

இந்தியாவில் "இளைஞர்களிடையே இளம்வயதிலே விண்வெளி தொழில்நுட்பங்களில் ஆர்வத்தை உருவாக்கும் விதமாக 'யுவிகா' எனப்படும் இளம் விஞ்ஞானி திட்டம் செயல்படுகிறது. 'யுவிகா' என்பது 'யுவ விக்யானி கரியக்ரம்' என்பதன் சுருக்கம். ஜனவரி 18, 2019 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த விண்வெளி பயிற்சித் திட்டம், ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் இந்திய விண்வெளித் துறையின் நிதியுதவியுடன் இஸ்ரோவால் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக யுவிகா பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால், இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் இஸ்ரோவின் நான்கு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. அந்தப் பயிற்சி முகாம் மே 16இல் தொடங்கி முதல் மே 28இல் முடிவடையும். இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்குச் செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும், முக்கியமாக, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.
இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது. பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்.10-ம் தேதி இந்திய நேரம் மாலை நான்கு மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்.20-ம் தேதி வெளியிடப்படும்.
இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைப்பேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் தகவல்களுக்கு உங்கள் whatsapp எண்ணை 9481422237க்கு SMS அனுப்பினால், தகுந்த விளக்கங்கள் கிடைக்கும்.