

சில ஆண்டுகளுக்கு முன் சுயாதீன இசை என்றால் தனி அறிமுகம் தேவைப்பட்டது. இன்றைய நிலைமை வேறு. எப்போதும் இல்லாத அளவுக்குச் சுயாதீன இசையின் பாய்ச்சல் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திரைப்படப் பாடல்களுக்கு இணையாகச் சுயாதீன இசைக் கலைஞர்களின் தனிப் பாடல்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கியிருக்கின்றன. நாளுக்கு நாள் புதுப்புது படைப்புகள் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன, அவை பல லட்சம் பார்வைகளையும் கடக்கின்றன.
புதிய தளம்
ஒரு திரைப்படப் பாடலைப் போல சுயாதீன இசைப் பாடலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியக் கருவியாக இருப்பது சமூக வலைதளம்தான். காணொளி வடிவில் யூடியூபிலும், ஒலி வடிவில் ஸ்பாடிஃபை செயலியிலும் சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்களது படைப்புகளைப் பொதுத் தளத்தில் பதிவேற்ற முடிகிறது. ஒரு பாடல் ஹிட்டாகும் பட்சத்தில் அவை இன்ஸ்டகிராம் ரீல்ஸ்களாக, யூடியூப் ஷார்ட்ஸ்களாக வைரலாகின்றன. இதனால் திரைப்படம் அல்லாத இசைப் பாடல்களுக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவருகிறது.
2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ‘7 அப் கிக்', ‘திங்க் மியூசிக் இண்டி', ‘கோக் ஸ்டுடியோ தமிழ்' போன்ற அமைப்புகளால் தமிழ்ச் சுயாதீன இசை அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. முணுமுணுக்க வைக்கும் பாடல் வரிகளும், ‘வைப்’ ஆக வைக்கும் மெட்டுக்களும்தான் பெரும்பாலான தமிழ்ச் சுயாதீன இசைப் பாடல்களின் முதன்மை ஈர்ப்பு அம்சங்கள். பொழுதுபோக்கு சார்ந்த பாடல்களாக மட்டுமல்லாமல் சமூக, அரசியல் கருத்துகளைப் பேசும் பாடல்களும் வெளியாகி இருக்கின்றன.
பெருகும் ஆதரவு
வைசாக், நிகவித்ரன், சுசாந்திகா, எம்.எஸ்.கிரிஸ்னா, சியென்னார் போன்றோர் இளைய தலைமுறை தமிழ் சுயாதீன இசையின் முகங்களாக பரிணமித்து வருகின்றனர். வைசாக் எழுதி இசையமைத்த ‘எதுவும் கிடைக்கலேன்னா’ பாடல் யூடியூபில் 30 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. தமிழ் சுயாதீன இசைத்துறையில் அசத்திக்கொண்டிருக்கும் அவர் ‘துணிவு’ படத்தின் மூலம் திரைத்துறையில் பாடலாசிரியர், பாடகராக அறிமுகமானார். தமிழ் சுயாதீன இசைக் கலைஞர்கள் திரைத்துறைக்குச் செல்வது புதிதல்ல. ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ‘தெருக்குரல்’ அறிவு, கேபர் வாசுகி, ஆகியோர் சுயாதீன இசைக் கலைஞர்களாகப் பயணத்தைத் தொடங்கி தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
திரைத்துறையில் தடம் பதித்தவர்கள் சுயாதீன இசையின் பக்கம் திரும்பும் நிகழ்வுகளும் உண்டு. சந்தோஷ் நாராயணனின் ‘எஞ்சாயி எஞ்சாமி’, ஏ.ஆர். ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல்கள் மூலம் பிரபல இசையமைப்பாளர்களும் திரைப்படம் அல்லாத பாடல் உருவாக்கத்தில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளனர். “திரைப்படப் பாடல்களைத் தாண்டி, சுயாதீன இசைப் பாடல்கள் நிறைய வர வேண்டும். சுயாதீனப் பாடல்கள்தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும்” என நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பேசியிருந்தார். அந்த வகையில் சுயாதீன இசைக் கலைஞர்களின் தமிழ்ப் படைப்புகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. இந்த இசையூற்று, துறைகள் தாண்டிப் பாயட்டும்.