Last Updated : 11 May, 2021 03:11 AM

Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

அறிவுக்கு ஆயிரம் கண்கள் 4: பொரியும் பாப்கார்னும் விரியும் தாவர ராஜ்ஜியமும்

இஸ்ரேலில் வெள்ளியும் சனியும்தான் வார விடுமுறை. நம்மூரில் விடுமுறை நாள்களில் எங்கெங்கும் கூட்டமிருக்கும். இங்கே அப்படியே நேர்மாறாக இருக்கும். விடுமுறை நாள்கள், ஊரடங்கு நாள்களைப் போல் வெறிச்சோடிக் கிடக்கும். அதனால், வியாழன் அன்று வேலை முடிந்ததும், இரவு திரையரங்குக்குப் போய்விடுவோம். ஆனால், மூடிய அறைகளில் கரோனா அதிகம் பரவும் என்பதால், 2020 மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. இவ்வளவுக்கும் இங்கே அறுபது சதவீத மக்களுக்குத் தடுப்பூசி போட்டாகிவிட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், முன்னெச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார்கள். திரையரங்கு டிக்கெட் விலையும் மிகவும் குறைவு. இரண்டு டிக்கெட் வாங்கினால் பாப்கார்ன் இலவசம். நம்மூரில் பெரிய திரையரங்குகளில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு படம் பார்ப்பதற்குத் தனியாக ஒரு டிக்கெட் கட்டண அளவுக்காவது செலவு செய்தாக வேண்டும்.

குழந்தைத்தன ஆர்வம்

பாப்கார்னைக் குவித்து வைத்திருப்பது, அது பொரியும் சத்தம் ஆகியவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும், நம் கைக்கு எப்போது வந்துசேரும் என்று ஆவலுடன் காத்திருப்பது குழந்தைத்தனமான சுகம். குட்டிக் குட்டிச் சோளமுத்துக்களில் இருந்து பாப்கார்ன் எப்படிக் கிடைக்கிறது? சோள முத்து என்பது சோளத்தின் விதை. ஒரு விதை என்றால், அடுத்த நாற்று வளர்வதற்கான முளையையும் அது தாங்கியிருக்கும். அப்புறம் முளைக்குத் தேவையான உணவு இருக்க வேண்டும். சோள முத்திலும் அப்படித்தான் இருக்கும்.

நுனியில் நாற்றுக்கான முளை இருக்கும், அதற்கடுத்து ஸ்டார்ச் என்று சொல்லப்படும் மாவுப்பொருள் இருக்கும். அதற்குப் பின்புறம், ஈரப்பதம் இருக்கும். இவை அனைத்தையும் ஒரு கடினமான தோல் மூடியிருக்கும். சோள முத்துக்களைச் சூடேற்றும்போது, உள்ளே இருக்கும் நீர் ஆவியாவதால், அழுத்தம் உண்டாகித் தோல் வெடிக்கும். அந்தச் சூட்டில் மாவுப்பொருள் உருகிவிடும். ஆனால், அடுத்த விநாடிக்குள் உருகிய நிலையிலிருந்து அது கடினமாகிவிடும். பொங்கி வரும் நுரையைச் சட்டென்று உறைய வைத்தால் எப்படி இருக்கும், அதுபோல.

அதனால், நமக்குப் பூப்போன்ற பாப்கார்ன் கிடைக்கிறது. நம் ஊரில் பொரிக்காத சோள முத்துக்களைத் தனியாக ஒரு பொட்டலம் போட்டு பாப்கார்ன் கடைக்காரர் விற்பார். அதில் அதிக உப்பும் காரமும் இருப்பதால், அவற்றை வாங்கத் தனிக்கூட்டமே இருக்கும்.

பாப்கார்ன் பூமழை

சரி, ஏன் எல்லாச் சோள முத்துகளும் பொரிவதில்லை? சூடு போதாமல் இருக்கலாம். அதனால்தான் பொரியவில்லை என்று நினைப்பேன். ஆனால், அப்படியில்லை. சோள முத்துக்களில் போதிய அளவு ஈரப்பதம் இல்லையென்றால், வெடித்துச் சிதறுவதற்கேற்ற அழுத்தத்தைக் கொடுக்குமளவுக்கு நீராவி உருவாகாதாம். அதனால்தான் இப்போதெல்லாம், சரியான ஈரப்பதம் கொண்ட சோள விதைகளை மிகுந்த கவனத்துடன் பதப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு முறை பாப்கார்ன் கடை முன்பு நிற்கும்போதும், நான் பெரிதும் பார்த்து ரசிப்பது, அவை பொரிந்து பூமழை போல் கொட்டுவதைத்தான். இதற்குக் காரணம், பொரிந்த பாப்கார்ன் நேரடியாக தரையில் தொம்மென்று விழுந்துவிடாது. ஒரு சுழற்பந்துபோல, பலமுறை சுழன்று சுழன்று சிதறும்.

இயற்கையில் தாத்தா பூ உள்ளிட்ட பல வகைத் தாவரங்கள் இதே வகையில் தங்கள் விதைகளைப் பரப்புகின்றன. தாவரங்களில் இருக்கும் காய்களுக்குள் விதையிருக்கும். தோதான தட்பவெப்பம் உருவாகும்போது, காய் வெடித்து, விதைகள் சுழன்று வெளியே தெறித்து விழும். இதனால், அதிகத் தொலைவுக்கு அந்தத் தாவரங்கள் விதைகளைப் பரப்ப முடிகிறது. இப்படியாகத் தாவரங்களும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துகின்றன.

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x