

கடந்த மே மாத இறுதியில் விண்வெளியில் புதிதாக நிறுவப்பட்டு இருக்கும் நாசாவின் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்’ எனும் விண்வெளி தொலைநோக்கியின் மீது எதிர்பார்த்ததை விடப் பெரிய விண்வெளித் துகள்கள் மோதின. அதன் காரணமாக அந்த தொலைநோக்கியின் 18 முதன்மை கண்ணாடிப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்பட்டது.
இந்தச் சேதத்தைச் சரிசெய்வதற்குச் சிறப்புத் தொழில்நுட்ப குழுவின் உதவி தேவைப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த தொலைநோக்கி இன்றும் செயல் நிலையில் உள்ளது என்பதை நாசா உறுதிசெய்துள்ளது.
அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கி
நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி, அல்லது ஜேடபிள்யூஎஸ்டி எனப்படுவது நாசாவின் நம்பமுடியாத அளவுக்குத் திறன் கொண்டிருக்கும் அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கி. நாசாவின் 20 ஆண்டுகள் உழைப்பில் உருவான அந்த தொலைநோக்கிக்குக் கிட்டத்தட்ட 78,000 கோடி ரூபாய் செலவானது.
இது புடவியின் தொலைதூர பகுதிகளைப் பார்க்கவும், பெருவெடிப்புக்குப் பின்னர் உருவான நட்சத்திரங்கள், விண்மீன் திரள்களை மீண்டும் பார்க்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2021 கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்த தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது. சிக்கல் மிகுந்த பல செயல்முறைகளுக்குப் பின்னர் அது பூமியிலிருந்து சுமார் 16 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அதன் இறுதி இலக்கை அடைந்தது.
எதிர்பார்த்ததை விட அளவில் பெரியது
நாசாவின் வலைப்பதிவின்படி, அந்த தொலைநோக்கி நிறுவப்பட்டதிலிருந்து, குறைந்தது நான்கு வெவ்வேறு விண்வெளித் துகள்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் சிறியவை. நாசா எதிர்பார்த்த அளவிலேயே அதன் பாதிப்பும் இருந்தது.
விண்வெளித் துகள்கள் என்பது பொதுவாக ஒரு சிறுகோளின் ஒரு சிறிய துண்டு. பொதுவாக அது மண்துகள்களை விட சிறியதாகவே இருக்கும். இருப்பினும், மே மாதத்தில் JWST-ஐத் தாக்கியது, நாசா எதிர்பார்த்ததை விட அளவில் பெரியது. அது ஒரு மில்லிமீட்டருக்குச் சற்று குறைவான அளவிலிருந்தது. மே 23 - மே 25க்கு இடையில் நிகழ்ந்த அந்த மோதலினால், தொலைநோக்கியின் கண்ணாடிக்கு ஏற்பட்ட சேதத்தின் பாதிப்புகள் கண்டறியக்கூடிய அளவிலான விளைவுகளைக் கொண்டுள்ளன என நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி சூழல்
இந்த தொலைநோக்கி அதன் வாழ்நாளில் பல சிறிய விண்வெளித் துகள்களால் தாக்கப்படும் என்பது நாசா எதிர்பார்த்த ஒன்றே. விண்வெளி பாறையிலிருந்து வேகமாகச் சிதறும் துகள்கள் என்பது விண்வெளி சூழலின் தவிர்க்க முடியாத அம்சமாகும். இதனை எதிர்பார்த்தே, இந்த தொலைநோக்கியின் தங்கம் பூசப்பட்ட கண்ணாடிகள், சிறிய விண்வெளி துகள்களின் தாக்குதலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
விண்வெளி துகள்களின் தாக்கங்களைத் தாங்கும் வகையில் கண்ணாடிகளை எவ்வாறு சிறப்பாகப் பலப்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பதற்கு நாசா பல்வேறு உருவகப்படுத்துதல் பரிசோதனைகளை மேற்கொண்டு இருந்தது. ஆனால், அந்த பரிசோதனையில் இவ்வளவு பெரிய விண்வெளித்துகள் மாதிரியை நாசா பயன்படுத்தவில்லை.
இருப்பினும், நாசாவுக்கு இத்தகைய மோதல் முற்றிலும் ஆச்சரியமானது கிடையாது. கடுமையான புற ஊதா ஒளி, விண்மீன் மண்டலத்தில் உள்ள அயல்நாட்டு மூலங்களிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள், நமது சூரிய மண்டலத்தில் உள்ள விண்வெளி துகள்களால் அவ்வப்போது ஏற்படும் தாக்குதல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதே விண்வெளி சூழல் என்பது நாசா நன்கறிந்த ஒன்றே.
தவிர்க்க முடியாத தாக்குதல்
விண்வெளி துகள்களின் பொழிவு தெரிந்தால், அதன் தாக்குதலின் பாதையிலிருந்து இந்த தொலைநோக்கியை விலக்கிவைக்கும் திறன் நாசாவின் பொறியாளர்களுக்கு உண்டு. இங்கே பிரச்சனை என்னவென்றால், இந்த பெரிய விண்வெளித்துகள், விண்வெளித்துகள் பொழிவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அது ஒரு தனித்துவமான, தவிர்க்க முடியாத தாக்குதலாக இருந்தது.
இருப்பினும், வருங்காலத்தில் இந்த அளவிலான விண்வெளித்துகள் தாக்குதல்களின் விளைவுகளைத் தவிர்க்க அல்லது குறைக்கும் வழிகளைக் கண்டறிவதற்கு நாசா ஒரு பொறியியல் குழுவை உருவாக்கி உள்ளது. ஜேடபிள்யூஎஸ்டி மிகுந்த உணர்திறன் வாய்ந்த தொலைநோக்கி என்பதால், ஆழமான விண்வெளி சூழலில் எத்தனை விண்வெளித்துகள்கள் உள்ளன என்பதை நாசா நன்கு புரிந்துகொள்ள அது உதவும்.
கண்ணைக் கவரும் படங்கள்
விண்வெளித் துகள் மோதலுக்குப் பின்னரும் இந்த தொலைநோக்கியின் எதிர்காலம் குறித்து நாசா மிகுந்த நம்பிக்கையுடனே உள்ளது. அந்த தொலைநோக்கியின் செயல்திறன் எதிர்பார்த்த அளவை விடச் சிறப்பாகவும், அதன் செயல்பாடுகளை முற்றிலும் நிறைவேற்றும் திறனுடனும் இருப்பதாக நாசா தெரிவிக்கிறது.
கடந்த சில மாதங்களாக, இந்த தொலைநோக்கியின் கருவிகளை நன்றாக அளவீடு செய்து, அதன் கண்ணாடிகளை நேர்த்தியாகச் சீரமைக்கும் முயற்சியில் நாசாவின் விண்வெளி குழு ஈடுபட்டுள்ளது. JWSTஇலிருந்து முதல் முழு வண்ணப் படங்களை ஜூலை 12 அன்று நாசா வெளியிட உள்ளது. படங்கள் எப்படி இருக்கும் என்று நாசா தெரிவிக்கவில்லை. ஆனால், அவை நிச்சயம் கண்களையும் மனத்தையும் கவரும் விதமாக இருக்கும்.