பிளான் பண்ணி பண்ணுங்க!

பிளான் பண்ணி பண்ணுங்க!
Updated on
1 min read

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்போகின்றன. பிள்ளைகளோடு சேர்ந்து பெற்றோரும் அதற்குத் தயாராக வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் போர்க்களத்தைத் தோற்கடித்துவிடும் அளவுக்குப் பல வீடுகள் களேபரமாகிவிடும்.

கடைசித் தேர்வன்று வீசியெறிந்த புத்தகப் பையைத் தேடும் படலத்தைப் பள்ளி தொடங்கும் முன்பே தொடங்கிவிடுவது நல்லது. ஆண்டுதோறும் புது புத்தகப் பையை வாங்குவது பணத்துக்கும் சூழலுக்கும் கேடு என்பதால் நல்ல நிலையில் இருக்கும் பைகளை இந்த ஆண்டுக்கும் கொடுத்து அனுப்பலாம்.

பள்ளிச் சீருடைகள், காலணிகள் நன்றாகவும் அளவு சரியாகவும் இருந்தால் புதிது தேவையில்லை. அவற்றைத் துவைத்துத் தயாராக வைத்துவிடுங்கள். வாசலில் பள்ளி வாகனம் வந்துநின்ற பிறகோ பேருந்துக்கு நேரமாகிற நெருக்கடியிலோ காலணிகளுக்கும் அவற்றின் காலுறைகளுக்கும் ‘மிஸ்டு கால்’ கொடுத்துத் தேட முடியாது.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் விடுமுறையின்போதே புத்தகங் களைக் கொடுத்துவிட்டிருப்பார்கள். அவற்றையெல்லாம் அட்டை போட்டுப் பெயரெழுதி வைத்துவிடுங்கள். எல்லாவற்றையும் பள்ளி திறப்பதற்கு முதல் நாள் இரவு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் மின்வெட்டோ வேறு வேலைகளோ நம் திட்டத்துக்குச் ‘சுபம்' பாடிவிடக்கூடும்.

கோடை விடுமுறையின் தொடக்கத்தில் கையில் எடுத்த செல்போனை கவச குண்டலம் போல பாவித்துப் பொழுதுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாகப் பல குழந்தைகள் வைத்திருப்பார்கள். அந்தப் பிணைப்பைப் பள்ளி திறக்கும் நேரத்திலாவது பிரித்துவிட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. நேரம் காலம் இல்லாமல் கணினித் திரையையும் செல்போன் திரையையும் முறைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை இரவு சீக்கிரமாகத் தூங்கவைத்துவிட்டுப் பெற்றோரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நள்ளிரவு என நம்பிக்கொண்டிருக்கும் காலை ஆறு மணிக்குப் பள்ளி திறக்கும் நாளன்றாவது குழந்தைகள் கண் விழிப்பார்கள்.

இல்லையென்றால் காலை இறை வணக்கக் கூட்டத்தில் நின்ற நிலையில் கரகாட்டம் ஆடுவார்கள். முதல் வகுப்பு தொடங்கும் முன்பே நித்திரையில் ஆழ்ந்து கனவுக் குதிரையோட்டிக் கொண்டிருப்பார்கள்.

வீட்டில் நினைத்த நேரத்துக்குச் சாப்பிட்டுத் தூங்கி எழுந்த குழந்தைகள் காலை உணவைத் தவிர்க்க நினைக்கலாம். சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டால் சாப்பிட நேரம் கிடைக்கும். சிமென்ட்டைக் குழைத்துப் பூசுவதைப் போல குழந்தைகளின் வாயில் உணவைத் திணிப்பதையும் இது தவிர்க்கும்.

இவையெல்லாம் அம்மாக்களுக்கு மட்டுமல்ல, காலை எழுந்ததும் மனைவி போட்டுத்தந்த காபி அல்லது தேநீரைப் பருகியபடி செய்தித் தாளிலோ டிவியிலோ மூழ்குவதையே முக்கியப் பணியாக நினைக்கும் அப்பாக்களுக்குமானவைதான். பெற்றோர் என்பதில் அப்பாக்களும் அடக்கம் என்பதால் குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பும் போரில் அவர்களே முன் நிற்க வேண்டும்.

புதிய கல்வி ஆண்டில் களமாடுவதற்கு மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றொரும் ஷூ லேஸை இறுகக் கட்டிக்கொண்டு தயாராக வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in