல் இவருக்கு வழங்கப்பட்டது.
l அருண் டைட்டன்
வழக்கமாக பொது வெளியில்தான் சிலைகள் நிறுவப்படுகின்றன. ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு சிறு சிலை இருந்தால் எப்படி இருக்கும் என்கிற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘சிலை’ நிறுவனம் என்கிறார் அருண் டைட்டன். ஒளிப்படக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், 2019ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார். திருவள்ளுவர், பாரதியார், பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், மார்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், ஆளுமைகள், தமிழ்ச் சான்றோர்களின் சிலைகள் மிகவும் பிரபலமானவை. தமிழ் பெருமையை உலகுக்குச் சொல்லும் இந்தச் சிலைகள் நாடு கடந்தும் விற்பனையாகின்றன.க்ஷ
l அனிருத்தன் வாசுதேவன்
எழுத்தாளர் பெருமாள்முருகனின் பிரபலமான ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ('One Part Woman’) சாகித்ய அகாடமி விருதுபெற்றவர். இவர் மொழிபெயர்த்த பெருமாள்முருகனின் மற்றொரு நாவலான ‘பூக்குழி’ நாவல் சர்வதேச அளவில் உயரிய புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்றது. ஆஸ்திரேலிய எழுத்தாளார் லாரா ஃபெர்குஸின் ‘இழப்பின் வரைப்படம்’ நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்க டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மானிடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவர், நவீனத் தமிழ் இலக்கியம் சார்ந்து ஆழ்ந்த வாசிப்பு கொண்டவர்.
- விபின், ஸ்நேகா, அபி, ராகா