ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய வான்வெளி காட்சி

ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய வான்வெளி காட்சி
Updated on
2 min read

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்கள் நிலவுடன் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அரிய நிகழ்வு இன்று காலையில் தொடங்குகிறது. இந்த நிகழ்வைக் கிழக்கு - தென் கிழக்கு வானில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை சூரிய உதயத்திற்கு முன்பாக வெறும் கண்களில் நம்மால் காண முடியும். ஜூன் 26க்குப் பின்னர் இந்த அணிவகுப்பிலிருந்து நிலவு விலகிவிடும்.

கோள்களும் நிலவும் இதே போன்று மீண்டும் அணிவகுப்பதைக் காணும் வாய்ப்பு நமக்குப் பல தசாப்தங்களுக்குப் பின்னரே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் 2004 டிசம்பர் மாதமே இத்தகைய நிகழ்வைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தற்போதைய நிகழ்வு 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கிறது. மீண்டும் இத்தகைய அணிவகுப்பு 2040இல் மட்டுமே ஏற்படும். எனவே, தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை வானியல் ஆர்வலர்கள் தவறவிடாமல் இருப்பது நல்லது.

எங்கிருந்து பார்க்க முடியும்?

உயரமான கட்டிடங்கள், பெரிய மரங்கள் உள்ளிட்ட உயரமான பகுதியிலிருது பார்க்கலாம். கடலும் வானும் இணையும் அடிவானத்தைப் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும் கடற்கரையிலிருந்தும் இந்த அணிவகுப்பை நாம் பார்க்க முடியும். ஆனால், சூரிய உதயத்துக்கு முன்னர் மட்டுமே இவற்றை பார்க்க முடியும்.

கோள்களின் நேர்வரிசை

கோள்கள் இவ்வாறு நேர்கோட்டில் தோன்றுவது "கோள்களின் நேர்வரிசை' எனப்படுகிறது. கோள்கள் சூரியனை வெவ்வேறு பாதைகளில் வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. கோள்கள் அனைத்தும் நிஜத்தில் ஒரே தளத்தில் நேர்த்தியாகச் சுற்றுவதில்லை. மாறாக, அவை பல்வேறு சுற்றுப்பாதைகளில், முப்பரிமாண இடைவெளியில் சுற்றிவருகின்றன. அவற்றுக்கிடையேயான தூரம் தொடர்ந்து மாறி வரும். இதன் காரணமாக அவை ஒருபோதும் ஒரே நேர்கோட்டில் வராது.

எனவே, கோள்களின் நேர்வரிசை என்பது இங்கே ஒரே நேர்கோட்டைக் குறிக்கவில்லை, மாறாக ஒரே வான் பகுதியில் அவை இருப்பதைக் குறிக்கிறது. வானவியலில், இரண்டு வான் பொருள்கள் அல்லது விண்கலங்கள் பூமியிலிருந்து பார்க்கும் விதமாகக் ஒரே கிரகண தீர்க்க ரேகையைக் கொண்டிருக்கும்போது ஏற்படும் அரிய அணிவகுப்பு இது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இது ஏற்படும்.

சூரியனின் ஒரு பக்கத்தில் மூன்று கிரகங்கள் ஆண்டுக்கு இரண்டு முறையும், நான்கு கிரகங்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், ஐந்து கிரகங்கள் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், எட்டு கிரகங்கள் 170 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இவ்வாறு அணிவகுக்கின்றன.

கோள்கள் தென்படும் விதம்

செவ்வாய் கோள் அடிவானத்திற்குச் சற்று மேலே பிரகாசமாகத் தெரியும். தென்கிழக்கு வானில், வியாழன் கோளுக்கு அருகில் இருக்கும் செவ்வாய் கோள் சிவப்பாகக் காட்சி தரும். அதற்குத் தெற்கே சனிக் கோள் தென்படும். புதன் கோள் சூரியனுக்கு எதிர்த் திசையில் இருப்பதால் அது மங்கலாகவும், பார்ப்பதற்குக் கடினமாகவும் இருக்கும். மங்கலாக இருப்பதால், புதன் கோளை தொலைநோக்கி இல்லாமல் கண்டறிவது கடினம்.

மேகங்கள் இல்லாத காலையில், சூரிய உதயத்திற்கு 45-60 நிமிடங்களுக்கு முன்னர் இந்தக் கோள்கள் நன்றாகத் தெரியும். இந்த கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றாலும், தொலைநோக்கியைப் பயன்படுத்தும்போது அவை மிகவும் துல்லியமாகத் தெரியும்.

பூமிக்குப் பாதிப்பு ஏற்படாது

கோள்கள் சீரமைக்கப்படும்போது, அவை பூமியில் மின்காந்த தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றின் ஈர்ப்பு விசைகள் மட்டும் உணரப்படும். இந்த ஈர்ப்புவிசை நிலவை விடப் பல்லாயிரக்கணக்கான மடங்கு பலவீனமானது. எனவே, இது பூமிக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in