

இசையை ரசிப்பவர்கள் முக்கியமானவர்களா, இசைக் கலைஞர்கள் முக்கியமானவர்களா என்று கேட்டால் இசையை ரசிப்பவர்கள் தான் முக்கியமானவர்கள் என்பேன். இசையை ரசிப்பதுதான் இசைக் கலைஞன் ஆவதற்கான தொடக்கப் புள்ளி. ஆனால் இது எப்போது நடக்கும், எந்த நொடியில் நடக்கும் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும்.
ஏதோ ஒரு நொடியில் சைக்கிளை நாம் ஓட்டத்தொடங்கிவிடுவோம், ஏதோ ஒரு நொடியில் நீச்சல் நமக்கு பழகிவிடும். அதைப் போன்றதுதான் ரசிகன், கலைஞன் ஆகும் தருணம். ஆனால், இப்படி ஒருவர் தன்னைக் கலைஞனாக மதிப்பதற்கு அவரே பல நேரம் தடையாக இருப்பார். அவருக்கு அவரே சுயவிமர்சகராக இருப்பார். இல்லாவிட்டால், சுயபச்சாதாபம் மிக்கவராக இருப்பார். அவருடைய கலைத் திறமையின் மீது அவருக்கே நம்பிக்கை இருக்காது.
ஆனால், `எதிர்காலத்தில் நான் ஒரு தாளவாத்தியக் கலைஞனாவேன்' என்றெல்லாம் யோசிக்காமல், சிறு வயதிலிருந்தே கிடைத்த பொருள்கள் எல்லாவற்றிலும் நான் கேட்ட திரைப்படப் பாடல்களின் தாளங்களைத் தட்டி வாசிக்கத் தொடங்கினேன். திரைப்படப் பாடல்கள் என்றில்லை, இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் வாசிக்கப்படும் தாளம், பெருமாள் கோயில், ஈஸ்வரன் கோயில் சுவாமி ஊர்வலம் வரும்போது வாசிக்கப்படும் தாளம், காரில் அமர்ந்து மணமக்கள் வரும்போது வாசிக்கப்படும் `பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது' பாட்டின் தாளம் என எல்லாமே எனக்குக் கைவசமாகின.
‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் `ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடல், மிருதங்கத்தின் தீர்மானத்துடன்தான் தொடங்கும். எட்டாம் வகுப்பு படித்தபோது பள்ளி மேசையின் பக்கவாட்டில் நான் வாசித்த அந்தத் தாளத்தை, மேசையின் மீது காதுவைத்துக் கேட்பதற்குச் சக மாணவர்களிடையே ஒரு ரசிகர் கூட்டம் உண்டானது. அப்போது தோன்றியவன்தான் இந்தக் கலைஞன்.
அன்றைக்குத் திரைப்படப் பாடல்களுக்கு இணையாக திரையரங்குகளில் போடப்படும் விளம்பரப் படங்களின் பாடல்களும் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. அதில் முக்கியமானவை இரண்டு: `லா...லா...ல...லா' என்னும் ஹம்மிங் கோடு ஒரு யுவதி அருவியில் குளிக்கும் லிரில் சோப் விளம்பரம். அதில் ஒலிக்கும் `டிரம்ஸ் பீட்' என்னை மிகவும் கவர்ந்தது (மீசை முளைக்கும் பருவத்தில் அந்த யுவதியும்!). பித்தளைக் குடங்களும் தாம்பாளத் தட்டும் வீட்டில் எனக்கு டிரம்ஸ் செட் ஆயின. இன்னொரு விளம்பரம், ‘ஆரோக்கிய வாழ்வைக் காக்கும்’ ஒரு சோப்பு விளம்பரம். அதில் ஒலித்த இசையை வாசிக்கத் தோதாக அமுல் டின்னையும் லேக்டோஜன் டின்னையும் இணைத்துக் கொடுத்தார் என்னுடைய அண்ணன். அதுதான் முதன்முதலாக நான் வாசித்த `பாங்கோ'!
கல்லூரியில் படித்தபோது தாளவாத்தியக் கலையின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டது. சக மாணவன் ரவிச்சந்திரன் (சிந்து பை ரவி) பாட, நான் அதற்கேற்ற தாளத்தை மேசையில் போட, படிக்கப் போன இடத்தில் எங்களுக்கு ரசிகர்கள் உருவாகினர். கேள்வி ஞானத்தில் பாடுவதற்கும் வாசிப்பதற்கும் உண்டான அந்த ரசிகர்களால், நாங்கள் கலைஞர்களாக உருவாவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினோம்.
பின்னர், மணமக்கள் ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியக் குழுவில் அந்த நண்பர் பாடத் தொடங்கினார். நான் அந்தக் குழுவில் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கினேன். எத்தனைப் பெரிய பேண்ட் இசைக் குழுவாக இருந்தாலும், அவர்களின் எல்லை திருமண மண்டபங்களின் வாசல் வரைதான். உள்ளே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு அடுத்த கட்டமாக எங்களுக்கு அன்றைக்கு இருந்த இலக்கு மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்தும் இசைக்குழுவில் சேர்வதுதான். எங்களின் தணியாத இசைத் தாகத்தால் அதையும் தொட்டுவிட்டோம். இசைக் குழுக்களின் வழியாகத்தான் முறையான இசையை நான் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். இனியும் கற்பேன். இசைக்கு முடிவேது!