காதலிக்கும் கைகள் தொட்டு நீட்டினால் எல்லா நாளும் சாக்லெட் நாள்தானே!

காதலிக்கும் கைகள் தொட்டு நீட்டினால் எல்லா நாளும் சாக்லெட் நாள்தானே!
Updated on
2 min read

பிரிக்க முடியாதவை காதலர்களும் சாக்லெட்டும்! ஏனென்றால் ஒவ்வோர் ஆண்டும் உலக சாக்லெட் நாள் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், காதலர் களுக்கு சாக்லெட் நாள் இரண்டு முறை வந்துபோகும்.

காதலர் தினத்தையொட்டி முதல் சாக்லெட் நாள் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கொண்டாடப்படும் காதலர் வாரத்தில் 9ஆம் தேதி சாக்லெட்டுக்கான நாள். அன்புக்குரியவர்கள் இந்த நாளில் சாக்லெட்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இருந்தாலும் 'இன்னிக்கு மதர்ஸ் டேல்ல' என்று ‘கில்லி’ பட விஜய் கேட்பதுபோல 'இன்னிக்கு சாக்லெட் டேல்ல' என்கிற நிலைதான் இப்போதும் நிலவுகிறது. ஆனால், நினைத்த போதெல்லாம் சாக்லெட் டைப் பகிர்ந்துகொள்ளும் காதலர்களுக்கு இந்த இரண்டு நாள்கள் மட்டுமல்ல, எல்லா நாளும் சாக்லெட் டேதான்!

காதல் வளர்க்கும் கருவி

காதலர்கள் தங்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளும் பரிசுகளில் ரோஜாக்களுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவை சாக்லெட்கள்தான். சாக்லெட்கள் அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கிய காலம்தொட்டு அவற்றுக்கும் காதலுக்கும் இனம் புரியாத தொடர்பு இருக்கிறது. முந்தைய தலைமுறையின் பல பழக்கங்களைப் ‘பழையன’ என்று கழித்துவிடும் 2கே கிட்ஸ், காதல் வளர்க்கும் கருவியாக சாக்லெட்டைப் பயன்படுத்தும் கலையை மட்டும் கைவிட்டுவிடவில்லை. காரணம் ஒருவரை எளிதில் மகிழ்விக்கவும் சமாதானப்படுத்தவும் சாக்லெட்களைப் பரிசளித்தால்போதும். உலகம் முழுவதும் அன்பின் அடையாளமாகக் கருதப்படும் சாக்லெட் பாலினம், வயது கடந்து அனைவராலும் விரும்பப்படுகிறது.

எங்கேயும் எப்போதும்

“காபி சாப்பிட போலாமா?” என்பதில் இருவருக்குமான உரையாடல் தொடங்குவதுபோல “இந்தா உனக்கு சாக்லெட் வாங்கி வந்திருக்கிறேன்” என்று பேசத் தொடங்கி. ஒருவரால் எளிதில் தன் காதலைச் சொல்லிவிட முடிகிறது. இப்படிக் காதலை ஆரம்பித்து வைப்பதில் இருந்து காதலர்களுக்கிடையே போகிற போக்கில் வரும் சண்டைக்குப் பிறகு சமாதானம் செய்யும்போதும், மன்னிப்பு கேட்கும்போதும், ‘மிஸ் யூ’ எனச் சொல்லும்போதும், ஏன் பிரியும்போதும் கூட சாக்லெட் பரிமாற்றம் நடைபெறும்.

காதலின், காதலர்களின் அங்க மாகவே மாறியிருக்கும் இந்த சாக்லெட்டுகள் பலவகை. 90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான கேட்பரி, பைவ் ஸ்டார், கிட் கேட் எல்லாம் விற் பனையில் சக்கைப்போடு போடும் பிராண்டுகள். கேட்பரி நிறுவனம் அறிமுகப்படுத்திய டெய்ரி மில்க் ‘சில்க்’ இந்தத் தலைமுறை காதலர் களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது.

கவரும் காதல் பேசும்

‘அன்பு சொட்டச் சொட்ட ருசித்து சாப்பிடும் சாக்லெட் தீர்ந்திருக்கலாம். ஆனால், காதல் மறையாது’ என வசனம் பேசிய அந்தக் காலத்துக் காதலர்கள் சாக்லெட் கவரைப் பத்திரப்படுத்தியதெல்லாம் வேறு ரகம். எவ்வளவு கசங்கினாலும் நினைவுத் தொகுப்பிலிருந்து அகலாத அந்த சாக்லெட் கவர்களே காதலின் சாட்சி!

சாக்லெட் எடு கொண்டாடு!

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 7 உலக சாக்லெட் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வழக்கம் 2009இல் தொடங்கியது. பொது ஆண்டுக்கு முன்பிருந்தே மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் புழங்கிக்கொண்டிருந்த சாக்லெட், ஐரோப்பாவுக்கு வந்த பிறகுதான் உலகம் முழுவதும் பரவியது. பொ.ஆ. 1550 ஜூலை 7 அன்றுதான் சாக்லெட் ஐரோப்பாவை வந்தடைந்தது என்று கருதப்படுவதால் அந்நாள், உலக சாக்லெட் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டுக்கும் அதிகாரபூர்வ தரவுகள் இல்லை.

சாக்லெட் தோன்றிய நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்ற ஐரோப்பியர்களின் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகளுக்கும் பரவியது. ஐரோப்பாவுக்கு வந்த பிறகுதான் சாக்லெட் பானத்தில் சர்க்கரை அல்லது பிற இனிப்பூட்டிகள் சேர்க்கப்பட்டன. அதைத் திட இனிப்புப் பண்டமாகத் தயாரித்து உண்ணும் வழக்கம் 1800களில்தான் தொடங்கியது.

சில நாடுகளில் வேறு தேதிகளிலும் சாக்லெட் நாள் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் அக்டோபர் 28 சாக்லெட் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற சாக்லெட் நிறுவன அதிபரான மில்டன்.எஸ்.ஹெர்ஷேவின் பிறந்த நாளான செப்டம்பர் 13ஐ சாக்லெட் நாளாகக் கொண்டாடும் வழக்கமும் நிலவுகிறது.

- நந்தன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in