கோள்களில் வைர மழை

கோள்களில் வைர மழை
Updated on
2 min read

நமது புடவியில் (பிரபஞ்சம்) உள்ள அனைத்துக் கோள்களிலும், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை மர்மம் நிறைந்தவையாக இருக்கின்றன. இந்த இரண்டு கோள்களும் நீல நிறத்தில் காணப்படுகின்றன. அங்கே தொடர்ந்து வைர மழை பொழிவதால் அவை அவ்வாறு நீல நிறத்தில் காட்சியளிக்கின்றன என்றும் கருதப்படுகிறது.

நாசாவின் சமீபத்திய பாட்காஸ்ட் ஒலிபரப்பு ஒன்றில், யுரேனஸ், நெப்டியூன் மீது வைர மழை பொழிகிறதா என்பதைக் கண்டறிவதற்கு நாசாவின் அதி நவீன ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எப்படி உதவும் என்பதை வானியற்பியல் நிபுணர் நவோமி ரோ பகிர்ந்துள்ளார்.

நாசாவின் ஆராய்ச்சி

நமது புடவியில் உள்ள கோள்கள், பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள், பால்வெளிக்கு அப்பாற்பட்ட நட்சத்திரங்கள், சிறிய கோள்கள் ஆகியவற்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த வகையான ஆராய்ச்சிகளின் மூலம் இதுவரை 5,000த்துக்கும் மேற்பட்ட புறக் கோள்களை நாசா கண்டறிந்துள்ளது.

வாயேஜர் 2

30 ஆண்டுகளுக்கு முன்னர், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் குறித்த நெருக்கமான தரவுகளை வாயேஜர் 2 நமக்கு அனுப்பத் தொடங்கியது. அதன் பின்னர், நாசா அந்தக் கோள்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தியது. நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இந்தக் கோள்கள் முதலில் கூர்ந்து ஆராயப்பட்டன. தற்போது இந்த ஆராய்ச்சிக்கு ஜேம்ஸ் வெப் எனும் நாசாவின் அதிநவீன துல்லியத் தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

6,500 கிலோ எடை கொண்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கக்கூடியது. இதன் காரணமாக, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் குறித்த கூடுதல் தரவுகள் நாசாவுக்குக் கிடைத்தன. இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களில் வைர மழை பொழிகிறதா என்பதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் உறுதிப்படுத்த முடியும் என நாசா தெரிவித்து இருக்கிறது.

வைர மழை பொழிவு

கோள்களில் வைர மழை பொழிவு குறித்த கருத்தியல்கள் 1981ஆம் ஆண்டிலிருந்து பேசப்பட்டு வருகின்றன. யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களில் வைரங்கள் மழையாகப் பொழியக்கூடும் என்கிற கருத்தியலை முதலில் தெரிவித்தவர் மார்வின் ராஸ். அந்தக் கருத்தியலை 1981இல் வெளியிட்டார். ஆனால், அவற்றை அறிவியல் ரீதியில் நிறுவுவதற்குத் தேவையான தரவுகள் நமக்குக் கிடைக்காமலே இருந்தன.

இதற்கு முன்னர் கிடைத்த தரவுகளின்படி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கு மீத்தேன் வாயுவே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு கோள்களிலும் இருக்கும் மீத்தேன் வாயு முழுக்க கார்பன் மூலத்தால் உருவானது என்றும் நம்பப்படுகிறது. இத்துடன் இந்தக் கோள்களில் அதீத அழுத்தமும் வெப்பநிலையும் காணப்படுகிறது. இதன் விளைவாக, இந்தக் கோள்களில் இருக்கும் கார்பன் மூலங்கள் அதீத அழுத்தத்தால் அப்படியே அழுத்தப்பட்டு, வைரமாக மாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கருதினர்.

ஆபத்தான மழை

நீண்ட நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் வைர மழை கருத்தியலை அதி நவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதிப்படுத்தும் என்று நாசா நம்புகிறது. நாசாவின் விஞ்ஞானி ரோ இதுபற்றிக் கூறுகையில், ”இந்த இரண்டு கோள்களில் மீத்தேன் உள்ளது உறுதி. அதிக அழுத்தம் இருப்பதும் உறுதி. இதனால் அங்கிருக்கும் கார்பன் வைரமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இவை மிகவும் வலிமையாகவும், அதிக எடையுடன் காணப்பட வாய்ப்பு உள்ளது என்றும் நாங்கள் கணிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த வைர மழை, பூமியில் பொழியும் மழையைப் போல் இருக்காது. அது மிகவும் ஆபத்தானது. நாம் அறிந்த வரையில் வைரமே மிகவும் கடினமான பொருள். இதன் காரணமாக, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களின் வளிமண்டலத்திலிருந்து வேகமாக விழும் வைரங்கள் ஆயுத குண்டுகளைப் போல் செயல்படும் என்றும் நாசாவின் அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ வைர மழை பொழிகிறதா என்கிற கேள்விக்கான விடையை நாம் நெருங்கிவிட்டோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in