விண்கல்லின் துகள்களை வாங்குவதற்குப் போட்டிப் போடும் நாடுகள்

விண்கல்லின் துகள்களை வாங்குவதற்குப் போட்டிப் போடும் நாடுகள்
Updated on
2 min read

2014 ஆம் ஆண்டு ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஹயபுசா 2 என்கிற விண்கலத்தை ரியுகு எனும் விண்கல்லுக்கு அனுப்பியது. கிட்டத்தட்ட 800 மீட்டர் அகலம் கொண்ட அந்த விண்கல் சூரியனிலிருந்து 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூமியிலிருந்து என்று எடுத்துக்கொண்டால், அது சூரியனின் சுற்றுப்பாதையில், செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில், பூமியிலிருந்து 30 கோடி கிமீ தொலைவில் உள்ளது.

2014 பிப்ரவரியில் அந்த விண்கல்லில் தரையிறங்கிய ஹயபுஸா-2, அந்த விண்கல்லின் மேற்பரப்பை 2 மாதங்கள் ஆய்வு செய்தது. அதன் பின்னர் 'ஸ்மால் கேரி ஆன் இம்பேக்டர்' என்று அழைக்கப்பட்ட 14 கிலோ எடையுள்ள வெடிபொருளைப் பயன்படுத்தி அந்த விண்கல்லின் மாதிரி சேகரிக்கப்பட்டது. அந்த மாதிரியை ஹயபுஸா-2 பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பிவைத்தது.

விண்கல் மாதிரிகள் அடங்கிய கேப்சூல், டிசம்பர் 2020இல் ஆஸ்திரேலியாவில் உள்ள வூமேரா என்கிற இடத்தில் தரையிறங்கியது. அது உடனடியாக டோக்கியோவில் உள்ள ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (ஜாக்ஸா) ஆராய்ச்சி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

போட்டோ போட்டி

சூரிய மண்டலம் எப்படி உருவானது?, பூமியில் உயிரினங்கள் எப்படி உருவாகின? என்பதைக் கண்டுபிடிக்க, இந்த விண்கல் மாதிரியின் ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த ஆய்வை ஜாக்ஸாவும் நாசாவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. இந்த மாதிரிகளை வாங்குவதற்குத்தான் பல்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் இன்று போட்டிப் போடுகின்றனர்.

இந்த விண்கல்லின் துகள்களை ஆய்வுக்காகப் பெற ஆராய்ச்சி குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதைப் பெறுவதற்கு 12 நாடுகளிலிருந்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றிலிருந்து 40 விண்ணப்பங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.

அதில் என்ன இருக்கிறது?

அந்த விண்கல்லின் மாதிரிகளில் 20 அமினோ அமிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அமினோ அமிலங்கள் என்பது ஒரு முக்கிய மூலக்கூறு. உயிர் வளர்ச்சிக்கு உதவும் புரோட்டின்கள் உருவாக இந்த மூலக்கூறுகளே காரணமாக இருக்கின்றன. உணவு செரிப்பதற்கும், உயிர் வளர்வதற்கும், உடலின் திசுக்கள் வலுப் பெறுவதற்கும் இந்த மூலக்கூறுகளே ஆதாரமாகத் திகழ்கின்றன. உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலையும் இவையே அளிக்கின்றன.

இதற்கு முன்பு பூமியில் விழுந்த விண்கற்களிலிருந்தும் இது போன்ற அமினோ அமிலங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், அவற்றில் அமினோ அமிலங்கள் மிகக் குறைந்த அளவே கிடைத்திருக்கின்றன. ஏனென்றால், பூமியின் வளிமண்டலத்தில் விண்கற்கள் நுழையும் போது அவை எரிந்துவிடுகின்றன. இதன் காரணமாக அமினோ அமில மூலக்கூறுகளைப் பெருமளவில் இழந்த பின்னரே அந்த விண்கற்கள் பூமியில் விழுகின்றன.

ஆனால், ஹயபுஸா-2 விண்கலம் அனுப்பியிருக்கும் விண்கல்லின் மாதிரிகளில் இருக்கும் அமினோ அமில மூலக்கூறுகள், சூரியக்குடும்பத்தின் தோற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்.

புடவியின் ரகசியம்

ரியுகு விண்கல் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, இந்த விண்கல் பூமி தோன்றுவதற்கு முன்பாகவே உருவாகியிருக்கிறது எனக் கருதப்படுகிறது. பூமி உருவாகுவதற்கு முன்னர் தோன்றிய விண்கல் என்பதால், அதன் துகள்களைப் பூமியில் காண முடியாது. இந்த விண்கல்லின் துகள்களில் புடவியின் ரகசியங்கள் புதைந்து இருக்கலாம் என அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in