

அறிவியல் தமிழ் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலருடைய கனவாக இருந்தாலும், அந்த திசைநோக்கி உழைத்தவர்கள், தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தியவர்கள் குறைவு. அந்த வழியில் பயணித்துவந்த இராம. சுந்தரம் (83) மார்ச் 8 அன்று காலமானார்.
அடிப்படையில் மொழியியல் அறிஞரான இராம. சுந்தரம் தமிழறிஞர்கள் மா. இராச மாணிக்கனார், ஔவை துரைசாமிப் பிள்ளை, ஏ.சி. செட்டியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், வ.அய். சுப்ரமணியம் உள்ளிட்டோரிடம் பயின்றவர். வ.அய்.சுப்ரமணியத்தின் வழிகாட்டலில் தமிழை வளர்க்கும் பணியில் பலர் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இராம. சுந்தரம்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக வ.அய்.சுப்பிரமணியம் செயல்பட்டபோது, ஒவ்வொரு துறைக்கும் திறமையாளர்களைத் தேடிப்பிடித்துப் பணியில் அமர்த்தினார். அந்த வகையில் பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் பொறுப்பை இராம. சுந்தரத்திடம் வழங்கினார். முதல் இரண்டாண்டுப் பாடநூல்களை ஒருங்கி ணைத்து இராம. சுந்தரம் தயாரித்திருந்தபோதும், அவை நடைமுறைப் பயன்பாட்டுக்கு வரவில்லை.
நீண்ட மரபு கொண்ட மொழியால், எதையும் வெளிப்படுத்தவும் சொல்லவும் முடியும் என்கிற கருத்தைக் கொண்டவர். இடதுசாரிச் சிந்தனை கொண்ட அவர், மார்க்சிய ஆய்வு நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.
புத்தகங்கள், மொழியாக்கங்கள்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறை, அறிவியல் தமிழ்த் துறை ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகத் தலைவராகவும் இராம.சுந்தரம் செயல்பட்டிருக்கிறார்.
போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். அந்தக் காலத்தில் போலிஷ் மொழியில் புலமை பெற்று, திருக்குறளை அந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார். பிரான்சிஸ் ஒயிட் எல்லீசின் தமிழ்ப் பணி குறித்து அமெரிக்கப் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன் ஆங்கிலத்தில் எழுதிய நூலை ‘திராவிடச் சான்று’ (காலச்சுவடு – சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன வெளியீடு) என்கிற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய குறிப்பிடத்தக்க பணியாக இது கருதப்படுகிறது.
சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ‘எஸ். வையாபுரிப் பிள்ளை‘ நூல், நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் ‘மூலிகைகள்’ (மொழிபெயர்ப்பு), ‘தமிழ் வளர்க்கும் அறிவியல்’ (என்.சி.பி.எச். வெளியீடு) உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவருடைய பெரும்பாலான அறிவியல் நூல்களைத் தமிழ்ப் பல்கலைக்கழகமே வெளியிட்டுள்ளது. ‘தமிழக அறிவியல் வரலாறு’, ‘உடல் நலம்’, ‘பாலூட்டிகள்’ ஆகியவை அவர் எழுதிய-மொழிபெயர்த்த குறிப்பிடத்தக்க நூல்கள். அறிவியல் தமிழ் வெளியீடுகள் (நூலடைவு) என்கிற நூல், அது வெளியான காலம் வரையிலான அறிவியல் நூல்களின் தொகுப்பாக வெளியானது.
இவற்றைத் தவிர ‘இயற்பியல்-வேதியியல்-கணிதவியல் கலைச்சொற்கள்’, ‘பொறியியல்-தொழில்நுட்பவியல் கலைச்சொற்கள்’, ‘வேளாண்மையியல்-மண்ணியல் கலைச் சொற்கள்’ என அறிவியல் தமிழை வளர்க்கும் நோக்கில் கலைச்சொல் தொகுதிகள் உட்பட 35-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பாசிரியராகப் பதிப்பித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தொகுத்த அறிவியல் களஞ்சியத்திலும் பணியாற்றியுள்ளார்.
தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும் என்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த அவருடைய பணியைப் போற்றுவதுடன், அவர் பணியைத் தொடர வேண்டிய கடமையும் இந்தத் தலைமுறைக்கு இருக்கிறது.