

இன்றைய வாழ்க்கை முறை நவீனத் தொழில்நுட்பங்கள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. இன்று நாம் எங்கும், எதிலும் தனியாக இருப்பதில்லை. பாதுகாப்புக்காக நாம் பின்தொடரப்படுகிறோம். நம்மை அறியாமலே நாம் எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறோம். நம்மைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாகப் பாதுகாப்பு கேமரா இருக்கிறது. நமக்கும் நம் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது. புல்லட் கேமரா, டோம் கேமரா எனப் பாதுகாப்பு கேமராக்களில் இரண்டு வடிவமைப்புகள் . இவை அனலாக், ஐ.பி. ஆகிய இரண்டுவிதமான தொழில்நுட்பங்களில் கிடைக்கின்றன.
புல்லட் கேமரா
ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்காணிப்பதற்கு புல்லட் கேமராவே சிறந்தது. இது வழக்கமாகப் பக்கவாட்டுச் சுவரில் பொருத்தப் பட்டிருக்கும். அங்கிருந்து நமக்கு வேண்டிய இடத்தைக் கண்காணிக்கும்படி குறிப்பிட்ட கோணத்தில் அது நிறுவப்பட்டிருக்கும்.
இந்த வகை கேமராவை வீட்டில் பொருத்துவது மிகவும் எளிது. இந்த கேமராவின் அடிப்பகுதி தகட்டை மட்டும் சுவரில் நிறுவினால் போதும். அதன் பின் கேமராவின் கோணத்தை நமக்கு வேண்டிய விதமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
இந்த கேமராவுக்கு வெயில், மழையைத் தாக்குப் பிடிக்கும் திறன் உண்டு. இதன் பார்வை பரப்பு மிக அகன்றதாக இருக்கும். குறைந்த வெளிச்சத்திலும் இதனால் துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். வீட்டின் முற்றம், கார் நிறுத்தும் இடம், வீட்டின் பின்புறம், தோட்டம் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு இந்த புல்லட் கேமராவே சிறந்த தேர்வாக இருக்க முடியும்.
டோம் கேமரா
இந்த கேமராவுக்கு 360 பாகையில் பார்க்கும் திறன் உண்டு. இதன் பார்க்கும் சுற்றளவும் பெரியது. இது நமது இமை போன்ற கூண்டுக்குள் இருக்கும். இதனால் அது எந்தக் கோணத்தில் எந்த இடத்தைப் பார்க்கிறது என்று அங்கு இருப்பவருக்குத் தெரியாது. இந்த கேமரா கூண்டுக்குள் இருப்பதால் இது எளிதில் உடையாது.
திறந்தவெளி இடங்களைக் கண்காணிப்பதற்கு இந்த கேமரா உகந்தது அல்ல. அறைகள் போன்ற இடங்களைக் கண்காணிப்பதற்கு இது மிகவும் சிறந்தது. வீடுகளின் வரவேற்பறை, சமையலறை, லிஃப்ட் போன்ற இடங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
ஐ.பி. கேமரா
இந்த கேமரா நேரடியாக நம் வீட்டின் இணைய நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டிருக்கும். காட்சிப் பதிவுகளை நேரடியாக இணையத்தில் அனுப்பும் திறன் இதற்கு உண்டு. இதன் காரணமாக, அதன் காட்சிப் பதிவுகளை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதில் பார்க்க முடியும். இந்த கேமராவின் விலை சற்று அதிகம் ஆனால், இதை நிறுவுவது மிகவும் எளிது. இது பிஒஇ (POE) சுவிட்சைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் மின்சாரத்துக்கு என்று தனி இணைப்பு இதற்குத் தேவையில்லை. இது நெட்வொர்க் இணைப்பிலிருந்தே மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். இதை இணையத்தின் வழியாக இயக்கவும் முடியும்.
அனலாக் கேமரா
அனலாக் கேமரா பதிவுக் காட்சிகளின் தரம் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும். குறைவான வெளிச்சத்திலும், புகை மிகுந்த சூழ்நிலைகளிலும் இதனால் காட்சிகளைப் பதிவுசெய்ய முடியும். அனலாக் கேமரா பதிவுசெய்யும் காட்சிப் பதிவுகளை டிஜிட்டலாகப் பதிவுசெய்வதற்கு நமக்கு டிஜிடல் வீடியோ ரிக்கார்டர் தேவைப்படும்.
அனலாக் கேமராவை டிவிஆர் (DVR) உடன் இணைப்பதற்கு நமக்கு கோஆக்சியல் (Coaxial) கேபிள் தேவைப்படும். அது தவிர கேமராவுக்கு ஆற்றல் அளிக்க மின்கம்பியும் தேவைப்படும். அனலாக் கேமராவின் விலை குறைவு. ஆனால், டிவிஆர், கோஆக்சியல் கேபிளின் விலையைக் கணக்கில் கொண்டால் இதன் ஒட்டுமொத்த விலை அதிகரித்துவிடும்.