

பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்புவரை பெரும்பாலான சீனர்களைப் போலவே, நானும் தமிழ் பற்றிக் கேள்விப்பட்டதுகூட இல்லை. இனிமையான தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டதன் மூலம், நீண்ட வரலாறும், வளமான பாரம்பரியமும் கொண்ட தமிழ்க் கலாச்சாரம் ஒரு அழகான படம் போல என் மனத்தில் பதியத் தொடங்கியது. அம்மொழியிலும் மொழி சார்ந்த பண்பாட்டிலும் மயங்காதவர்கள் யாரும் இல்லை என்னும்போது, நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
திருக்குறளை வாசிக்கும்போது பழந்தமிழ்ப் புலவர்களுடன் பேசினேன். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பெண் சக்தி கண்டு உருகினேன். கல்வித் திட்டம் வழியாகத் தமிழ்நாட்டின் ஈர்ப்பு மிக்க வளமான சுற்றுலா மற்றும் கலாச்சாரங்களைக் கற்றுக்கொண்டேன். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், சீனாவின் தென்கிழக்குக் கடற்கரையில் நான் மேற்கொண்ட ஆய்வில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிற்கு வணிகத்திற்காக வந்த தமிழர்கள் விட்டுச்சென்ற கல்வெட்டுகளைத் தனிப்பட்ட முறையில் பார்த்து ரசித்தேன்.
சீனாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான அற்புதமான, தொட்டுணரக்கூடிய கலாச்சாரப் பரிமாற்றத்தின் கதை சீனாவில் கிட்டத்தட்ட அறியப்படவில்லை. தென்னிந்தியக் கைவினைஞர்கள் ஏன் கடல் கடந்து சீனாவுக்குப் பயணம் செய்தனர்? அவர்களுடன் யார் யார் பயணித்தார்கள்? அவர்கள் எங்கே நிலைகொண்டார்கள்? அண்டை நாட்டுக்காரர்களான சீனர்களும் அவர்களும் எவ்வாறு பழகினார்கள்? சீனாவில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை யார் உருவாக்கினார்கள்? இவை போன்ற பல கேள்விகள் எனக்குள் எழுவது உண்டு.
சீனாவில் உள்ள தமிழ்க் கல்வெட்டு எழுத்துகளை உற்றுப் பார்க்கும்போது அதன் மீதான ஆர்வம் பெரிதும் தூண்டப்பட்டது. அதன்பின்பு அக்கல்வெட்டு எனது எதிர்கால ஆராய்ச்சி திசைக்கு மிகுந்த உந்து சக்தியாக மாறியது. அப்போது முதல் நான் ஒரு கதைசொல்லியாக இருக்க விரும்பினேன். சீன -தென்னிந்தியப் பரிமாற்றங்கள் குறித்த வரலாற்றைப் பொதுமக்களுக்கு வழங்கச் சொந்த முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்.
தென்னிந்தியாவின் வரலாறும் கலாச்சாரமும் பற்றிய ஆய்வு சீனாவில் கிட்டத்தட்ட உழப்படாத நிலம் போன்று தொடப்படாத புள்ளியாகும். தமிழ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக, சீனாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமான சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் தொடர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை வெற்றிகரமாகப் பெற்றேன். எனது அரிய தமிழ் மொழி கற்றல் அனுபவம், நான் வராலற்றுத் துறையில் சேர்வதற்கான மிகப்பெரிய அனுகூலமாக இருந்தது. தற்போது சீனாவில் தமிழ் குறித்த ஆராய்ச்சியானது வேரோடத் தொடங்கி நல்ல தொடக்க நிலையை அடைந்துள்ளது.
இருநாட்டிற்கும் இடையே தவறான புரிதல்களும் சச்சரவுகளும் இருக்கின்றன என்றாலும், அவற்றையெல்லாம் தாண்டி, நான் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி ஒரு நல்ல கதைசொல்லியாகச் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்பார்ந்த பரிமாற்றங்களுக்குப் பங்களிப்புகளைச் செய்ய முடியும் என உறுதியாக நம்புகின்றேன். “ஒரு மனிதன் புரிந்துகொள்ளும் மொழியில் பேசினால் அது அவன் மூளையைச் சென்றடையும். அதுவே, அவன் தாய்மொழியில் பேசினால் அது, அவன் இதயத்தைச் சென்றடையும்” என்றார் நெல்சன் மண்டேலா. எனது மூன்றாண்டு கால தமிழ் கற்றல் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் அதை முழுமையாக உணர்கின்றேன்.
கட்டுரையாளர்: சாங் லின் (Zhang Lin),
பெய்ஜிங் அயல்மொழி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்.