தெரிந்த பொருள் தெரியாத கண்டுபிடிப்பு 1: சோடா மூடி எப்படி உருவானது?

தெரிந்த பொருள் தெரியாத கண்டுபிடிப்பு 1: சோடா மூடி எப்படி உருவானது?
Updated on
2 min read

சோடா, கலர் பாட்டிலில் குளிர்பானத்தைப் பருகியிருப்பீர்கள். பாட்டிலின் மேலே உள்ள மூடியைத் திறக்க என்ன செய்வீர்கள்? ஓபனரை வாங்கித் திறப்பீர்கள் அல்லது பல்லால் கடித்துத் திறப்பீர்கள். மூடியைத் திறந்த பிறகு தூரப் போடுவீர்கள். அந்த மூடியின் பின்னால் உள்ள கதையில் பயணிப்போமா?

காற்றுகூடப் புக முடியாத அளவுக்குப் பாட்டிலை இறுக்கமாக மூடியிருக்கும் மூடி மட்டும் இல்லாவிட்டால் குளிர்பானங்களைப் பத்திரமாக உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. சோடா, கலர் பாட்டிலைப் பல இடங்களுக்கும் அனுப்ப உதவியது மூடிதான். இந்த மூடியின் கண்டுபிடிப்பில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதைப் புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஏனெனில், இந்த மூடி கண்டுபிடிப்பதற்கு முன்பாக சோடா பானங்களை வெளியிடங்களுக்கு அனுப்ப ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சிரமத்தைக் களைந்த பெருமைக்குச் சொந்தக்காரர் அயர்லாந்தைச் சேர்ந்த வில்லியம் பெயிண்டர். இவர் ஒரு பொறியாளர்.

வில்லியம் பெயிண்டர்
வில்லியம் பெயிண்டர்

1880களில் சோடா பானங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அதனால், அதைப் பருகும் பழக்கம் எல்லாத் தரப்பினரிடமும் இருந்தது. தொடக்கக் காலத்தில் குளிர்பானக் கடைகளிலும் பணக்காரர்கள் வந்து செல்லும் பப்களில் மட்டுமே சோடா கிடைத்தது. சோடா பாட்டிலை மூடச் சரியான மூடி இல்லாததால் வெளியில் எடுத்துச் செல்வது சற்று கடினமாகவே இருந்தது. ஆனாலும், சில உலோகத் தக்கைகளை மூடி போல மூடி சோடாவை வெளிச் சந்தைக்கு எடுத்து சென்றார்கள். கார்பன் டை ஆக்ஸைடைக் கொண்ட இந்தப் பானங்களில் நுரை பொங்கிக்கொண்டே இருக்கும் என்பதால், தக்கை மூடிகள் மூடுவதற்குச் சரிப்பட்டு வரவில்லை.

அதுமட்டுமல்ல, இந்த உலோகத் தக்கையில் சோடா பானம் படும்போது, அது வேதி வினையாகி பானத்திலும் கலந்தது. இதனால், இந்த மென்பானம் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிப் பருக முடியாத அளவுக்குக் கெட்டுப்போகும் நிலை இருந்தது. இந்த ஆபத்தையும் போக்க வேண்டிய அவசியம் இருந்தது. இதுபோன்ற சூழலில்தான் வில்லியம் பெயிண்டர் சோடா பாட்டிலை மூடும் இந்த வகை மூடியைக் கண்டுபிடித்தார். பாட்டிலின் மேல்பகுதியை இறுக்கமாக மூடும் அளவுக்குக் கச்சிதமாக இருந்தது இந்த மூடி. இதிலும் சோடா பானத்துக்கும் மூடியின் உலோகத்துக்கும் இடையில் மெல்லிய தக்கை அமைக்கப்பட்டது. இதில் மூடியும் சோடாவும் ஒன்றையொன்று தொட முடியாமல் தடுக்கப்பட்டது. இந்த மூடிக்கு ‘க்ரௌன் கார்க்’ என்று பெயிண்டர் பெயரிட்டு அழைத்தார்.

ஆரம்பக் காலத்தில் மூடியில் 24 பற்கள் இருப்பது போல அமைக்கப்பட்டது. இந்த மூடியைப் பாட்டிலுடன் பொருத்துவதில் சரிவரக் கையாளவில்லையென்றாலோ கவனக்குறைவாலோ பாட்டில் உடைந்துபோகும் நிலை இருந்தது. இதனால், மூடியைப் பொறுத்து அதற்கேற்ற பிரத்யேக பாட்டில்கள் தேவைப்பட்டன. இந்தச் சவாலுக்கும் பெயிண்டரே தீர்வு கண்டார். பாட்டிலில் மூடியைப் பொருத்த வசதியாகக் கால்கள் உதவியுடன் இயங்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அதை சோடா விற்பனையாளர்களுக்கு விற்றார். இந்தக் கருவியைக் கொண்டு பாட்டில்களில் எளிதாக அழுத்தத்தில் மூடியைப் பொருத்த முடிந்தது.

இதன்மூலம் சோடா பானத்தை உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிந்தது. இதன் தொடர்ச்சியாக வில்லியம் பெயிண்டர் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கினார். பாட்டில்களைத் திறக்க உதவும் ஓபனரையும் பெயிண்டர்தான் 1894-ல் உருவாக்கினார். பின்னர் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லாம் வில்லியம் பெயிண்டர் காப்புரிமை பெற்றார்.

(கண்டுபிடிப்போம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in