முடிவுக்கு வருகிறதா திறன்பேசிகளின் காலம்?
சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நோக்கியா தலைமைச் செயல் அதிகாரி பெக்கா லண்ட்மார்க், புதிய தொழில்நுட்பங்களின் எழுச்சி காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் திறன்பேசி என்பதே யாரிடமும் இருக்காது என்று தெரிவித்தார். அவரின் கருத்து தற்போது உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
2030ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், அதன் திறனை முற்றிலும் பயன்படுத்தும் விதமான புதிய கண்டுபிடிப்பு ஒன்று பயன்பாட்டுக்கு வரும், அது திறன்பேசிகளைவிடப் பன்மடங்கு மேம்பட்டதாக இருக்கும் என்று அவர் அப்போது தெரிவித்தார். அந்தப் புதிய கண்டுபிடிப்பு இன்னும் 10 ஆண்டுகளில் நிகழ்ந்துவிடும்; அந்தக் கண்டுபிடிப்பு திறன்பேசியின் திறனையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதால், நமக்குத் திறன்பேசி என்கிற ஒன்றின் தேவை இல்லாமல் போய்விடும் என்பது அவருடைய கருத்து.
6ஜி சேவை
2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை வந்துவிடும் என்பதும், உலகின் பெரும்பாலான நாடுகளில் திறன்பேசி தொழில்நுட்பம் மாறிவிடும் என்றும் நோக்கியோ சி.இ.ஓ கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் அலைப்பேசியைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆனது. அந்த அலைப்பேசியும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆனது.
உலகில் பல நாடுகளில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. 5ஜி நெட்வொர்க்கை விரைவில் கொண்டு வர பல நாடுகள் இன்றும் முயன்று வருகின்றன. இந்தியாவில் 2ஜி, 3ஜி, 4ஜி என படிப்படியாக உயர்ந்து , 5ஜி சேவை சோதனை நிலையில் இருக்கிறது. இந்தியாவில் 5ஜி வருவதற்குள் உலகின் பல நாடுகளில் 6ஜி சேவை வந்துவிடும். அதன் காரணமாக அங்கே திறன்பேசி தொழில்நுட்பமும் இல்லாமல் போய்விடலாம் என்று தெரிகிறது.
மூளையில் சிப்
அந்த உரையில், திறன்பேசிகளை விட ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற முகத்தில் அணியும் சாதனங்களே வருங்காலத்தில் மக்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். 2030க்குப் பிறகு 6ஜி தொழில்நுட்பம் மூலம் முகத்தில் ஸ்மார்ட் கண்ணாடி உள்ளிட்ட கேட்ஜெட்களையே மக்கள் விரும்புவார்கள் என்று நோக்கியோ சி.இ.ஓ கூறியதைப் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்போது உடலில் அணியக்கூடிய பொருள்கள் மட்டுமின்றி மூளையின் சிப் பொருத்தும் காலமும் விரைவில் வந்துவிடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மூளைக்கு அருகில் சிப் பொருத்தி அந்த சிப்பைக் கணினி மூலம் செயல்பட வைக்கலாம் என்றும், இந்த சிப் மூளையிலிருந்து வரும் சிக்னல்களைப் பதிவுசெய்து தேவையான வேலைகளைச் செய்து விடும் என்றும் கூறப்படுகிறது. மூளையில் சிப் பொருத்தும் தொழில்நுட்பம் இன்று சோதனை முறையில் உள்ளது. இந்த தொழில்நுட்பங்கள் வருங்காலத்தில் பெரும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.
2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமர் தெரிவித்து இருக்கிறார். அதற்குள் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை அப்போது 7ஜி தொழில்நுட்பம் வந்திருக்கலாம் அல்லது அலைக்கற்றை தொழில்நுட்பமே இல்லாமல் போய் இருக்கலாம்.
