

உலகின் மிகப்பெரிய பாக்டீரியா கரிபியன் சதுப்பி நிலக் காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 2 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இந்த பாக்டீரியா குறித்து பயோ ஆரெக்ஸைவி என்னும் உயிரியல் ஆய்வுகள் தொடர்பான இணைத்தில் வெளியான ஆய்வு அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
இது வரை கண்டறியப்பட்ட பாக்டீரியாவைவிட இது 5 ஆயிரம் மடங்கு பெரியது. இது ஒரு மனிதன் தன் சக மனிதனை எவரஸ்ட் சிகரத்துக்கு ஒப்பாகப் பார்ப்பதற்குச் சமமானது என இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியும் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் கடல் உயிரியலாளருமான ஜீன்-மேரி வோலண்ட் கூறியுள்ளார்
கரிபியன் சதுப்புநில சதுப்பு நிலப் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த வகை பாக்டீரியாவை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அளவில் மிகப் பெரியதான இந்த வகை பாக்டீரியாவை நுண்ணோக்கி உதவி இன்றி வெறும் கண்ணால் காண முடியும்.
இந்தக் கண்டறிவு குறித்து உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்விதழான சைன்சிலும் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பாக்டீரியாவுக்கு தியோமார்கரிட்டா மாக்னிஃபிகா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பாக்டீரியா, 2 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக் கூடும்.
ஃபிரெஞ்ச் வெஸ்ட் இண்டீஸ், கயானா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் உயிரியலாளருமான ஆலிவர் க்ரோஸ், 2009 ஆம் ஆண்டில் குவாடலூப் தீவுக்கூட்டத்தில் மூழ்கிய சதுப்புநிலக் காடுகளின் இலைகளில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இந்த உயிரினம் ஒட்டி இருப்பதை முதலில் கண்டறிந்தார். பின்னர் சதுப்பு நிலத்தில் இருந்த பாறைகளிலும் கண்ணாடி பாட்டில்களிலும் இதே உயிரினத்தை அவர் கண்டறிந்தார்.
க்ரோஸ் சந்தேகித்தாலும், அந்த உயிரினத்தின் அளவு காரணமாக அது ஒரு பாக்டீரியா என்பதை அவர் உடனடியாக அறியவில்லை. பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வில், அந்த உயிரினம், ஒரு பாக்டீரியா என்று தெரியவந்தது.
ஆய்வக கலாச்சாரத்தில் இந்த பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்களால் வளர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்ட விஞ்ஞானிகள் இந்த பாக்டீரியா அசாதாரணமான அமைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். சிறிய உயிரினங்களால் உண்ணப்படுவதைத் தவிர்க்க இந்த பாக்டீரியா பெரிய அளவாக வளர்ந்திருக்கக் கூடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்டீரியா எந்த நோய்ப் பாதிப்பையும் விளைவிக்கக் கூடியது அல்ல என்றும் மேலும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.