

கருந்துளைகள் நமது புடவியின் (பிரபஞ்சம்) பெரும் புதிர்கள். இவற்றின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவும் தப்ப முடியாது; ஒளிகூட வெளியேற முடியாது. அவற்றின் மீதான ஈர்ப்பு உலகெங்கும் இருக்கும் வானியலாளர்களையும் விட்டுவைக்கவில்லை.
வானியலாளர்களின் கவனம் கருந்துளைகளின் மீது அதிகம் குவிந்திருக்கின்றன. கருந்துளைகளைக் குறித்து தீவிர ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்கிற புதிருக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. இந்தப் புதிருக்கான விடையைத் தேடும் பயணத்தில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளித் தொலைநோக்கியான ஆஸ்ட்ரோசாட் மூலம் கருந்துளை பிறப்புகளை ஆய்வு செய்வதில் இந்திய விஞ்ஞானிகள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆஸ்ட்ரோசாட்
இந்தியாவின் அஸ்ட்ரோசாட் உலகின் உணர்திறன் மிகுந்த விண்வெளி தொலைநோக்கிகளில் ஒன்று. ஒரே நேரத்தில் புற ஊதா, ஒளியியல், ஊடுகதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் புடவியை ஆய்வு செய்யத் தேவைப்படும் ஐந்து முக்கியக் கருவிகள் இதில் உள்ளன. இந்த கருவிகளில் ஒன்றே CZTI. இதுவே கருந்துளைகளின் பிறப்பை ஐநூறாவது முறையாகக் கண்டுள்ளது. வானியல் ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய சாதனை. CZTI மூலம் பெறப்படும் தரவுகள் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
காமா கதிர் வெடிப்புகள்
காமா கதிர் வெடிப்புகளில் அகப்பட்டு மடியும் பாரிய நட்சத்திரங்களினாலும் கருந்துளைகள் உருவாக நேரிடும். பெரும் வெடிப்புகளையும், கருந்துளை உருவாக்கத்தையும் நன்கு புரிந்துகொள்ளும் பொருட்டு வானியலாளர்கள் காமா-கதிர்கள், ஊடுகதிர்கள் போன்ற வெடிப்புகளைத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர்.
காமா கதிர் வெடிப்புகள் ஆற்றல் மிகுந்தவையாக இருப்பதால், அவை சிறிய பெருவெடிப்புகள் (மினி பிக்-பேங்க்ஸ்) என அழைக்கப்படுகின்றன. இந்த காமா வெடிப்புகள் புடவி முழுவதும் ஒளியும் உயர் ஆற்றலும் நிறைந்த அடர்த்தியான கதிர்வீச்சை அனுப்பிவைக்கின்றன.
இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலின் மூலமும் காமா-கதிர் வெடிப்புகள் நிகழக்கூடும். இந்த நிகழ்வுகளும் ஆற்றல் வாய்ந்த ஈர்ப்பு அலைகளை உருவாக்கும். இந்த நிகழ்வுகளை எதிர்காலத்தில் இந்தியாவும் கண்டறியத் தொடங்கும்.
CZTIஇன் தனித்துவம்
ஊடுகதிர்களின் ஒளி முனைவாக்கத்தை அளவிடும் திறனைக் கொண்டிருப்பது CZTI இன் ஒரு தனித்துவமான அம்சம். நாசாவின் நீல் கெஹ்ரெல்ஸ் ஸ்விஃப்ட் தொலைநோக்கி, அமெரிக்கா-ஐரோப்பா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ஃபெர்மி விண்வெளி தொலைநோக்கி ஆகியவற்றால்கூட ஒளி முனைவாக்கத்தை அளவிடும் திறன் கிடையாது.
புதிதாக உருவாகும் கருந்துளைக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதை இந்த ஒளி முனைவாக்கமே தெரிவிக்கும். காமா-கதிர் வெடிப்புகளின் வெவ்வேறு கோட்பாடுகளை வேறுபடுத்துவதற்கான மிக முக்கியமான அளவீடு இது.
பெரும் புதிர்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு CZTI செயல்பாட்டுக்கு வந்தது. அப்போதிலிருந்து அது காமா கதிர்வெடிப்புகளைக் கூர்ந்து கவனித்துவருகிறது. அஸ்ட்ரோசாட் பயன்பாட்டுக்கு வந்த சில மணிநேரத்திலேயே அது GRB 151006A எனும் காமா கதிர்வெடிப்பைக் கண்டறிந்தது. CZTI இன் எண்ணற்ற காமா கதிர் வெடிப்பு ஆய்வுகள் உலகெங்கிலும் வெளியிடப்பட்டுள்ளன.
தேடல்களையும் கண்டறிதல் முறைகளையும் மேம்படுத்த இந்திய வானியலாளர்கள் குழு இடைவிடாது உழைத்து வருகிறது. அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கண்டறிதல்கள் நிகழ்ந்துவருகின்றன. அவர்கள் திரட்டும் தரவுகள் நூறு கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தோன்றிய சமிக்ஞையைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன.