நாங்களெல்லாம் அந்தக் காலத்தில்...

நாங்களெல்லாம் அந்தக் காலத்தில்...
Updated on
2 min read

வார விடுமுறை நாள்கள் முடிந்த பிறகு பணிக்குத் திரும்புவது பெரும்பாலானோருக்கு அலுப்பூட்டக்கூடியதாகவே இருக்கிறது. ஆனால், பள்ளி நாள்களில் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்குவது அலுப்பு ஊட்டியதேயில்லை.

தொலைபேசிகள் பரவலாகியிராத, கைபேசி என்றால் என்னவென்றே தெரிந்திராத 90கள் வரையிலான தலைமுறையினருக்கு இரண்டு மாத விடுமுறை என்பது நண்பர்களுடனான நீண்ட பிரிவும்தான். பள்ளி நாளில் தினமும் பார்க்கும் நண்பர்கள் கோடை விடுமுறையில் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியாது. பள்ளி நாள் நெருங்க நெருங்க நண்பர்களை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி மனதை ஆட்கொள்ளும்.

பள்ளி திறந்த முதல் நாளில் வகுப்பு நண்பர்கள் சிலர் காணாமல் போயிருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் தேர்வில் தோல்வியடைந்து முந்தைய வகுப்பில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பார்கள் (எட்டாம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சிபெற வைக்கும் நடைமுறை அப்போது இல்லை). நேரில் பார்க்கும்போது அவர்களின் முகங்களில் தெரியும் வருத்தம் சங்கடம் ஏற்படுத்தும். என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாது. அப்படித் தேர்ச்சி பெறத் தவறிய சிலர் அதற்குப் பின் விழிப்படைந்து நன்கு படித்து இன்று வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். வேறு சிலர் வேறு பள்ளிகளுக்கு மாற்றலாகிச் சென்றிருப்பார்கள். அவர்களுடனான தொடர்பு அப்படியே அறுந்துவிடும்.

புதிய வகுப்பிலும் முந்தைய ஆண்டில் தேர்ச்சி அடையத் தவறிய சிலர் இருப்பார்கள். அவர்கள் எங்களைவிட ஒன்றிரண்டு வயது மூத்தவர்களாக இருந்தாலும் சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய மாட்டார்கள். விரைவில் எங்கள் நட்பு வட்டத்தில் இணைந்துவிடுவார்கள். அந்த வகுப்புக்கான ஆசிரியர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் என்பதால் யாரிடமெல்லாம் ‘வால்’ நீட்டலாம், யாரிடமெல்லாம் ‘சுருட்டிக்’கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து அவர்கள் எச்சரித்துவிடுவார்கள்.

பள்ளி முதல் நாள் பெரும்பாலான ஆசிரியர்கள் பாடங்களைத் தொடங்க மாட்டார்கள். சிலர் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளச் செய்வது இனிமையான அனு பவமாக இருக்கும். ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் திரைப்படத்தில் ‘ஒருநாள் முதல்வ’ராக வரும் அர்ஜுன்போல் அறிமுகத்துக்கெல்லாம் நேரமில்லை என்று பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார்கள்.

பள்ளி திறந்த முதல் சில நாள்கள் புதிய நோட்டுகள் வாங்குவது, அட்டை போடுவது, வீட்டுப் பாடங்களைச் செய்வது என ஆரம்ப கட்ட ஆர்வத்தில் வேகமாக நகர்ந்துவிடும். புத்தகங்களைப் பெரும்பாலும் கடந்த ஆண்டு அதே வகுப்பைப் படித்த அண்ணன்கள், அக்காக்களிடமிருந்து பாதி விலைக்கு வாங்கிக்கொள்வோம்.

முதல் சில மாதங்கள் இப்படிப்பட்ட புதிய வகுப்பின் சுவாரசியத்திலேயே கடந்துவிடும். முதல் பருவத் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகுதான் ‘ஓ பள்ளிக்கு வருவது படிப்பதற்காகவும்தான்' என்பதே நினைவுக்கு வரும். ஆனாலும் கல்வி ஆண்டு முழுவதும் இனிமையான அனுபவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

அதுவும் உயர் வகுப்புகளில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரிந்த தகவல்களை எடுத்துவிட்டு எதிர்பாலினத்தவரைக் கவர முயல்வது, சக நண்பர்களைக் கலாய்ப்பது, ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் அவர்களைக் கிண்டலடிப்பது ஆகியவற்றின் காரணமாக வீட்டில் இருப்பதைவிட பள்ளிக்குச் செல்வதே மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். ஆக மாணவப் பருவத்தில் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்வதும் கொண்டாட்டத்துக்குரியதுதானே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in