Last Updated : 30 Apr, 2022 01:53 PM

 

Published : 30 Apr 2022 01:53 PM
Last Updated : 30 Apr 2022 01:53 PM

ஜிபிஎஸ் அமைப்புக்கு வலுசேர்க்கும் இஸ்ரோவின் ககன் தொழில்நுட்பம்

இஸ்ரோவின் ககன் தொழில்நுட்பம்

நவீனத் தொழில்நுட்பம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் ஜிபிஎஸ் (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) நம் அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கிறது. உணவு, உடை, கல்வி, வேலை உள்ளிட்டவற்றுக்காக நாம் மேற்கொள்ளும் பயணங்களை ஜிபிஎஸ் இன்று எளிதாக்கிவிட்டது. முக்கியமாக, தெரியாத இடங்களும் அறியாத முகங்களும் ஏற்படுத்தும் மிரட்சியை அது போக்கிவிட்டது.

இருப்பினும், ஜிபிஸ் சிக்னல்கள் எப்போதும் துல்லியமாக இருப்பது இல்லை. அயனி மண்டல குறுக்கீடு, நகரும் வாகனத்தின் இருப்பிடம், ஜிபிஎஸ் செயற்கைக்கோளின் செயல்பாடு, சிக்னலின் வலு, அதில் ஏற்படும் குறுக்கீடு போன்ற பல காரணிகள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. இது நம் நாட்டில் மட்டும் ஏற்படும் பாதிப்பல்ல; உலக நாடுகள் அனைத்திலும் இது ஏற்படுகிறது.

துல்லிய வழிகாட்டலுக்கு உதவும் SBAS

இந்தக் குறையைக் களையும்விதமாக இன்று பல முன்னேறிய நாடுகள் தங்களுக்கு எனப் பிரத்தியேகத் தீர்வுகளைக் கண்டுபிடித்து, வடிவமைத்து இருக்கின்றன. அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆக்மென்டேஷன் சிஸ்டம் (SBAS) எனும் தொழில்நுட்பமே அந்தத் தீர்வுகளுக்கு அடித்தளம். ஜிபிஎஸ் அமைப்பின் துல்லியத்தை மேம்படுத்த உதவும் அந்தத் தொழில்நுட்பமே இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அது ஜிபிஎஸ் அமைப்பின் தட வரைபடத்தைப் பெரிதாக்கி, அதன் சிக்னல்களைச் செறிவூட்டி, அதில் இருக்கும் பிழைகளைச் சரிசெய்கிறது. இத்தகைய மேம்படுத்தல் மூலம் ஜிபிஸ் பயனர்களுக்கும்நகரும் வாகனத்துக்கும் துல்லியமான வழிகாட்டலை எஸ்பிஏஎஸ் வழங்குகிறது. ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகள் தங்கள் நாட்டுக்கு எனப் பிரத்தியேகமாகவே எஸ்பிஏஎஸ் தொழில்நுட்பத்தை வடிவமைத்து, செயல்படுத்தி வருகின்றன.

இஸ்ரோவின் GAGAN

அந்த நாடுகளின் ஜிபிஎஸ் அமைப்பின் துல்லியத்தை எஸ்பிஏஎஸ் தொழில்நுட்பம் வெகுவாக மேம்படுத்தி இருக்கிறது. இந்த நாடுகளின் பட்டியலில்தான் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது. இந்தியாவின் இஸ்ரோ ஜிபிஎஸ் அமைப்பின் துல்லியத்தை மேம்படுத்தும் விதமாக, GAGAN (GPS Aided GEO Augmented Navigation) எனும் ஜிபிஎஸ் உதவியுடன் மேம்படுத்தப்படும் புவி வழிகாட்டல் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, செயல்படுத்தி இருக்கிறது.

விண்ணிலிருக்கும் செயற்கைக்கோள்களையும், இந்திய நிலத்திலிருக்கும் நிலையங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் 'ககன்' தொழில்நுட்பம், ஜிபிஎஸ் சிக்னல்களில் இருக்கும் பிழைகளை நிவர்த்திசெய்து, வழிகாட்டலின் துல்லியத்தை வெகுவாக உயர்த்துகிறது. இந்தத் தொழில்நுட்பம், இந்திய நிலப்பகுதியில் 15 நிலையங்களையும், ஒரு முதன்மை கட்டுப்பாட்டு மையத்தையும் கொண்டுள்ளது. விண்வெளி என்று எடுத்துக்கொண்டால், புவிசார் சுற்றுப்பாதையில் பயணிக்கும் மூன்று செயற்கைக்கோள்கள் (Gsat-8, Gsat-10, Gsat-15) இந்தத் தொழில்நுட்பத்தின் அங்கங்களாக இருக்கின்றன.

சிக்னலின் பிழை எவ்வாறு கண்டறியப்படுகிறது?

துல்லியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இந்த 15 தரை நிலையங்களையும், துல்லியமாக நிறுவப்பட்டிருக்கும் அவற்றின் ஜிபிஎஸ் இருப்பு நிலை புள்ளிகளையும் இந்த ககன் தொழில்நுட்பம் ஆதார ஒருங்கிணைப்புப் புள்ளிகளாக,குறிப்பு இடங்களாக எடுத்துக்கொள்கிறது. செயல்பாட்டின்போது, துல்லியமான ஜிபிஎஸ் பெறுநர்கள் பொருத்தப்பட்ட இந்த நிலையங்கள், ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களிலிருந்து அந்தந்த இருப்பிட புள்ளிகள் குறித்த தரவைத் தொடர்ந்து பெறுகின்றன. பின்னர், ஜிபிஎஸ் சிக்னல் மூலம் காட்டப்படும் இருப்பு நிலைப் புள்ளிகளும், ஆதார ஒருங்கிணைப்புப் புள்ளிகளும் ஒப்பிடப்படுகின்றன. இந்த இரண்டுக்கும் (ஜிபிஎஸ் சிக்னல், ஆதார ஒருங்கிணைப்புப் புள்ளி) இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், அவை பிழைகளாகக் கண்டறியப்படுகின்றன.

நம்பகமான வழிகாட்டல்

இந்த அமைப்பின் 15 தரை நிலையங்களும், அவற்றின் பிரத்தியேக சிக்னல்களை (வேறுபாடுகளை) முதன்மைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புகின்றன. அங்கே அந்த வேறுபாடுகள்,பிழைகள் சரிசெய்யப்படுகின்றன. இவ்வாறு பிழை நீக்கப்பட்ட ஜிபிஸ் சிக்னல்கள் மீண்டும் புவிசார் சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தின் அங்கங்களாக இருக்கும் மூன்று செயற்கைக்கோள்களிலும் GAGAN டிரான்ஸ்பாண்டர்கள் இருக்கின்றன. இவை தரையிலிருந்து பெறப்படும் திருத்தப்பட்ட சிக்னலை ஜிபிஎஸ் போன்ற வடிவத்தில் மீண்டும் தரைக்கே ஒளிபரப்புகின்றன. எஸ்பிஏஎஸ் ரிசீவர் பொருத்தப்பட்ட போக்குவரத்து வாகனங்களும், விமானங்களும் இந்தத் திருத்தப்பட்ட சிக்னலைப் பெறுவதன் மூலம் அவற்றுக்குத் துல்லியமான, நம்பகமான வழிகாட்டல் கிடைக்கிறது.

எளிய விளக்கம்

எளிதாக விளக்குவது என்றால், தரையில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் இடத்தின் ஜிபிஎஸ் இருப்பு நிலைப் புள்ளிகள் நிலையானவை; அவை மாறவும் கூடாது. அந்த இடத்தின் இருப்பு நிலைப் புள்ளிகள் குறித்த செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்படும் தரவுகளில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், அதற்கு அயனி மண்டலக் குறுக்கீடு போன்ற ஏதோ ஒரு புறக் காரணியே காரணமாக இருக்க வேண்டும்.

இங்கே நமக்கு GAGAN தரை நிலையங்களின் துல்லியமான இருப்புநிலைப் புள்ளிகள் ஏற்கெனவே தெரியும் என்பதால், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்படும் சிக்னல்களில் இருக்கும் வேறுபாட்டை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம். இந்த வேறுபாட்டின் அளவை முதன்மைக் கட்டுப்பாட்டு மையம் துல்லியமாகக் கணக்கீடு செய்து கண்டறிகிறது.

இந்த வேறுபாட்டு அளவைக் கொண்டே, செயற்கைக்கோள் வழியாக வாகனங்கள், விமானங்கள் போன்றவற்றின் இருப்பிட நிலை குறித்து செயற்கைக்கோள்கள் அளிக்கும் ஜிபிஎஸ் சிக்னல்களை முதன்மைக் கட்டுப்பாட்டு மையம் திருத்தி அமைக்கிறது. இதன் காரணமாக வாகன ஒட்டிகளுக்கும், விமானிகளுக்கும் துல்லியமான வழிகாட்டல் எளிதில் கிடைக்கிறது.

பாதுகாப்பை மேம்படுத்தும் GAGAN

GAGAN அமைப்புக்கு அமெரிக்காவின் WAAS, ஐரோப்பியாவின் EGNOS, ஜப்பானின் MSAS உள்ளிட்ட அனைத்து சர்வதேச SBAS அமைப்புகளிலும் இயங்கும் திறன் உண்டு என்பது அதன் கூடுதல் சிறப்பு. கடந்த வியாழன் அன்று ஒரு சோதனை முயற்சியாக, இஸ்ரோவின் GAGAN அமைப்பைப் பயன்படுத்தி, ராஜஸ்தானின் கிஷன்கர் விமானநிலையத்தில் தனது ஏடிஆர் 72-600 விமானத்தை இண்டிகோ விமான நிறுவனம் வெற்றிகரமாகத் தரையிறக்கியிருக்கிறது.

இந்நிலையில், ஜூலை 1, 2021க்குப் பிறகு இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து விமானங்களிலும் GAGAN அமைப்பு விரைவில் நிறுவப்பட வேண்டும் என்று இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டாளர் ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் GAGAN அமைப்பு முழுமையாக நிறுவப்பட்டால், அது இந்திய வான்வெளியை நவீனப்படுத்தும், விமான தாமதங்களைக் குறைக்கும், எரிபொருளைச் சேமிக்கும். முக்கியமாக, விமானப் பாதுகாப்பை அது மேம்படுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x