

இன்றைய குழந்தைகளுக்கு ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் டெய்ரி மில்க், ஃபைவ் ஸ்டார் உள்ளிட்ட சாக்லெட்கள்தான் அதிகமாக வாங்கிக்கொடுக்கப்படுகின்றன. குழந்தைகள் தமது பிறந்த நாளுக்கு நண்பர்களுக்குக் கொடுப்பதும் பெரும்பாலும் இந்த ஐந்து ரூபாய் சாக்லெட்கள்தான். அதற்குக் குறைவான விலையில் கிடைக்கும் சிறிய சாக்லெட்களை வாங்கிக் கொடுத்தால் குழந்தைகள் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடக்கூடும்.
பைசா சாக்லெட்கள்
ஆனால், 90ஸ் கிட்ஸும் அதற்கு முந்தைய தலைமுறையினரும் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய், 50 பைசா, 25 பைசா சாக்லெட்களை அதிகமாகச் சுவைத்திருப்பார்கள். அவர்கள் அடிக்கடி உண்டு மகிழ்ந்து, பிறந்தநாளுக்கு நண்பர்களுக்குக் கொடுத்தவை இந்த மலிவு விலை சாக்லெட்கள் அல்லது மிட்டாய்களே.
இந்த மலிவு விலைச் சாக்லெட்களில் பெரும்பாலும் சாக்லெட் என்பதன் அடிப்படை உள்பொருளான கோகோ, மருந்துக்குக்கூடச் சேர்க்கப்படாது. இவை அடிப்படையில் வெள்ளைச் சர்க்கரை சேர்க்கப்பட்ட மிட்டாய்கள்தாம். இருந்தாலும் கடித்துத் தின்னும் அளவுக்குக் கடினமாக இருப்பவற்றை மட்டுமே மிட்டாய் என்றும் கடிப்பதற்கு மிருதுவான மிட்டாய்களை சாக்லெட் என்றும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் அறிந்து வைத்திருந்தனர். இப்படிப்பட்ட ‘சவசவ’ சாக்லெட்களில் 25 பைசாவுக்குக் கிடைத்த ‘ஆசை’ சாக்லெட் மிகவும் பிரபலமானது. 90களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்ட இதன் சுவாரசியமான விளம்பரங்களும், இந்த சாக்லெட்டின் உறையை இழுத்து விளையாட முடிந்ததும் ‘ஆசை’ சாக்லெட்டைக் குழந்தைகளின் மனதுக்கு நெருக்கமாக்கின. ‘சக்தி’ என்னும் சாக்லெட்டும் 25 பைசாவுக்குக் கிடைத்தது என்றாலும் அது ‘ஆசை’ அளவுக்குக் குழந்தைகளின ஆசையைத் தூண்டவில்லை.
50 பைசா சாக்லெட்களில் சிவப்பு, நீல நிற உறைகளில் கிடைத்த ‘கேரமில்க்’ சாக்லெட் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தது. அதேபோல் மிட்டாயைப் போல் கடித்துத் தின்ன வேண்டிய மேல் பரப்புடன் உள்ளே சற்று திரவத்தன்மையுடன் இருக்கும் ‘லாக்டோ கிங்’ என்னும் சாக்லெட்டும் சற்று காப்பி சுவையை அளித்த ‘காஃபி பைட்’ சாக்லெட்டும் 50 பைசா வகைகளில் பிரபலமானவை.
‘எக்ளேர்ஸ்’ தொடக்கத்தில் 50 பைசாவுக்குக் கிடைத்தது. பிறகு ஒரு ரூபாய் ஆனது. மேலே சாக்லெட்டும் உள்ளே சுவையான சாக்லெட் கூழும் இருக்கும் எக்ளேர்ஸை அன்றைய குழந்தைகளுக்குக் கிடைத்த தரமான சாக்லெட்டாக அடையாளப்படுத்தலாம்.
வழக்கொழிந்தவையும் தொடர்பவையும்
ஏலக்காய், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் கிடைத்த ‘கிஸ்மி பார்’ போன்ற சற்று பெரிய சாக்லெட்கள் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய்க்குக் கிடைத்தன. இவை பெற்றோரிடம் ‘பாக்கெட் மணி’ பெறும் வயதை அடைந்துவிட்ட சிறுவர்களுக்கு விருப்பமானதாக இருந்தன.
சூயிங் கம்மை விரும்பிச் சாப்பிடும் சிறுவர்கள், அவற்றைத் துப்ப மறந்து விழுங்கிவிடக்கூடிய ஆபத்து இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக ‘போங்கர்ஸ்’, ‘ஃபுரூட்-டெல்லா’ உள்ளிட்ட சூயிங் கம்மைப் போலவே மென்று தின்னும் வகையிலான சாக்லெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆசை, சக்தி, கேரமில்க், காஃபி பைட், கிஸ்மி பார், லேக்டோ கிங், போங்கர்ஸ் உள்ளிட்ட பல சாக்லெட்கள் இப்போது கிடைப்பதே இல்லை. 25 பைசா, 50 பைசாக்களும் வழக்கொழிந்துவிட்டன. ஒரு ரூபாய் சாக்லெட்களைப் பெரும்பாலான குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதில்லை. அவை, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விருந்தினர்களை வரவேற்கும்போதும், மளிகைக் கடைகளிலும் மருந்தகங்களிலும் மீதிச் சில்லறைக்கு மாற்றாகவும் பெரிதும் பயன்படுகிறது.
விலையும் சுவையும் அதிகம்
டெய்ரி மில்க், ஃபைவ் ஸ்டார், கிட்-கேட், மில்கி பார் உள்ளிட்ட சாக்லெட்கள் சற்று விலை அதிகம் என்றாலும் அனைத்து வயதினராலும் விரும்பப்படுகின்றன. இந்த பிராண்டுகள் உள்ளடக்கத்திலும் பேக்கேஜிங்கிலும் பல மாற்றங்களுடன் நீண்டகாலமாக சாக்லெட் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றன.
முன்பு வெளிநாடுகளில் வாழும் தூரத்து உறவினரோ தெரிந்தவரோ வரும்போது மட்டுமே கிடைத்த அரிதினும் அரிதான பொருளாக வெளிநாட்டுச் சாக்லெட்கள் இருந்தன. ஆனால், இப்போது ஸ்னைக்கர்ஸ், ட்விக்ஸ், பெளண்ட்டி, டோப்ளரோன் உள்ளிட்ட வெளிநாட்டு சாக்லெட்கள் பெட்டிக் கடைகளைத் தவிர, பெரும்பாலான கடைகளில் கிடைக்கின்றன. இவற்றின் விலை மிக அதிகம்.