கடற்கரையில் நாம் கவனிக்கத் தவறுபவை...

கடற்கரையில் நாம் கவனிக்கத் தவறுபவை...
Updated on
1 min read

நடைபயிற்சிக்காகவோ, நண்பர்களுடன் நேரத்தைக் கழிப்பதற்காகவோ, குடும்பத்தினருடன் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகவோ கடலுக்குச் செல்கிறோம். கடற்கரைக்குப் போய் ஓயாமல் அடிக்கும் அலைகளில் குழந்தைகளைப் போல் காலை நனைத்து மகிழ்கிறோம். வீடு திரும்பிவிடுகிறோம்.

முழுமையாக இல்லாவிட்டாலும் கடலின் சிறு பகுதியையாவது அறிய முற்படுகிறோமா? கடல் அனைத்து உயிரினங்களின் தொட்டில். இன்றைக்கும்கூடப் பல்வேறு வகையான உயிரினங்களின் வீடாக, மையமாக கடற்கரைகள் இருந்துவருகின்றன.

கரைப் பகுதியிலும், பொலபொலவென்ற மணல் பகுதியிலும் வளைக்குள் இருந்து நண்டுகள் எட்டிப் பார்ப்பதைப் பார்க்கலாம். ராணுவ வகை நண்டுகள் (Soldier Crab) ஈர மணலை உருட்டி உருட்டி மணற்பரப்பிலேயே கோலமிட்டிருப்பதையும் சில பகுதிகளில் பார்க்க முடியும்.

அப்படியே சற்று நடந்தால் பல வகையான சங்குகள், சிப்பிகள் காணப்படும். அந்தக் காலத்தில் வண்ண வண்ணமான இந்தச் சுண்ணாம்புச் சில்லுகளை குழந்தைகள் குதூகலத்துடன் சேகரிப்பார்கள். எல்லாச் சங்கு, சிப்பிகளும் ஏதோ ஒரு மெல்லுடலியின் கூடுதான். சிப்பியை மீனவர்கள் மட்டி என்கிறார்கள்.

சிப்பியின் மேற்புறம் ஒளி பாய்வதுபோல் வண்ணத் தீற்றல்கள் இருப்பது ஒளி மட்டி, வரிவரியாக இருப்பது வரி மட்டி, திருகாணியைப் போல இருக்கும் சங்குகள் திருகாணி ஊறி எனப்படு கின்றன. முள் முள்ளாக நீட்டிக்கொண்டிருக்கும் சங்கு வகை, சங்கு முள்ளி எனப்படுகிறது. அதேபோல் சில சங்குகளில் மெல்லுடலிக்குப் பதிலாகத் துறவி நண்டுகள் வீடாக்கி வசிக்கலாம்.

பறவைகளின் சுண்ணாம்புச் சத்துத் தேவைக்குக் கடைகளில் வெள்ளையாக ஓர் ஓட்டை வாங்கிப் போடுவோம். அதைக் கடல் நுரை எனச் சிலர் தவறாகக் கூறுகிறார்கள். இது கணவாய் (Squid) ஓடுதான். இதையும் கரையில் பார்க்கலாம்.

உடலில் காற்றை நிரப்பிப் பெரிதாக்கிக்கொள்ளும் வசதியைக் கொண்ட பேத்தை (Puffer), பங்குனி ஆமைகள், மீன்கள் போன்றவற்றின் சடலங்கள் சில நேரம் கிடைக்கலாம். சில கடற்கரைகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் கடல் ஆலா, கடற்காகங்கள் போன்ற பறவைகள் வந்துசெல்லும்.

கடற்கரைக்கு முன்னதாகச் சிறு மணற்குன்றுகள், அங்கே ஆட்டுக்கால் கொடி (Ipomoea), ராவண மீசை (Spinifex) போன்ற தாவரங்கள், கழிமுகத் தண்ணீருக்கு வெளியே சுவாச வேர்களை நீட்டியிருக்கும் அலையாத்தித் தாவரங்கள் இப்படி விநோதமான தாவர வகைகளைப் பார்க்கலாம்.

ஒரு கடற்கரையில் இயற்கை சார்ந்து இப்படி எத்தனையோ அம்சங்களை நாம் அவதானிக்க முடியும். ஆனால், அவற்றை எல்லாம் கவனிக்கவோ அறிந்துகொள்ளவோ முயல்கிறோமா?

இந்த இயற்கை அம்சங்களை எல்லாம் மறைப்பது போலவோ அல்லது இவற்றைவிட அதிகமாகவோ மீதமான உணவு, மக்காச்சோளத் தட்டைகள், ஞெகிழிப் பைகள், ஞெகிழிப் புட்டிகள், ஞெகிழிக் கரண்டிகள் என நாம் குப்பைகளாகப் போட்டவை அதிகமாகக் கிடக்கின்றன. இவை கடலையும் கடல் உயிரினங்களையும் நிச்சயம் பாதிக்கும். இந்தச் செயற்கை அம்சங்களைக் குறைத்துக்கொண்டு, இயற்கை அம்சங்களைக் கவனிக்கத் தொடங்குவோம்.

நன்றி: பல்லுயிர் அறக்கட்டளை, சென்னை

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in