விண்வெளியில் அற்புதம்: கருந்துளையின் நகர்வைக் கண்டறிந்த நாசா

விண்வெளியில் அற்புதம்: கருந்துளையின் நகர்வைக் கண்டறிந்த நாசா
Updated on
2 min read

1916-ம் ஆண்டிலேயே கருந்துளை எனும் ஒன்று இருக்கலாம் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். இருப்பினும், 1967-ம் ஆண்டில்தான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்கிற பெயரை உருவாக்கினார். முதல் கருந்துளை 1971இல் கண்டறியப்பட்டது என்றாலும், விண்வெளியில் ஒரு தனிக் கருந்துளை நகர்ந்து செல்வதற்கான நேரடி ஆதாரங்களை முதன்முறையாக நாசா தற்போதே வழங்கியுள்ளது.

நாசாவின் அதிநவீன விண்வெளி தொலைநோக்கியான ஹப்பிள், உள்ளீடற்ற உருத்தோற்றத்தின் (phantom) துல்லியமான அளவீடுகள் மூலம் இதைக் கண்டறிந்துள்ளது. தன்னந்தனியாக விண்வெளியில் நகர்ந்து செல்லும் இந்தக் கருந்துளை, தற்போது பூமியிலிருந்து சுமார் 5,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அங்கேதான் நமது விண்மீன் மண்டலத்தின் கரினா-சகிடரியஸ் ஆர்ம் (Carina-Sagittarius arm) உள்ளது.

கருந்துளைகளின் அளவீடு என்பது இதுவரை விண்மீன்களின் மையத்துடனான தொடர்புகளின் மூலமாக நிர்ணயிக்கப்படும் ஒன்றாகவே இருந்தது. அதாவது கருந்துளைகள் எப்போதும் துணை நட்சத்திரங்களுடன் மட்டுமே இதுவரை காணப்பட்டு வந்தன. இந்த நிலையில் நாசா கண்டறிந்து இருக்கும் இந்தத் தனிக் கருந்துளையின் நகர்வு, கருந்துளை குறித்த அறிவியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்துள்ளது.

ஏன் நகர்கின்றன?

கருந்துளைகள் பொதுவாகப் பெரிய நட்சத்திரங்கள் தாமாகவே வெடித்துச் சிதறும் போதே ஏற்படுகின்றன. பெரிய நட்சத்திரத்தின் வெடிப்பு ஒரு சூப்பர் நோவாவை ஏற்படுத்துகிறது. அதன் மீதமுள்ள மைய பாகம் புவியீர்ப்பு விசையால் நசுக்கப்பட்டு கருந்துளையாக மாறுகிறது. இந்த நட்சத்திரங்களின் சுய-வெடிப்பு முற்றிலும் சமச்சீராக இல்லாததால், இந்தக் கருந்துளைகள் ஓர் உந்துதலுக்கு ஆட்படலாம். அந்த உந்துதல் அவற்றை ஒரு திசையில் அதிக வேகத்தில் பயணிக்கச் செய்யக்கூடும்.

எவ்வாறு கண்டறியப்படுகிறது?

கருந்துளைகளைத் தொலைநோக்கிகளின் மூலம் ஒளிப்படம் எடுக்க முடியாது. காரணம், அவை ஒருபோதும் ஒளியை வெளியிடாது. ஆனால், அவை விண்வெளியில் இடத்தைப் பிரிக்கும். இதன் காரணமாக, அதற்கு அருகில் வரிசையாக இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியைத் திசை திருப்பவோ சிதைக்கவோ பெருக்கவோ செய்யும்.

தரையில் நிறுவப்பட்டு இருக்கும் தொலைநோக்கிகள், நமக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் ஒரு பெரிய பொருள் கடந்து செல்வதற்கான அறிகுறியாக இருக்கக்கூடிய அத்தகைய ஒளிமாற்றத்தையே தேடுகின்றன. இந்தத் தேடல் மைக்ரோலென்சிங் என்று அழைக்கப்படுகிறது.

மைக்ரோலென்சிங்

மைக்ரோலென்சிங் அளவீடுகளுக்குத் தேவையான துல்லிய அறிதல் திறனைக் கொண்டது ஹப்பிள் தொலைநோக்கி. இதன் காரணமாக, கருந்துளை மூலம் மைக்ரோலென்சிங்கின் சரியான அளவை அளவிட ஹப்பிள் பயன்படுத்தப்பட்டது. நட்சத்திரத்தின் பிம்பம், அதன் நிலை என்னவாக இருந்திருக்க வேண்டும் என்பதிலிருந்து சுமார் ஒரு மில்லியார்க் செகண்ட் வரை அது அளவீடு செய்தது. இந்த முயற்சி, பூமியிலிருந்து நிலவின் மேற்பரப்பில் படுத்திருக்கும் ஒரு வயது முதிர்ந்த மனிதனின் உயரத்தை அளவிடுவதற்குச் சமம்.

கருந்துளையின் பிரிவுகள்

பொதுவாகக் கருந்துளையின் அளவைப் பொறுத்து அது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அவை முறையே ஸ்டெல்லர் கருந்துளைகள், சூப்பர்மேசிவ் கருந்துளைகள், இன்டர்மீடியட் கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றுள் ஸ்டெல்லர் கருந்துளைகள் என்பது அளவில் சிறியது; மிகுந்த அடர்த்தி உடையது. நம் சூரியனைவிட ஐந்து மடங்குக்கு மேல் பெரிதாக உள்ள நட்சத்திரங்கள் தன் அந்திமக்காலத்தில் 'ஸ்டெல்லர் கருந்துளையாக' மாறுவதற்கான சாத்தியம் அதிகம்.

நாமும் கருந்துளையின் அங்கமே

சூரியனைவிட அளவில் பெரிதாக இருக்கும் நட்சத்திரங்கள் கருந்துளையாக மாறும்போது ஒரு நகரத்தின் அளவே இருக்கும். ஆனால், இதன் அடர்த்தி அதிகம் என்பதால், இதன் ஈர்ப்பு விசை நாம் கணிக்க முடியாத அளவில் இருக்கும். இந்த ஈர்ப்பின் காரணமாக, கருந்துளைத் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஈர்த்து, இணைத்துக்கொள்வதன் மூலம் அளவில் பெரிதாகிக்கொண்டே செல்லும். நமது பால்வெளி மண்டலத்தில் மட்டும் சில நூறு மில்லியன் ஸ்டெல்லர் கருந்துளைகள் இருக்கும் எனக் கணித்துள்ளனர் அறிவியலாளர்கள். நமது சூரியக் குடும்பம்கூட 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் சகிடரியஸ் ஆர்ம் என்கிற இடத்தில் அமைந்துள்ள கருந்துளையைத்தான் சுற்றி வருகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in