

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேம்பட்டுவரும் தொழில்நுட்பம், நவீன மனித வாழ்வில் திரும்பிச் செல்லமுடியாத மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனைகூட செய்து பார்த்திராத விஷயங்கள், இன்று நம்முடைய அன்றாடத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன; உதாரணமாக - நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை போன்ற ‘ஸ்ட்ரீமிங்’ தளங்கள்.
புதிதாக வெளியாகும் ஒரு திரைப்படம் பற்றிய பேச்சுகள் பரவலாக எழுந்தால், ‘எந்தத் தியேட்டரில் ஓடுகிறது’ என்கிற கேள்வி இன்றைக்கு, ‘தியேட்டரா... ஓடிடி-யா’ எனப் பரிணமித்திருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் இப்போதெல்லாம் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கின்றன. இது கேளிக்கைத் துறையின் வணிகத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்ப மேம்பாடுகள், திரைப்படத்தையோ பாடலையோ (இசை) நாம் அணுகும் அல்லது நுகரும் விதத்தில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன என்பது பரிசீலனைக்கு உரியது. திரைப்படங்களுக்கு நாம் இன்னும் திரையரங்க அனுபவத்தையே முதன்மையாக சார்ந்திருக்கிறோம்; ஆனால், இசை/ பாடல் கேட்கும் அல்லது நுகரும் அனுபவத்துக்கு ஸ்பாடிஃபை போன்ற தளங்களுக்கு நாம் வேகமாக நகர்ந்துவிட்டோம்.
விரல்நுனியில் இசை
நாம் இசை கேட்பதற்குக் காசு கொடுத்துப் பழகியவர்கள் இல்லை; இசை எப்போதுமே நமக்கு இலவசமாகவே கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், விரும்பும்போது விரும்பிய இசையைக் கேட்கும் வசதி எல்லோருக்கும் முதலில் வாய்க்கவில்லை. வானொலி, பிற்பாடு தொலைக்காட்சி - அதுவும் தனியார் அலைவரிசைகளின் பரவலாக்கத்துக்குப் பிறகு அவற்றில் வழங்கப்படும் இசையைக் கேட்டு நம்முடைய இசை ரசனை (தமிழில் முதன்மையாகத் திரையிசை) வடிவமைக்கப்பட்டது. ‘பண்டைய’ காலத்தில் கிராமஃபோன் தொடங்கி, இன்று கேசட்டுகளாகவும் பிற்பாடு குறுந்தட்டுகள் (CD), ஐ-பாட் போன்ற சாதனங்கள் வழியாகவும், இசையைத் தேர்ந்தெடுத்துக் கேட்பதற்கான வசதிகள் உருவாகின. இன்றும்கூட வானொலி, இணையத்தில் யூடியூப் போன்ற பல வழிகளில் இசை இலவசமாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்பாடிஃபை, ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக் போன்றவை தற்காலத்தில் இசை ரசனையை வளர்த்தெடுப்பதற்கான முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டிருப்பதால், அவை பரவலான பயன்பாட்டுக்குள் வந்துள்ளன. ‘நான் இந்த இசையைக் கேட்கிறேன்’ என நம் இசை ரசனையை உலகுக்கு அறிவிப்பதற்கான வசதியையும் சமூக ஊடகங்கள் வழி இந்தத் தளங்கள் உருவாக்கித் தருகின்றன. உலகின் இசை அனைத்தையும் தனிநபர் ஒருவரின் விரல் நுனிக்குக் கொண்டுவந்துவிட்ட இந்தத் தளங்களால், இசை ரசனை என்னவாக ஆகி நிற்கிறது?
சிதறும் ரசனை
சாப்பிடும்போது யூடியூப் காணொளி பார்க்காமல் உணவு உள்ளே இறங்காத ஒரு தலைமுறை இன்று உருவாகிவிட்டிருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஸ்நாப்சாட், (இப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள) டிக் டாக் போன்ற சமூக ஊடகங்கள் வழியிலான இலக்கற்ற நுகர்வு (doomscrolling), எல்லாவற்றின் மீது ஒரு கட்டத்தில் இனம்புரியாத சலிப்பை உருவாக்கிவிடுகிறது. இத்தகைய இயந்திரனத்தனமாக நுகர்வு, இசை கேட்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு பாடலைக்கூட முழுமையாகக் கேட்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. சலிப்பாக இருந்தால் பாடல்கள் கேட்டு மனதை லேசாக்கிக் கொண்ட காலம் போய், பாடல்களைக் கேட்டுச் சலிப்புறும் நிலை இன்று உருவாகி இருக்கிறது.
எண்ணிலடங்கா பாடல்கள், கேட்போரின் கட்டுப்பாட்டில் இசைத் தேர்வு, ரசனைக்கு ஏற்ப இசை/ பாடல் பட்டியல் உருவாக்குதல் (personalized playlists), அல்காரிதங்களால் உருவாக்கப்படும் பரிந்துரைகள் என இசையைக் கேட்பதற்கான ஏராளமான சாத்தியங்களையும் வசதிகளையும் ஸ்பாடிஃபை போன்ற தளங்கள் வழங்குகின்றன. ஆனால், அது ஒருவரின் இசை ரசனையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாகச் சிதறடிக்கவே செய்கின்றது என்பது பெரும்பாலானோரின் அனுபவமாக உள்ளது. ஆக, இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி முத்து எடுக்கச் சென்ற பலர், மூச்சுமுட்டி இன்று கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்!
- அபி