வேகமாக வளர்ந்துவரும் கருந்துளை

வேகமாக வளர்ந்துவரும் கருந்துளை
Updated on
2 min read

ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் வேகமாக வளரும் கருந்துளை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிக வேகமாக வளரும் கருந்துளை இதுவே.

ஒரு நொடியில் நாம் வாழும் பூமியை உள்ளிழுத்து விடும் அளவுக்குத் திறனை அது கொண்டிருப்பதாகக் கூறி நம்மை அந்த ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்கள். அவ்வாறு பூமி இழுக்கப்பட்டால், சமுத்திரத்தில் ஊசி விழுந்தால் எப்படி மறைந்துவிடுமோ அதைப் போன்று நம் பூமியும் அதில் தொலைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அதிக ஒளி ஆற்றல்

இந்த கருந்துளை, புடவியிலிருக்கும் அனைத்து ஒளிகளையும் விட 7 ஆயிரம் மடங்கு அதிகமான வெளிச்சத்தைக் கொண்டுள்ளது. இந்த வெளிச்சத்தின் காரணமாகவே, இந்த கருந்துளையை உலகம் முழுவதும் இருக்கும் பல வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விண்வெளியில் இரட்டை நட்சத்திரங்களைத் தேடும் நோக்கில் ஸ்கைமேப்பர் சர்வே மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தக் கருந்துளை அது ஈர்க்கும் ஒளிகளின் மூலமாக ஆஸ்திரேலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. அந்த ஆய்வுகளை ஆஸ்திரேலியா வானியல் சொசைட்டியின் ஆய்விதழில் அவர்கள் சமர்ப்பித்து உள்ளனர்.

ஆச்சரியம் அளிக்கும் கண்டறிதல்

இதுவரை ஆற்றல் குறைந்த ஆயிரக்கணக்கான கருந்துளைகளே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் கருந்துளையைப் போன்ற ஆற்றல் வாய்ந்த விண்வெளிப் பொருள்களை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வானியல் ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். இருப்பினும், அதிக அளவில் ஒளி ஆற்றலைக் கொண்டிருக்கும் இந்த கருந்துளை ஆய்வாளர்களின் கண்ணில்படாமலே இருந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளர் முனைவர் கிறிஸ்டோபர் ஓன்கென் இதுகுறித்து கூறிய போது, `இத்தகைய வெளிச்சம் கொண்ட கருந்துளை நம் அனைவரின் பார்வையிலிருந்து தப்பித்துள்ளது என்பது பெரும் ஆச்சரியமே' எனக் கூறியுள்ளார்.

கருந்துளை எப்படி உருவாகிறது?

நட்சத்திரங்கள் மரணிக்கும்போது, அவை அளவில் சுருங்கி, அதிக ஈர்ப்பு ஆற்றல்கொண்ட கருந்துளையாக உருவெடுக்கின்றன. இந்த கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியாது. சுற்றியுள்ள வெளியிலிருந்து கருந்துளைகளால் உறிஞ்சப்படும் வெளிச்சத்தின் மூலமே அது கண்டறியப்படுகிறது என்பதை இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும்.

எதுவும் தப்ப முடியாது?

தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கருந்துளை, நமது பால்வெளியில் இருக்கும் மற்ற கருந்துளைகளை விட 500 மடங்கு பெரியதாக உள்ளது என ஆஸ்திரேலியாவின் தேசியப் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, நமது பால்வெளியில் இருக்கும் அனைத்து கோள்களையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் அளவுக்கு அது பெரியதாக உள்ளது.

இரண்டு பெரிய கேலக்ஸிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் மட்டுமே இதுபோன்ற பெரிய அளவிலான கருந்துளை உருவாகும். இந்த கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் நம் கற்பனைக்கு எட்டாதது. இதில் மோதும் எதுவும் தப்ப முடியாது. இது விண்கற்களுக்கு மட்டுமல்லாமல்; நமது பூமிக்கும் பொருந்தும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in